நவரசா ~ இன்மை

நவரசா ~ இன்மை

திரை விமர்சனம் நவரசா இணையத் தொடரில் முத்தாய்ப்பாக அமைந்து, ‘பயம்’ எனும் ரசத்தைப் பிரதிபலிக்கும் ஒரு முழுமையான திரை வடிவமாகத் திகழும் படம்தான், ரவீந்திரன் ஆர் பிரசாத் எழுதி இயக்கியுள்ள ‘இன்மை’. இஸ்லாமிய கதைப் பின்னணி. என்றாலும், எந்த மதப் பின்னணிக்கும் பொருந்துகின்ற கதைதான். ஒரு செல்வந்த மரைக்காயரின் (ஷிமூர் ரூஸ்வெல்ட்) சொத்துகளை அடையும் பொருட்டுத் திட்டமிட்டு,  இளம்பெண் வஹிதா (முற்பகுதியில் அம்மு அபிராமி பிறகு, பார்வதி திருவோத்து) மூளைக் கட்டியுடன் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் உள்ள ஒருவரை, காதலன் அன்வரின் (பாவெல் நவகீதன்) நிர்பந்தத்தால் மணந்து கொள்கிறாள். எதிர்பார்த்தபடி மரணம் அவரை நெருங்காத நிலையில், உசைன் ஹோஜா (ராஜேஷ் பாலச்சந்திரன்) என்கிற, ‘ஜின்’னை (குட்டிச்சாத்தான்) ஏவும் ஒரு மந்திரவாதியின் உதவியை நாடுகின்றனர்.  அதன் பிறகு, தற்போது புதுச்சேரியில் புத்துணர்வு பெற்று மலரும் வஹிதாவின் வாழ்க்கையில், ஃபாரூக் (சித்தார்த்) வர, அடுத்தடுத்து நிகழும் சம்பவங்கள்தான் ‘இன்மை’ படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை. பிளாஷ்பேக்கில் கதை சொல்வது என்பது புதிதில்லை என்றாலும், நிகழ்கால சம்பவ ஓட்டத்திற்கு  இடையூறு இல்லாமல், சுவாரஸ்யம் கெடாமல் முடிச்சுகளை ஒவ்வொரு கட்டமாக அவிழ்த்து, கதைக்குள் இறுதிவரை ரசிகர்களை ஈர்த்து உட்கார வைத்துவிடும் இயக்குனரின் உத்தியும், சாமர்த்தியமும் அசாதாரணமானது, அசத்தலுமானது. காலிக்ராபி, டீ கப் பயன்பாடு, ப்ளேசிபா எபெக்ட் போன்றவற்றைப் பொருத்தமாகக் கதையில் இடம்பெறச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. படத்தின் ஆதார ஸ்ருதியே திரைக்கதையும் நடிப்பில் பார்வதி திருவோத்து, சித்தார்த்தின் அற்புதமான பங்களிப்பும்தான். வசனங்கள்,  காட்சிகள் யாவும் கனகச்சிதம்.  ஃபாருக்கை வஹிதா புரிந்துகொண்ட விதத்தில், பயத்தில் உறைந்து, அவனிடம் பேசும், கெஞ்சும், ஏன் கதறும் ஒவ்வொரு பிரேமிலும் படு அசத்தலான நடிப்பை வழங்கியுள்ளார் பார்வதி திருவோத்து. அலட்டலில்லாத அழுத்தமான முகபாவங்களை வெளிப்படுத்தி உள்ளார், சித்தார்த். மரைக்காயருக்கு அடுத்துப் பயம் வஹிதாவுக்குத்தானே தவிர, ரசிகர்களுக்கு இல்லாத நிலையில், ஃபாரூக் அவள் பேசப் பேச மந்திர உச்சாடனம் செய்வதுபோல முணுமுணுப்பது, ஏனோ? முற்பகுதியில் உள்ள முகமது ஃபாருக் ஜாபராகவும் பிற்பகுதியில் வஹிதா முன் நிற்கும் ஃபாருக்காகவும் சித்தார்த்தே இருக்கும் போதும்,  மிக நீண்ட கால இடைவெளி இல்லாத நிலையிலும் வஹிதாவிற்கு மட்டும் இரு வேறு நடிகைகள் ஏனோ? போகட்டும், உருவத்தில் ‘கண்டினியூட்டி’யே அவசியம் இல்லாத நிலையில், அம்மு அபிராமிக்கும் பார்வதிக்கும் இடது கண் புருவத்தில் சிறுவெட்டு ஏனோ? விராஜ் சிங் கோஹில்லின் கண்ணைப் பறிக்கும் ஒளிப்பதிவும் விஷால் பரத்வாஜின் மனதை ஈர்க்கும் இசையும் ஆனந்த் ஜெரால்டின் நறுக்குத் தெரித்தாற்போல் அமைந்த படத்தொகுப்பும் ஏ. ஆர். மோகனின் அழகுற அமைந்த கலை இயக்கமும் இயக்குனர் ரவீந்திரன் ஆர். பிரசாத்தின் பக்கபலம். வெறும் 30 நிமிடங்களே ஓடும் இக்கதை, முழுநீளத் திரைப்படமாக விரிந்திருக்க வாய்ப்புள்ளது. என்றாலும், நிர்ணயித்த வரம்புக்குள் அர்ப்பணிப்பு உணர்வுடன், தொழில் பயத்துடன் அல்ல, அக்கறையுடன் நிறைவாகத் தந்துள்ள ‘இன்மை’ குழுவினர் பாராட்டுக்குரியவர்களே. மதிப்பெண் : 8/10 விமர்சனம்: மது ராஜேந்திரன் படங்கள்: இணையத்திலிருந்து

மிமி (Mimi)

மிமி (Mimi)

திரை விமர்சனம் மராத்தி மொழியில் வந்த ‘மாலா ஆயி வஹச்சே’ திரைப்படத்தின் மறுஆக்கம்தான், ரோஹன் சங்கருடன் இணைந்து எழுதி, லக்ஷ்மன் உடேக்கர் இயக்கி, க்ருத்தி சனன்,  பங்கஜ் திரிபாதியுடன் முதன்மைப் பாத்திரத்தில் நடித்து,  நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள ஹிந்தித் திரைப்படம் ‘மிமி’. ராஜஸ்தான் மாநிலத்தின் சிறுநகரில், பானுபிரதாப் பாண்டே (பங்கஜ் திரிபாதி) ஓட்டும் வாடகைக் காரில் பயணிக்கும், ஜான் (ஹைடன் வைட்டக்) சம்மர் (ஏவலின் எட்வர்ட்) அமெரிக்கத் தம்பதிகளின் பேச்சினூடே அவர்களின் தேவையைத் தெரிந்து கொண்ட பின்பு, நாட்டியக்காரி மிமி ரத்தோரை (க்ருத்தி சனன்) சந்தித்து, பல முயற்சிகளில் பேசி அவளை, அதற்கு இணங்க வைக்கிறான். மும்பை சென்று நடிகையாகும் லட்சியக் கனவில் இருக்கும் மிமியும், அதற்கு ஒப்புக் கொள்கிறாள். குழந்தையில்லாத அமெரிக்கத் தம்பதிக்கு அவள் ‘வாடகைத் தாயாக’ இருந்து, குழந்தை பெற்றுத் தர வேண்டும். குழந்தைப் பேறுக்குப் பிறகு, அவளுக்கு அவர்கள் இருபது லட்ச ரூபாய் தருவதாக ஒப்பந்தம். பானுவுக்கும் கணிசமாகப் பணம் கிடைக்கும். மிமியின் சினேகிதி ஷாமா (சாய் தமான்கர்) ஆதரவுடன் மருத்துவப் பரிசோதனையும், தொடர்ந்து சிகிச்சையும் ஆரம்பிக்கிறது. டாக்டர் ஆஷா தேசாய் (ஜெயா பட்டாச்சாரியா) மிமி கருவுற்றதை உறுதி செய்ய, அனைவருக்கும் மகிழ்ச்சி. தவணைகளில் அவளுக்குப் பணத்தைத் தருவதாக ஒப்புக்கொண்ட தம்பதியர், முதல் தவணையை அவளுக்கும், உடனிருந்து பார்த்துக் கொள்ள பாண்டேவுக்குக் கொஞ்சம் பணமும் தருகின்றனர். இந்த விவகாரம், மிமியின் அப்பா மான்சிங் ரத்தோர் (மனோஜ் பாவா) அம்மா ஷோபா ரத்தோர் (சுப்ரியா பதக்) இருவருக்கும் தெரியாது. படத்தில் நடிக்க மும்பை செல்வதாகக் கூறிவிட்டு, ஷாமாவின் வீட்டிற்குச் சென்று தங்குகிறாள் மிமி. கரு வளர ஆரம்பிக்கிறது. ஓட்டலில் தங்கியிருந்த தம்பதியர் அவ்வப்போது வந்து,  அவளை சிகிச்சை எடுக்கும் மருத்துவரிடம் பரிசோதனைக்காக அழைத்துச் சென்று காட்டுகின்றனர். அப்படி ஒரு முறை சென்றபோது, அவளைப் பரிசோதித்த டாக்டர் ஆஷா சொன்னதைக் கேட்டு, அனைவருமே அதிர்ச்சி அடைகின்றனர். கலங்கி நின்ற மிமி, அடுத்து அமெரிக்கத் தம்பதியர் சொன்னதைக் கேட்டுத் துடிதுடித்துப் போகிறாள். பாண்டேவும், ஷாமாவும் திக்பிரமையாகி நிற்கின்றனர்.  இதன் பின்னர், மிமி குழந்தை பெற்றாளா, அவளது நடிகையாகும் கனவு நிறைவேறியதா, மிமியின் பெற்றோர்கள் அதை அறிந்தார்களா, பானுபிரதாப்  பாண்டேவின் நிலை, ஷாமாவின் ஆதரவு தொடர்ந்ததா என்கிற கேள்விகளுக்கெல்லாம், விறுவிறுப்பும் சுவாரசியமான விடைகள்தான் ‘மிமி’ படத்தின் பிற்பகுதி. ஆட்டமும் பாட்டமுமாக மும்பை திரைப்பட நடிகையாகும் இலட்சியக் கனவுடன் மிமி, கருவுற்று தாய்க்குரிய  அனுபவத்தைப் பெறும் மினி, டாக்டர் ஆஷாவும் தொடர்ந்து அமெரிக்கத் தம்பதியரும் சொன்னதைக் கேட்டுத் துடித்துத் துவளும் மிமி, பின்னர் எதிர்பாராத திருப்பத்தால், பேரலையில் இருந்து தப்பிப் பிழைத்துக் கரைசேரும் நிம்மதியும், நெகிழ்ச்சியுமான மிமி, நான்காண்டுகளுக்குப் பிறகு தன்னைச் சந்திக்கும் அமெரிக்கத் தம்பதியரிடம் வெடித்துச் சீறும் மிமி என்று, நடிப்பில் பன்முகத் தன்மையுடன் மிளிர்கிறார், க்ருத்தி சனன். ‘இருதலைக் கொள்ளி’ பானுபிரதாப் பாண்டேவாக, பங்கஜ் திரிபாதி அட்டகாசமாக நடித்து அசத்தியுள்ளார். தோழி சாய் தமன்கர், பெற்றோர் மனோஜ் பாவா, சுப்ரியா பதக், அமெரிக்கத் தம்பதியர் ஹைடன் வைட்டக், ஏவலின் எட்வர்ட், தத்தம் பங்கை நிறைவாகச் செய்துள்ளனர். படத்தின் முதல் காட்சியாக விரியும் ஷ்ரேயா கோஷல் பாடிய ‘பரம் பரம்  பரமசுந்தரி’ தாளமிட்டு ஆட உந்தித் தள்ளுகிறது, ஏ ஆர் ரகுமானின் அட்டகாசமான இசை, கண்கவர்  ஒளிப்பதிவு ஆகாஷ் அகர்வால். மணிஷ் பிரதான் படத்தொகுப்பு. படத்தின் பின்பகுதியில் சற்று அயர்ச்சியைத் தரும் தொய்வைச் சரி செய்திருக்கலாம். முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவப் பரிசோதனையில், இவ்விதமான தவறு ஏற்பட வாய்ப்பு இருக்குமா என்பதும், வாடகைத் தாய் ஒப்பந்தத்தில் எதிர்பாராதவை நிகழ்ந்தால், அதை எதிர்கொள்ளும் விதம் குறித்துக் குறிப்பிடப்படாமல் போவதும், திரைப்படமாக இருந்தாலும்கூட ஏற்கும்படியாக இல்லை. என்றாலும், உணர்வுபூர்வமான இக்குடும்பச் சித்திரத்தில் க்ருத்தி சனன், பங்கஜ் திரிபாதியின் நேர்த்தியான பங்களிப்பிற்காக ‘மிமி’யை அவசியம் பார்க்கலாம். மதிப்பெண் : 8/10 விமர்சனம்: மது ராஜேந்திரன்

மாலிக் – விமர்சனம்

மாலிக் – விமர்சனம்

திரை விமர்சனம் சமூகத்தில் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. ஒன்று சட்ட நீதி, மற்றொன்று நியாய தர்மம். ஒவ்வொன்றும் அதனதன் போக்கில் அவற்றின் செயல்களுக்கான நியாயத்தைக் கற்பித்துக் கொள்கின்றன. இரண்டு பக்கங்களிலும் தவறுகள் இருக்கின்றன. அதில் மன்னிக்க முடியாத தவறு, பாதுகாக்க வேண்டிய அரசே மக்களைப் பகடைக் காய்களாக ஆக்கி, தாம் ஏற்படுத்திய சட்ட நடைமுறைகளைக்கூட அலட்சியம் செய்து, முன்னெடுக்கும் அரச பயங்கரவாதம்தான். இதனை உள்வாங்கிக் கொண்டு பார்த்தால், மகேஷ் நாராயணன் எழுதி இயக்கி, பகத் பாசில் (அகமது அலி சுலைமான்) நிமிஷா சஜயன் (ரோசலின்), வினய் போர்ட் (டேவிட் கிறிஸ்துதாஸ்), திலீஷ் போத்தன் (அபுபக்கர்), ஜோஜூ ஜார்ஜ் (அன்வர் அலி), ஜலஜா (ஜமீலா), இந்திரன்ஸ் (ஜார்ஜ் சக்காரியா), சனால் அமன் (ப்ரெட்டி) பிரதான பாத்திரங்களில் சிறப்புற நடித்து, அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ள ‘மாலிக்’ திரைப்படத்தின் நியாய அநியாயங்கள் தெளிவாகும். ரமதப்பள்ளி இஸ்லாமியர்களும் எடவத்துரா கிறிஸ்தவர்களும் மத பேதமின்றி வாழும் கேரள கடற்கரைக் கிராமம். மத நல்லிணக்கத்தின் உச்சம்தான் சுலைமான் ரோசலின் காதலும் எதிர்ப்பு இல்லாத திருமணமும். அந்தக் கடலோரக் கிராமத்தின்மீது, துறைமுகம் இணைப்புச் சாலை அமைக்கவிருக்கும் அரசுக்கும் அதில் ஆதாயம் தேட முனையும் அரசியல்வாதிக்கும் ஒரு கண். மண்ணின் மைந்தராகச் சுலைமான், அத்திட்டத்திற்கு எதிராக இருக்க, அவனைத் தங்களின் பாதுகாவலனாகக் கருதும் அந்த கிராமத்தின் ரமதப்பள்ளிப் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்களும் எடவத்துரா பகுதியைச் சேர்ந்த கிறித்தவர்களும் அவனுடன் அணியமாகி நிற்கின்றனர். இதற்கிடையில், ஒரு கொலை வழக்கில் சுலைமான் சிக்குகிறான். அந்தப் பகுதியின் உதவி ஆட்சியர் அன்வர் அலி, அவனைக் காவல்துறையில் சரண்டர் ஆகும்படி வற்புறுத்த, அவன் மறுக்கிறான். பல விதங்களில் காவல்துறையும் அவனை நெருக்குகிறது. இறுதியில் சுலைமான் கைது செய்யப்பட்டனா இல்லையா என்பதுதான் பற்பல சம்பவங்களை உள்ளடக்கிய ‘மாலிக்’ திரைப்படத்தின் கதை. 2009 ஆம் ஆண்டில் கேரளாவில் நடந்த பீமப்பள்ளி காவல்துறைத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தில், பகத் பாசில் பல்வேறு பரிமாணங்களில் அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார். பிரதான பாத்திரங்களைத் தாண்டி, துணைப் பாத்திரங்களை ஏற்ற அத்தனை கலைஞர்களும் அளவான அழகான பங்களிப்பை வழங்கவே செய்துள்ளனர். மலையாளப்படக் கலைஞர்கள் ஏற்றுக்கொண்ட பாத்திரத்திற்கு நேர்மையான பங்களிப்பைத் தரவேண்டும் என்பதைத் தவிர்த்து எந்தவிதமான தன்முனைப்போ, ரசிகர்களின் முன்னிலையில் தங்களது பிம்பம் பாதிக்கப்படும் என்கிற உணர்வோ இன்றி, செயல்படும் பாங்கு வெகுவாகப் பாராட்டுக்குரியது. பகத் பாசில், சுலைமான் பாத்திரமேற்று இருப்பதும், நிமிஷா சஜயன் வயதான தோற்றத்தில் நடித்திருப்பதும், இதன் அடிப்படையில்தான். இசையும் (சுஷின் ஷான்) ஒளிப்பதிவும் (ஷானு வர்கீஸ்) படத்திற்கு உறுதுணை. படத்தொகுப்பை இயக்குனரே கவனித்துள்ளார். கதை முழுவதும் பிளாஷ்பேக்கில் சில பாத்திரங்கள் வாயிலாக சொல்லப்படுவதால், அதைப் பின்தொடர்வது சற்றுச் சிரமமாகவும் இருக்கிறது. உன்னிப்பாக கவனிக்கவில்லை என்றால், போதிய அவகாசம் இன்றி, காட்சிகளும் மனதில் பதியும் முன்பே சடுதியில் கடந்து போய் விடுகின்றன. குறிப்பாக, எதிர்பாராத கிளைமாக்ஸ். ரோசலினை மணக்க விரும்பும் சுலைமான், ‘நீ உன் நம்பிக்கையிலேயே இருக்கலாம்’ என்று கூறிவிட்டு, வரும் வாரிசு ஆணாக இருந்தால் அமீர் என்று பெயர் வைத்து, ஒரு இஸ்லாமியனாக வளர்க்க வேண்டும் என்று கூறுவதும், தனது தங்கையையே மறுப்பேதும் இல்லாமல் சுலைமானுக்கு மணமுடிக்க சம்மதித்த டேவிட், பேப்டிஸம் நிகழ்வில் குறுக்கிட்டு ஆட்சேபித்து, அந்தக் குழந்தையுடன் மனைவியையும் அழைத்துச் சென்றுவிடுவதை அடுத்து, அவன் மீது வன்மம் பாராட்டுவதும் உள்ளார்ந்த மத உணர்விலிருந்து அவர்கள் விடுபடவில்லை என்பதையே காட்டுகிறது. குழந்தை பற்றிச் சுலைமானிடம் ஏற்கனவே சொல்லி இருந்தும், அவள் அதை டேவிட்டிடம் சொல்லாமல் போனது ஏனோ? ஒன்றரை மணி நேர அளவிலேயே நேர்த்தியான படங்கள் வந்து கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், ஏறக்குறைய இரண்டே முக்கால் மணி நேரம் ஓடும் மாலிக், நீளம் காரணமாக சோர்வு தருவதைத் தவிர்த்திருந்தால் இன்னும் ரசித்திருந்திருக்க முடியும். மதிப்பெண்: 7.5/10 விமர்சனம்: மது ராஜேந்திரன்

சாரா’ஸ் (Sara’s)

சாரா’ஸ் (Sara’s)

திரை விமர்சனம் ‘ஏன் இன்னும் திருமணம் ஆகவில்லை?  ஏன் இன்னும் குழந்தைப் பேறு இல்லை?’  என்று கேட்கும் பழக்கம், இன்றும் தொடரவே செய்கிறது. இல்லாததற்குப் பல காரணங்கள் இருக்கலாம். அவர்களே சொல்லாதபோது,  அப்படி அவர்களது தனிப்பட்ட விஷயத்தில், மூக்கை நுழைத்துக் கேட்பது என்பது விஷமமானது மட்டுமல்ல, அநாகரிகமானதும்கூட. தவிர, குழந்தை வேண்டுமா வேண்டாமா, எப்போது வேண்டும் என்று முடிவெடுப்பதில் முதல் உரிமை பெண்ணுக்கானது என்று சொல்கிறது சட்டம். ‘மணம் செய்து கொள்ளலாம், குழந்தை வேண்டாம்’ என்கிற சாரா வின்சென்ட்டுடன் (அன்னா பென்) சம்மதித்துக் கை கோர்க்கிறான் ஜீவன் பிலிப் (சன்னி வைன்). ஆனால் நடந்ததே வேறு. அதனை அடுத்து சாரா ஜீவன் தம்பதியரின் வாழ்க்கைப் போக்கு என்னவானது என்பதுதான், அக்ஷய் ஹரிஷ் எழுதி ஜூட் அண்டனி ஜோசப் இயக்கி அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளிவந்துள்ள ‘சாராஸ்’ மலையாளத் திரைப்படத்தின் கதை.  வளர்ந்து வரும் திரைக் கலைஞர் சாரா. தனியார் நிறுவனத்தில் ஜீவனுக்கு வேலை. இரண்டாண்டு காலக் காத்திருப்புக்குப் பின், இயக்குனராகப் படம் செய்திட அவளுக்கு வாய்ப்பு. கருத்தரித்தல், குழந்தைப்பேறு, வளர்த்தெடுத்தல் என தனது லட்சியத்திற்கு இடையூறு இல்லாத,  இலட்சிய வாழ்க்கையை அவள் விரும்புகிறாள். ஜீவனும் அவளுக்குத் துணை நிற்கவே செய்கிறான், எதிர்பாராத அந்நிகழ்வு சம்பவிக்கும் வரை. கதையில் டிவிஸ்ட் இல்லை. பரபரப்பான சம்பவங்கள் இல்லை. அடிதடிக்கு அவசியமில்லை. சிருங்காரக் காதல் காட்சிக்கு வாய்ப்பில்லை. எல்லாமே வெளிப்படையானவை;  உணர்வுப்பூர்வமானவை. சமூகக் களங்கமாகக் கருதும் விஷயங்களின்  பொருட்டு, மனிதர்கள் சரியானவற்றைப் புரிந்து கொள்வதும், அவர்களைப் புரிந்துகொள்ள வைப்பதும் அத்துனை சுலபமல்ல. ‘அப்பாடா’ என்றாகிவிடும்; விடுகிறது. படத்தின் முதல் அரைமணி நேரம் முகம் முழுவதும் சிரிப்புடன்  வரும் அன்னா பென், பிறகு முற்றிலும் வேறான சாராவாகத் தனது பங்களிப்பை நேர்த்தியாக வழங்குகிறார். “சாரா, இங்கே எல்லாரும் சந்தோஷமா இருக்காங்க. உன்னோட அப்பா, உன்னோட அம்மா, என்னோட அம்மா, என்னோட சகோதரி, எல்லாரோட சந்தோஷத்தையும் நீ கெடுக்கப் போறே?” என்கிற ஜீவனிடம், சாரா “அப்ப என்னோட சந்தோஷம்?” என்று கேட்பது நியாயமானதே. என்ன ஒன்று, ஏற்ற பாத்திரத்திற்கு உயரமும் உடல் வாகும் கூடுதலாக இருதிருந்தால்,  இன்னும் சிறப்பு கூடி இருக்கும். தாய்க்கும் தாரத்திற்கும் இடையே தவிக்கும் பாத்திரத்தை, ‘பளிச்’செனத்  துலங்க வைத்துள்ளார், சன்னி வைன். ‘Better not be a parent than be a bad parent’ என்கிற ஆலோசனையுடன் வரும் டாக்டர் அபீஸ் (சித்திக்) கதையின் அஸ்திவாரம். எம்.பி.ஏ. கேட் நுழைவுத் தேர்வு, அதற்கானத் தயாரிப்பு என்று ஜீவனிடமும்,  “குழந்தைப் பருவம் சரியா இல்லாததால் அவங்க  கிரிமினல்களாகி விடுவதை நீங்க படங்கள்ல காட்டுறீங்க. படப்பிடிப்பு துவங்கறதுக்கு ரொம்பவும் முன்னேயே, அதப் பத்தி நிறைய யோசனைகள், விவாதங்கள் எல்லாம் நடத்துவது இல்லையா? இது அதையெல்லாம் விட மிகப் பெரிய முடிவு இல்லையா?” என்று சாராவிடமும் அறிவுரையாக இல்லாமல் ஆலோசனையாக வழங்குவது, அவரது நடிப்பைப் போலவே நயமானது. சாராவின் தந்தை வின்சென்ட் (பென்னி பி நாயரம்பலம்), ஜீவனின் தாயார் ரீதம்மா பிலிப் (மல்லிகா சுகுமாரன்), ஜீவனின் சகோதரி டாக்டர் சந்தியா பிலிப் (தான்யா வர்மா) ஆகியோரின் அளவான நடிப்பு கவனம் பெறுகிறது. பாடல்கள் மாண்டேஜ் வகை. ஷான் ரஹ்மான் இனிமையாக இசையமைத்துள்ளார். நிமிஷ் ரவியின் ஒளிப்பதிவு பழுதில்லை. ரியாஸ் கே பாதர் படத்தொகுப்பைச் செய்துள்ளார். ஏறக்குறைய இரண்டு மணி நேரம் ஓடும் இப்படத்தின்  நீளத்தை 20 நிமிடங்கள் குறைத்திருக்க நிறையவே வாய்ப்புள்ளது. கிளைமாக்ஸில், நான்கு குழந்தைகளுக்குப் பிறகு படுக்கையில் நெருங்கும் கணவனை பலவீனமான நிலையிலும் காலால் பலமாக உதைக்கும் பெண், இரண்டு குழந்தைகளுக்குப் பின்பே இன்னும் பலமாகவும், சமயோசிதமாகவும், உதைத்திருந்திருக்கலாமோ! “சாரா, நீ தயாரா இருந்தா மட்டுமே இதைச்  செய்யணும். இது உன்னோட உடம்பு, முடிவும் உன்னுடையதாகத்தான் இருக்கணும்” என்று முத்தாய்ப்பாக டாக்டர் அபீஸ் கூறுவது சாராவுக்கு மட்டுமல்ல, எல்லாப் பெண்களுக்கும்கூடத்தான். மதிப்பெண் : 7 / 10 விமர்சனம் : மது ராஜேந்திரன்

யாழ்

யாழ்

பீரியட் படம் எடுப்பதில் உள்ள சவால், வரலாறு தெரியாதவர் களுக்கும், வரலாற்றை உணர்த் துமாறு எடுக்க வேண்டியிருப்பது தான்! ஆஸ்திரேலியாவில் சினிமா பயின்று, தமிழகம் வந்து, ஈழப் பின்னணியில், கதை திரைக்கதை வசனம் எழுதி, எம் எஸ் ஆனந்த் இயக்கி, தயாரித்து, நேரடியாக யூட்யூபில் வெளியாகியுள்ள படம் தான், யாழ் ! காதல், நேசம், பாசம், அன்பு ஆகிய உணர்வுகளின் அடிப்படையில் இயங்கும் பல்வேறு மாந்தர்கள், அவர்களின் நியாயமான விருப்பங்களின்படி வாழ இயலாத நிலையை, அவர்களது வாழ்வின் நிச்சயமின்மையை, ஈழத்தில் நிகழ்ந்த ஆகக் கொடுமையான இனவழிப்பு நிகழ்வுக்கு ஓராண்டிற்கு முந்தைய காலக்கட்டத்தின்  பின்னணியில், இந்தப்படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஈழத் தமிழர்களின் வலியை, முழுவதுமாக இல்லையென்றாலும், ஓரளவு அழுத்தமாக யாழ் திரைப்படம் புலப்படுத்தவே செய்துள்ளது. எல்லாளன் காலம் (திமு130)துவங்கி, பல்லா யிரம் ஆண்டுகளாக,  பண்பாடுகளை, சைவசித்த வேதாந்தங் களை, யாழ் இசை மூலமாக ஈழத் தமிழர்களான பாணர் கள், அந்தக் காலத்தில் உலகம் எங்கும் பரப்பி வந்தார்கள். அவர்கள் வாழ்ந்த இடத்திற்கு யாழ்ப்பாணம் என்கிற பெயர் வந்தது. ஆனால், காலப்போக்கில் யாழும், பாணர்களும் மறைந்து போனார்கள். இருப்பினும், அவர்களின் வாரிசுகள், இன்றும் உலகமெங்கும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். மீண்டும் யாழை மலரச் செய்யும் முயற்சியில் ஒரு சிலர்… என்று ஆதி வரலாற்றைச் சொல்லி கதை துவங்குகிறது ! சுதன் (வினோத் கிஷன்) நிலா (லீமா பாபு) காதல், அம்மாவை  பிரிந்த சிறுமி அமுதினி (ரக்சனா), யாழினி (மிஷா கோஷல்) சசி (சசிகுமார் சுப்ரமணி) வாழ்க்கைப் போராட்டம், சிங்கள காவல்துறை அதிகாரி (டேனியல் பாலாஜி) மனப்போராட்டம், கைக்குழந்தையுடன் சந்தேகத்தின் பேரில் அவனிடம் சிக்கித் தவிக்கும் செல்வி (நீலிமா அசிம்) என அனை வருமே தத்தம் பாத்திரத்தை குறைவில்லாமல் செய்துள்ளனர். தாயும் சிறுமியும் பிரியக் காரணமான நிகழ்வு, அத்துணை வலுவுள்ளதாக அமையப் பெறவில்லை. அதே சமயம், அருகில் விழுந்த குண்டுச் சத்தத்தால், காதில் குருதி வடிய, செவித்திறன் அற்றுப் போன சிறுமியின் சோகம், மனதைப் பிசைய செய்து விடுகிறது! பாடல் காட்சிகளில், பாடல்களின் வரிகளா கட்டும், பின்னணி குரல்களாகட்டும், படமாக்கிய விதமாகட்டும், பங்குகொண்ட கலைஞர்களின் முகபாவங்களாகட்டும்,  அனைத்துமே அருமை!  என்.எஸ்.அருணகிரியின் இசையும்,எல்.வி.கே. தாஸ் படத்தொகுப்பும் பாராட்டுக் குரியவை! ஆதி கருப்பையா ஒளிப்பதிவு இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். இதைத் தாண்டி, இனரீதியான அடக்கு முறைகளை சந்திக்க வேண்டி வந்த நிலை யையும், நியாயமான கோரிக்கைகள் செவி சாய்க்காத நிலையில், ஜனநாயக ரீதியான போராட்டங்கள் பொய்த்த பின், ஆயுதமேந்திய நிலைக்கு ஈழ இளைய தலைமுறை தள்ளப்பட்ட வரலாற்றையும், கதைமாந்தர்கள்  வழியே சற்று புலப்படுத்தி இருந்தால், ஒரு முழுமை பெற்ற ஈழப் பின்னணியைக் கொண்ட வரலாற்றுச் சித்திரமாக பரிமளித்திருந்திருக்கும் ! இது தவறிய நிலையில், கண்ணிவெடிகள் புதைப்பை ஒரு பொருளாக்கி, அதைச் செய்தது சிங்கள ராணுவமா, விடுதலைப்புலிகளா என்பதில் தெளிவில்லாத, காரணம் புரிபடாத  தோற்றத்தை ஏற்படுத்தியதை தவிர்த்திருக்கலாம்! இந்த கொரோனா நோயின் கொடுமையையும், ஊரடங்கு காரணமாக இயல்பான வாழ்க்கை யற்று, வீட்டினுள்ளே உள்ளடங்கி இருக்கும் வேதனையையும், உணர்ந்துள்ள நம்மால், ஈழத்தமிழர்களின் முடங்கிப்போன வேதனை யான வாழ்க்கையை ஓரளவுக்கேனும் உணர்ந்து கொள்ள, யாழ் படத்தை அவசியம் பாருங்கள்!

பொன்மகள் வந்தாள்

பொன்மகள் வந்தாள்

ஜோதிகா நடிப்பில் இணையத்தில் நேரடியாக வெளியான முதல் தமிழ்த் திரைப்படம்! முதலில், நேரடியாக இணையத்தில் ஏன் இந்தப் படம் வெளிவந்தது என்பதை பார்ப்போம்! மார்ச் 25 அன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாக எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. ஆனால், கொரோனா காரணமாக அதற்கு முன்பே ஊரடங்கை அரசு அறிவித்தது. தியேட்டர்கள் மூடப்பட்ட நிலையில் எப்போது அவை திறக்கப் படும் என்பதும் உறுதியில்லை. இப்போது லாக்டவுன்-4ல் இருக்கிறோம். இது மேலும் நீடிக்க வாய்ப்பு உள்ளது. ஆகவே, திரைப்படம் எடுப்பது ஒரு தொழில் என்ற முறையில் வேறு வழியின்றி இப்படத்தை இணையத்தில் வெளியிட சூர்யாவின் 2D  நிறுவனம் முடிவு செய்தது. இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் கடுமையாக எதிர்ப்பு காட்டி னார்கள். அதையும் மீறி சூர்யா இப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த நேரத்தில் இணையத்தில் அதாவது OTT தளத்தில் திரைப்படங்களை வெளியிடுவது பற்றிச் சொல்ல வேண்டும். OTT என்பதன் விரிவு “Over The Top”. நேரடியாக நமது ஆண்ட்ராய்டு ஃபோன், அல்லது டிவியில் இணையம் மூலம் வெளியிடுவது. சாதாரணமாக ஒரு படம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டு பல மாதங்கள் அல்லது நாட்களுக்குப் பிறகே தொலைக்காட்சி, இணையம் போன்றவற்றின் மூலம் பிற ஊடகங்களுக்கு உரிமை அளிக்கப்பட்டு வெளிவரும். (திருட்டு விசிடி, தமிழ் ராக்கர்ஸ் போன்று சட்ட அனுமதி இல்லாமல் வெளியிடப்படுவது வேறு கதை. அதை விட்டு விடுவோம்.) இந்த இணைய தொழில்நுட்ப வெளியீடு பற்றி சில வரிகள். மனிதன் சக்கரத்தைக் கண்டுபிடித்தது முதல் எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பையோ, ஊடகத்தையோ மக்களிடம் கொண்டு போகாமல் வணிக நோக்கில் தடுப்பது இயலாத செயல். சினிமா வரலாற்றில் முதன்முதலில் ஊமைப்படம், பின்னர் பேசும்படம், வண்ணப்படம், 70mm, சினிரமா, சினிமாஸ் கோப், த்ரீடீபடம் போன்ற பரிமாண வளர்ச்சி இருப்பது போல் திரைஊடக வரலாற்றிலும் திரை அரங்குகள், தொலைக்காட்சி, பின்னர் விசிஆர், சிடி வரிசையில் இப்போது வந்துள்ள OTT என்ற இணைய வெளியீடும் ஒரு பரிணாம வளர்ச்சிதான். அந்த வகையில் இப்படம் சினிமா ஊடக வரலாற்றில் ஒரு திருப்புமுனைப் படமாகும். ஆயினும், எந்தப் புதிய ஊடக கண்டு பிடிப்பாலும் திரையரங்குகள் மறைந்து போகாது என்று சொல்வார்கள். ஆனால், வெள்ளித்திரையில் பார்த்து மகிழ்வதற்கு மாற்று எதுவும் இல்லை என்பதை ரசிகர்கள் ஆதரவு நிரூபித்துள்ளது. இந்தப் படம் அமேசான் பிரைம் மூலம் வெளியிடப்பட்டது. இணையத்தில் அமேசான் பிரைம் நிறுவனத்துக்குச் சந்தா கட்டியவர்கள் இப்படத்தைப் பார்க்கலாம். நெட்ஃபிளக்ஸ், டிஸ்னி போன்ற மற்ற பிற இணைய ஊடகங்களும் இத்துறையில் இயங்கி வருகின்றன. 2020 மே29-ல் இப்படம் இணையம் மூலம் உலகம் முழுவதும் வெளியாகியது. நமக்கு நள்ளிரவு 12 மணிக்கு வெளியான இப்படத்தை தமிழில் திரைப்படங்கள் வெளிவராத ஃபிஜித் தீவு போன்ற உலகின் சிறிய தீவுகளில் உள்ள ரசிகர்களும் பார்த்து இணையத்தில் அப்போதே பதிவு செய்து விட்டனர். பொன்மகள் வந்தாள் திரைப்பட விமர்சனத்துக்கு வருவோம். இயக்குநர் ஜேஜே ஃபிரடரிக் அறிமுகப்படம் இது.  ஒரு அறிமுக இயக்குனர் சொல்கிறபடி ஐந்து முத்தான மூத்த இயக்குநர்கள் கதாபாத்திரங் களாக நடித்திருப்பதால் அவர்களின் நடிப்பு பக்குவப்பட்டதாக அந்தப் பாத்திரத்துக்கு ஏற்ற முதிர்ச்சி பெற்றதாக அமைந்துள்ளது. இப்படத்தின் மையக்கருத்தாக மூன்று ஜீனர்களை குறிப்பிடலாம். முதலாவது நீதிமன்ற விசாரணை, அடுத்தது பெண்களை மையமாகக் கொண்டது, மூன்றாவது மனித உணர்ச்சி. படத்தின் கதை 2004ல் ஊட்டியில் ஜோதி என்ற  சைக்கோகில்லர் வடநாட்டுப்பெண் பல சிறுவர்களை கடத்தி, கொன்று புதைத்து வைத்ததை போலீசார் கண்டுபிடித்து அப்பெண்ணை சுட்டுக் கொலை செய்துவிடுகிறார்கள் என்பது செய்தி. அந்த வழக்கை 16 ஆண்டுகளுக்குப் பிறகு 2020ல் வழக்கறிஞர் வெண்பா மீண்டும் ஆரம்பித்து நடத்துகிறார். அந்த வழக்கின் முடிவு என்ன என்பதே முழுத் திரைக்கதை. அடுத்தடுத்து இறுதிக் காட்சி வரை இடைவிடாது திருப்பங்கள். கிளைமேக்ஸ் எதிர்பாராத திருப்பம். படத்தின் ஆங்கில சப்டைட்டில் இருப்பதால் உலகத் தமிழர்களுக்கு மேலும் தெளிவாக கதைப் போக்கு புரிகிறது. பிற மொழியாளர்களும் படத்தைப் பார்த்து பின்பற்றலாம். இடைவேளை இணையத்தில் தேவை இல்லை. திரையரங்கில் வெளியிடும்போது பாப்கார்ன், பானங்கள் சாப்பிட இடைவெளி தேவை. ஆனால், இங்கே இணையத்தில் படம் பார்த்தாலும் நீங்கள் சமையல் அறை சென்று நொறுக்குத்தீனி எடுத்துக் கொள்வதற்காக இடைவேளை விட்டிருக்கலாம். பில்லா, ரங்கா காலம் தொட்டு நடந்து வரும் சிறுவர் கொலை கதைதான். சமீபத்திய அசீஃபா, நந்தினியைத் தொடர்ந்து பொள்ளாச்சி சம்பவங்கள் வரை “பெண் குழந்தைகளை சீரழிப்பது” (Girl Child Abuse) பற்றி இதில் இடம்பெறும் வசனமே பேசுகிறது. படத்தின் கதாநாயகி ஜோதிகா. 36 வயதினிலே, ராட்சசி வரிசையில் கதாநாயகியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். இதில் கதாநாயகன் இல்லை. வில்லன்கள், குணச்சித்திரப் பாத்திரங்கள் உண்டு. காதல் காட்சிகள், சண்டை, நகைச்சுவை போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லை. இதில் ஜோதிகா பண்பட்ட அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நீதிமன்றத்தில் வாதாடும் காட்சிகளில் உணர்ச்சிப் பிழம்பாகக் காட்சி அளிக்கிறார். ஆரம்பம் முதல் கடைசி வரை கதையைச் சுமந்து செல்பவரும் அவர்தான். இதில் வழக்கறிஞர் வேடத்தில் வரும் பார்த்திபன் தனக்கே உரிய முத்திரையைப் பதிக்கிறார். மனிதன் படத்தில் வரும் மூத்த வழக்கறிஞர் பிரகாஷ் ராஜை இந்தப் பாத்திரத்துடன் இணைத்து நினைத்துப் பார்க்கலாம். மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி சென்னையில் வந்து வாதாடியதும் நினைவுக்கு வருகிறது. அஜீத்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் வருவது போல் அதிகமான நீதிமன்ற காட்சிகள் நிறைந்த படம். ஆரூர்தாஸ் வசனத்தில் வந்த ‘விதி’ படமும் நீதிமன்றக் காட்சிகளை நினைவு படுத்துகிறது. ஆனாலும், 107 டிகிரி வெய்யில் பட்டையைக் கிளப்பும் இந்த மே மாதத்தில் குளுகுளு ஊட்டிக்கு நாம் நேரில் போக முடியாவிட்டாலும் ஊட்டி காட்சிகள் மனதுக்கு இதமாக இருக்கின்றன. தமிழ்க் கவிஞர்களில்  பாவேந்தர் பாரதிதாசன் பரம்பரை என்று  சொல்லப்படுவதுபோல் இதில் வரும் நடிகர்களை இயக்குநர் பாரதிராஜா பரம்பரை நடிகர்கள் என்றும் வகைப்படுத்தலாம். பாரதிராஜாவின் சீடர் பாக்யராஜ், பாக்யராஜின் சீடர் பாண்டிய ராஜன், பாண்டியராஜனின் சீடர் பார்த்திபன் என்று முத்திரை பதித்த மூன்று தலைமுறை நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். மூத்த நடிகர் பிரதாப் போத்தன் நீதிபதியாக வந்து இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அரசியல்வாதி வரதராஜனாக நடிகர் தியாகராஜன், போலீஸ் டி.எஸ்.பி. யாக சுப்பு பஞ்சுவும் நடித்திருக்கிறார்கள். தொழில்நுட்பத் துறைகளில் ராம்ஜி சினிமாட்டோகிராஃபர், ரூபன் எடிட்டிங். இருவரும் சிறப்பாக ஒரு திகில் க்ரைம் கதைக்கு ஏற்ற வகையில் தங்கள் திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளனர். வா செல்லம், கலைகிறதே கனவே உட்பட ஐந்து பாடல்கள் கோவிந்த் வசந்தா இசையில் இடம் பெற்றுள்ளன. அனைத்தும் கதைக்கருவை ஒட்டியதாக பின்னணியில் பாடப்படுகின்றன. நீதிமன்றத்தில் ஜோதிகா வழக்கறிஞராக வாதாடும்போது, “ஒரு படி அரிசி திருடியதற்காக ஒருவரை அடித்துக் கொலை செய்த நாடு இது. ஆனால், பல நூறு பெண்களை நாசம் செய்தவர்கள் சுதந்திரமாக உலாவி வருகிறார்கள்!”, என்று  பேசும் வசனம் நெஞ்சைத் தைக்கிறது. தமிழ்ப்பெண்ணின் வீரம் பழங்காலத்தில் இருந்தே பேசப்படுகிறது. தன் கணவனை கள்வன் என்று தீர்ப்பளித்த பாண்டிய மன்னன் அரசவையிலேயே சென்று, ‘‘தேரா மன்னா” என்று வாதாடி வெற்றி பெற்றவர் கண்ணகி. அந்த வரிசையில் ஜோதிகா நீதிக்காகப் போராடி வெற்றி பெறுகிறார். இந்த ஊரடங்கு நாட்களில் அறுபது நாட்களுக்கு மேலாக பழைய திரைப்படங்களையும், டி.வி சீரியல்களையும் மீண்டும் மீண்டும் பார்த்துப் பார்த்து நொந்து நூடுல்சாகிப்போன உலகெங்கும் வாழும் தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் இந்தக் காலகட்டத்தில் பொன்மகள் வந்தாள் திரைப்படம் வெளிவந்திருப்பது ஒரு வரப்பிரசாதம். இதைவிட உருப்படியாக ஊரடங்கில் வேறென்ன செய்யப் போகிறீர்கள்? அனைவரும் ஒருமுறை பார்க்கலாம். குறிப்பாக ஆண்களும் பெண் பிள்ளைகளைப் பெற்றவர்களும் தவறாமல் பாருங்கள். நெஞ்சை உருக்குவதாக உள்ளது. படத்தின் கடைசியில் வரும் ஒரு வசனம்: பெண் குழந்தைகளுக்கு Good Touch, Bad Touch எவை என்று சொல்லி வளருங்கள் என்று சொல்லும் நாம் ஆண் குழந்தைகளுக்கு இதை ஏன் சொல்லித் தருவதில்லை என்ற கேள்விக்குப் பதில் இல்லை. ஒரே ஒரு எச்சரிக்கை. படத்தின் கருத்தைப் பொறுத்தவரை ஐந்து வயதுக்குக் குறைந்த குழந்தைகள் இப்படத்தைப் பார்ப்பது அவர்கள் மனதைப் பாதிக்கலாம். மற்றபடி அனைவரும் பாருங்க! +++++++++++++