ஆஹா என்று எழுந்ததுபார் யுகப்புரட்சி

ஆஹா என்று எழுந்ததுபார் யுகப்புரட்சி

கட்டுரை: அக்ரி பரத்வாஜ் யூரல் மலையும் ஆறும் என அமைந்துள்ள பகுதியில் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் குடியேறிய இனம் ‘ஸ்லாவ்’. பின்னர் ‘ரோஸ்’ அல்லது ‘ரூஸ்’ எனப்பட்டவர்கள் படையெடுத்தனர். இவ்விரு இனத்தவரும் கலந்து தோன்றிய இனமான ரஷ்யர்கள் வாழ்ந்த பகுதிதான் ரஷ்யா எனப்பட்டது. நவ்கோரட்-டைத் தலைநகராகக்கொண்டு ரூஸ் தலைவர் ரூரிக் என்பவர் ஸ்லாவ் இனத்தவரின் வேண்டுகோளின்படி ஆண்டு வந்தார். இவரது ஆதரவாளர்கள் ரூஸ் எனப்பட்டனர். இவர்களால் வரி வசூலிக்க நியமிக்கப்பட்டவன்தான் இவான். மூன்றாம் இவான் (ஐவான்) பைசாண்டையின் பேரரசின் உறவுக்காரப் பெண்ணை, போப்பின் உதவியால் மணந்துகொண்டான். பைசாண்டையின் பட்டம் எதேச்சையதிகாரி என்பதாகும். ரோமர்களின் பட்டம் சீசர் என்பதாகும். இரண்டையும் இணைத்து அழைக்குமாறு வேண்டினாள் அப்பெண். அதுதான் ரஷ்ய மொழியில் ஜார் என்றானது. பேரரசர் சூட்டிக்கொண்ட பெயர் இவ்வாறாகத்தான் வந்தது. ஜார் பேரரசைச் சார்ந்த மகா பீட்டர் ரஷ்யாவை ஆசிய நாடுகளின் கலாசாரத்திலிருந்து ஐரோப்பியப் பண்பாட்டு வட்டத்திற்குள் கொண்டுவந்தார். நிக்கோலஸ் ரோமோனோவ், இரண்டாம் அலெக்சாண்டர், மூன்றாம் அலெக்சாண்டர், இரண்டாம் நிக்கோலஸ் ஆகிய ரஷ்ய மன்னர்கள் அரசாண்டபோது மக்கள் பல இன்னல்களுக்கு ஆளானார்கள். மக்களது அடிமைத்தனங்களையெல்லாம் அறுத்தெறியும் வகையில் வந்ததுதான் இப்புரட்சி. 1917இல் நடந்த ருசியப் புரட்சி அல்லது நவம்பர் புரட்சி, ஜார் மன்னரையும் உயர் குடியினரையும் விரட்டி அடித்தது. புதிதாக உருவாகி வந்த முதலாளித்துவச் சொத்துடைமை உறவுகளை மாற்றி அமைத்தது. தொழிற்சாலைகள், வங்கிகள் ஆகியவற்றை அவற்றின் உடைமையாளர்களிடமிருந்து பறித்து, அவற்றைத் தொழிலாளர் மன்றங்களான சோவியத் கரங்களில் ஒப்படைத்தது. வரலாற்றில் முதன்முறையாக தொழிலாளர் வர்க்கம் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றியது. ஆகவே பாரதி இதனை ‘யுகப்புரட்சி’ என்று வர்ணித்தான். ‘குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு’ என்று வரையறுத்தான். ‘தேசிய இனங்களின் சிறைக்கூடம்’ என்று அறியப்பட்ட ரஷ்யா, புரட்சிக்குப் பிறகு பல தேசங்கள் மற்றும் அயல் நாட்டு விவகாரங்களின் விஷயத்தில் ‘தொழிலாளர் வர்க்க சர்வதேசியம்’ என்ற ஒரு திசைவழியைக் காட்டியது. இவ்வாறாக, சகல ரஷ்ய மக்களுக்கும் தானே பிரதிநிதி, தானே தலைவன் என்று கூறிக்கொண்டிருந்த, ‘இரணியன் போலரசாண்ட கொடுங்கோலன் ஜாரெனும் பேரிசைந்த பாவி, ஜார் மூடன், புரட்சியின் மூலம் இமயமலை வீழ்ந்ததுபோல் வீழ்ந்தான்’. பொய் கூறி அறம் கொன்று சதிகள் செய்த சுமடர் புயற்காற்று சூறைதன்னில் திமுதிமுவென மரம் விழுந்து காடெல்லாம் விறகான செய்திபோலே, ஜாரைச் சுற்றி இருந்த மூடர்கள் மரமாக விழவில்லை. விழுந்து விறகானர்கள். மரம் போன்று விழுந்தால் வீட்டு கட்டிடத்திற்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். விறகாக வீழ்ந்தால் சாம்பலாகத்தான் போகும். மக்கள் எழுச்சி பெற்றால் மன்னனும் அவனைச் சார்ந்தோரும் சாம்பலாகத்தான் போவார்கள் என்பதை புதுமை விரும்பி பாரதி தனது கவிதை மூலம் தெளிவாகக் கூறுகிறார். உணவும் பண்டங்களும் எரிபொருளும் பதுக்கப்பட்டன. கள்ளத்தனமாக நாடு கடத்தப்பட்டன. இடைக்கால அரசின் அதிகாரப்பூர்வமான அறிக்கையின்படி ராத்தல் இரண்டு ரூபிளுக்குத் தகுதியான காபிக் கொட்டை வாங்குவதற்கு நுகர்வாளர் 13 ரூபிள் தரவேண்டிய சூழல் இருந்தது. மக்கள் ரொட்டி கிடைக்காமல் திண்டாடினர். போர் முனையில் படையாட்கள் பசியிலும் வதைந்தனர். மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனி உண்டோ? மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனி உண்டோ? இனி ஒரு விதி செய்வோம் – அதை எந்த நாளும் காப்போம். தனி ஒருவனுக்கு உணவிலை எனில் ஜகத்திணை அழித்திடுவோம் என்ற பாரதியின் கவிதை வரிகளுக்கேற்ப, போல்ஷிவிக்குகளின் குரல், ‘அனைத்து ஆட்சியதிகாரமும் சோவியத்களுக்கே! ரொட்டி வேண்டும்; நிலம் வேண்டும்; யுத்தத்திற்கு முடிவு கட்டு; ஒழித்து கட்டு கள்ளச்சந்தை வாணிபத்தை’ என்பதாக ஓங்கி எழுந்தது. பாரதியைப் போன்றே, பாரதிதாசன் வழி வந்த பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரமும் நவம்பர் புரட்சியை, ‘புதிய ஒளி வீசுது பார்!’ என்று கூறுவதைப் பார்க்கிறோம்.‘சதிமிகுந்த கொடுங்கோலன் ஜார்முன் மக்கள்கதியுயரக் காணும் வழிஏது மின்றிமிதியுண்டார் அராஜகத்தின் மீளாச் சேற்றில்வெம்பி யழுதார் பசியால் வெந்தார் நைந்தார்இதைக்கண்டார் லெனின் ஸ்டாலின். செக்கிலிட்டதேங்காய்போல் தொழிலாளர் துயரும் கண்டார்உதிர்த்த கண்ணீர் துடைத்தெழுந்தார்உதித்ததுபார் புரட்சியெனும் உரிமைச் செம்போர்’ என்று வரவேற்றார். புரட்சிக்குப் பிறகு லெனின் தலைமையிலான போல்ஷிவிக்குகள் ஆட்சி கூட்டுப்பண்ணை விவசாயம் மேற்கொண்டதை, ‘நாட்டுக்குப் பொருத்தம் நாமே நடத்தும் கூட்டுப்பண்ணை விவசாயம்’! என வரவேற்றார். லெனின் புரட்சியைப்பற்றிக் கூறும்போது, ஏகாதிபத்திய யுகத்தில் புரட்சி என்பது ஒரு ஜனநாயகக் கட்டத்தின் வழியாகவே பிறக்கும் என்றார். அதற்கு முதலாளித்துவ ஜனநாயகம் என்று பெயரையும் இட்டார். நேரடியாக சோசலிசத்துக்குள் குதித்துவிட முடியாது என்றும் கூறினார். ஜார் மன்னனின் நிலப்பிரபுத்துவ, ஏகாதிபத்திய ஆளும் முறைமையின் மீது மக்கள் அதிருப்தி அடைந்திருந்த நேரத்தில், அந்த அமைப்பை வீழ்த்தவேண்டுமானால் தொழிலாளி வர்க்கம் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியை நடத்தியாக வேண்டும் என கட்சியை ஏற்கச் செய்ய லெனின் பெரிதும் முயன்றார். அதில் வெற்றியும் கண்டார். ரஷ்யப் புரட்சி 1917 மார்ச், நவம்பர் என இரு கட்டங்களாக நடைபெற்றது (ரஷ்யக் காலண்டர்படி பிப்ரவரி, அக்டோபர்). செயின்ட் பீட்டர்ஸ்பர்க் என்றழைக்கப்படும் பழைய பெட்ரோகிராடைச் சேர்ந்த சோவியத்கள், ஜார் மன்னனைத் தூக்கி எறிந்துவிட்டு கெரன்ஸ்கியால் தலைமை தாங்கப்பட்ட முதலாளித்துவ அரசுக்கு முழு அதிகாரத்தை வழங்கினர். லெனின் தலைமறைவாக இருந்தார். ஏப்ரல் மாதம் ரஷ்யத் தலைநகர் வந்தார். மக்களைப் படிப்படியாக ஈர்த்து முழு அதிகாரத்தையும் அமைதியான வழியிலே கைப்பற்ற சோவியத்துகளுக்கு ஆலோசனை வழங்கினார். நவம்பர் 6 என்பது நேரத்துக்கு முந்தியது. நவம்பர் 8 என்பது கால தாமதமானது. நவம்பர் 7 மிகச் சரியானது என்று எடுத்துரைத்தார். சோவியத் அதிகாரம் நிலைநாட்டப்பட்டவுடன் சோவியத் அரசு சார்பாக அமைதி, ரொட்டி, நிலம் என 3 பிரகடனங்களை அறிவித்தார். மின்மயமாக்குதலையும் சோவியத் அதிகாரத்தையும் கூட்டினால் கம்யூனிசம் என்ற உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கான சூத்திரம் என லெனின் குறிப்பிட்டார். தொழிலாளர் வர்க்கம் சீர்திருத்தத்திற்கான போராட்டம் என்பதைத் தாண்டி, ஒரு தொழிலாளர் வர்க்க ஆட்சியை உருவாக்கிய பெருவெடிப்பை இப்புரட்சி நிகழ்த்தியது. அடிப்படைக் கோரிக்கைகளை நிறைவேற்ற உருவான எழுச்சியானது, முதலாளித்துவ அமைப்பு முழுவதையும் தூக்கி எறிவதற்கும் வழிவகை செய்கிறது என்பதை உலகிற்கு நிரூபித்துக் காட்டியது. கற்றறிந்த ஞானியின் தலைமையிலான சோஷலிச அரசு, அடிமை முறையிலும் வறுமையிலும் இருந்த விவசாயிகளையும் தொழிலாளர்களையும் சமுதாயத்தின் எஜமானவர்களாக மேன்மை அடையச் செய்தது. இலவச வீட்டு வசதி, கல்வி, சுகாதார வசதி, கண்ணியமான வாழ்க்கை அனைத்து மக்களுக்கும் கிடைக்கும்படி செய்தது. புரட்சிக்குப் பிந்தைய கால்நூற்றாண்டுக்குள் வேலையின்மையைத் துடைத்துப் போட்டது. பூர்ஷ்வா வர்க்கத்தைப் பாட்டாளிகளால் நிச்சயமாக தோற்கடிக்க முடியும்; சோசலிசம் முதலாளித்துவத்தைத் தோற்கடிக்க முடியும்; ஒடுக்கப்பட்ட நாடுகள் ஏகாதிபத்தியவாதிகளை தோற்கடிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்திய இப்புரட்சி பாட்டாளி வர்க்கத்திற்கு ஓர் உன்னதமான அனுபவம் ஆகும். உலகம் முழுவதிலும் உள்ள ஒடுக்கப்பட்ட நாடுகளிலும் காலனி நாடுகளிலும் நடைபெற்ற விடுதலைப் போராட்டங்களுக்கு உந்து சக்தியாக இருந்த – இருக்கும் நவம்பர் புரட்சி – சோவியத் புரட்சியை நினைவுகூர்ந்து பெருமிதம் கொள்ளும்போதில் 70 ஆண்டுகளைத் தாண்டி அதன் விழுமியங்கள் நிலைகொள்ளாமல் போனதின் துயரமும் நெஞ்சில் அப்பிக்கொள்வதை பலமாக உதறிக்கொண்டு, ‘சோவியத் புரட்சியின் விளைவுகள் நீடுழி வாழ்க’ என்று உள்ளம் வாழ்த்துகிறது. ‘இடிபட்ட சுவர்போல கலி வீழ்ந்தான் கிருதயுகம் எழுக மாதோ’ என்ற தமிழ்க் கவியின் வாக்கு எழுந்து பொலிகிறது.

பள்ளிகளில் போதைப்பொருள் பயன்பாடு

பள்ளிகளில் போதைப்பொருள் பயன்பாடு

கல்விக் கட்டுரை : சு. உமா மகேஸ்வரி பள்ளிக்கல்வியின் சூழல் நாளுக்கு நாள் பல வழிகளில் ஆபத்து நிறைந்ததாக மாறி வருகிறது. இந்தக் கல்வி ஆண்டின் தொடக்கத்திலிருந்தே அதிகம் பேசப்படும் ஒன்றாக, போதைப்பொருள் பிரச்சனை இருந்துவருகிறது. அது குறித்து செங்கல்பட்டு மாவட்டப் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையின் விவரங்கள் கீழ்வருமாறு. மாவட்ட ஆட்சியரது வாராந்திர ஆய்வுக் கூட்டத்தில், சட்ட விரோத போதைப்பொருள் நடமாட்டத்தைத் தடுத்தல் குறித்தான, பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரைகள் வழங்குதல். மாணவர்களிடையே COOL LIP என்ற போதை தரக்கூடிய மிட்டாய் பயன்பாடு உள்ளதா என்பதை ஆசிரியர்கள் மூலம் கண்காணிக்க வேண்டும். பள்ளி அருகில் உள்ள கடைகளில் COOL LIP  விற்கப்படுகிறது எனத் தகவல் தெரிந்தால், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் புகார் அளித்திடல் வேண்டும். முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கும் தகவல் அளித்திட வேண்டும். RBSK (Rashtriya Bal Swasthya Karyakram) என்ற மருத்துவக் குழு, பள்ளிகளில் மருத்துவ‌ முகாம் நடத்தும்போது, மாணவர்களின் பற்களைப் பரிசோதனை செய்து, போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் கறைகள் உள்ளதா எனக் கண்டறிந்து, அம்மாணவர்களுக்கு த் தனியே உளவியல் ஆலோசனை வழங்கப்பட வேண்டும். அம்மாணவர்களுக்கு போதைப் பொருட்கள் எங்கிருந்து கிடைக்கின்றன என்பதைக் கண்டறிந்து, மந்தன முறையில் காவல் நிலையத்தில் புகார் தரப்படவேண்டும். அவ்வாறு மந்தன முறையில் காவல்துறையில் தரப்பட்ட புகாரின் நகல், முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு அனுப்பப்பட வேண்டும். பிரதி வாரம் திங்கட்கிழமை காலை வழிபாட்டுக் கூட்டத்தில், அருகில் உள்ள காவல் நிலைய அதிகாரிகள், உளவியல் ஆலோசகர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் மூலமாக, போதை விழிப்புணர்வு சார்ந்த கருத்துருக்களை எடுத்துரைக்கும் வகையில் மாணவர்களிடையே உரையாற்ற வேண்டும். போதை விழிப்புணர்வு சார்ந்த போட்டிகள் நடத்தப்பட வேண்டும். காவல்துறை, உணவுப் பாதுகாப்புத் துறை மற்றும் சுகாதாரத் துறையுடன் இணைந்து, பாரத சாரணர் சாரணியர், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களை இணைத்து, போதை விழிப்புணர்வுப் பேரணி பள்ளியளவில் நடத்தப்பட வேண்டும் என்று அந்தச் சுற்றறிக்கை வழிகாட்டுதலைத் தருகிறது. சென்னை சுற்றுவட்டாரத்தில் கண்ணகி நகர், வடசென்னை, பல்லாவரம், குரோம்பேட்டை, ஓ.எம்.ஆர் சாலையில் அமைந்துள்ள பள்ளிகளில் பணியாற்றும் சில ஆசிரியர்களும் தங்கள் பள்ளி மாணவர்கள் இந்த COOL LIP பழக்கத்தைக் கைக்கொண்டுள்ளதாகக் கூறினர். இதனால் மாணவர்கள் சமுதாயம் செல்லும் மோசமான பாதை குறித்தும் தங்கள் சி.ஆர்.சி பயிற்சி அரங்குகளில் வேதனையுடன் பகிர்ந்துகொண்டனர். செங்கல்பட்டு மாவட்டம் உள்ளிட்ட சென்னைப் பகுதி மாணவர்களிடம் மட்டுமே இந்தப் பழக்கம் உள்ளதா? தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களில் இந்தப் பழக்கம் எவ்வாறு இருக்கிறது என  ஆசிரியர்கள் சிலரிடம் பேசும்போது, கள நிலவரம் என்னவென்று புரிந்துகொள்ள முடிகிறது. ஏனெனில், இந்தச் சுற்றறிக்கைகள் தமிழ்நாடு முழுவதுமுள்ள அனைத்து உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் என, அனைத்து மாவட்டங்களிலும் கடந்த மூன்று மாதங்களாகச் சுற்றி வருகின்றன. தஞ்சாவூரைச் சேர்ந்த மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் சுந்தரமூர்த்தி அவர்கள் இது குறித்துப் பேசும்போது, “வழிபாட்டுக் கூட்டத்தில உறுதிமொழி எடுக்கச் சொல்லியிருக்கோம். வாசல்ல tobacco free zone என்று ஒட்டியிருக்கோம். தலைமையாசிரியர்கிட்ட பக்கத்துல எந்தக் கடையிலும் போதைப்பொருள் விற்பனையில்லைன்னு சான்று வாங்கியிருக்கோம். மாணவர்களிடம் இருந்தால், அதைப்பெற்று அன்பாகக் கண்டிச்சிருக்கோம் என்கிற அளவில் அரசும் கல்வித்துறையும் தங்கள் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்கின்றன. உண்மையில் இந்தப் பழக்கம் வெளிவட்டாரப் பெரியவர்கள்,  பெற்றோர், முன்னாள் மாணவர்கள் போன்றோரிடமிருந்து மாணவர்கள் பழக்கத்திற்கு வருகிறது. பெற்றோரே பலர் அப்படி வரும்போது, யாரிடம் போய்ச் சொல்வது? விற்பவர்களுக்கும் உபயோகிப்போருக்கும் கடுமையான தண்டனைக்கு வழிவகை செய்யாமல், பள்ளியையோ மாணவர்களையோ குறை சொல்வது அர்த்தமற்றது” என்கிறார். “அரசு இதன் விற்பனையைத் தடைசெய்ய வேண்டும். பள்ளி மாணவர்களிடையே வயது வித்தியாசம் இன்றி, இப்பழக்கம் பரவி வருகிறது. பல மாணவர்களை இப்பழக்கத்திற்கு  அடிமையாக்கி வைத்திருக்கிறது” என்கிறார் சென்னையைச் சேர்ந்த ஆசிரியர் ஷாலினி. “இதற்காகவே எங்கள் பள்ளியில் கேமரா வைக்க வேண்டும் என நான் வற்புறுத்தி, சில ஆசிரியர்களின் எதிர்ப்பையும் மீறி நன்கொடையாளர்கள் மூலம் கேமரா வைத்தோம். தற்போது ஓரளவு குறைந்துள்ளது. ஆனால் பள்ளிக்கு வெளியே என்ன நடக்கிறது எனத் தெரியவில்லை. பெண் பிள்ளைகள் இதற்குப் பணம் கொடுத்து உதவுகிறார்கள்” என்கிறார் திருப்பூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் பணியாற்றும் பகுதி நேர  ஆசிரியர் கௌதமன். “எங்கள் பள்ளி அருகில் கடைகளில் விற்பனை இல்லை. பெற்றோர் ஆசிரியர் கழகத் (PTA) தலைவரை வைத்து வார்னிங் கொடுத்துள்ளோம். மீறினால் அவரு இவங்களை வேற மாதிரி கவனிப்பார்னு பயம். நம்ம பையனுகளே ஏஜன்சி எடுத்து நடத்துறாங்க. காட்டில்தான் அவனுகளுக்கு ஓப்பன் டாய்லெட். மண்ணில் புதைத்து வியாபாரம் செய்வாங்க. நாங்களும் சஸ்பெண்ட் பண்ணிட்டு இருக்கோம்” என்கிறார் தாராபுரத்தில் அரசுப்  பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஜெய கீதா. “அமைச்சர்கள் முதல் கவுன்சிலர்கள் வரை கமிஷன் போகிறது. சென்ற ஆட்சியில் குட்கா கமிஷன் ஊழலில் சுகாதாரத்துறை அமைச்சரே ரெய்டில் சிக்கினார். வட இந்தியக் கூலித் தொழிலாளர்கள் மூலமே இதுபோன்ற பழக்கங்கள் தமிழகத்தில் நுழைந்தது. இப்பழக்கத்தால் வாய்ப் புற்றுநோய் ஏற்படும்” என்கிறார் சீர்காழி ஆசிரியர் கண்ணன். ராணிப்பேட்டை மாவட்டத்தில் கிராமப் பகுதி ஒன்றின் அரசு  மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர், “முறத்தில் அள்ளி அள்ளிக் கழிப்பறைகளில் கொட்டினேன், COOL LIP பாக்கெட் கவர்களை” என்று கூறி வேதனையாகப் பகிர்ந்துகொண்டார். கூடுவாஞ்சேரி அருகே சில பள்ளிகளில் மாணவர்களிடம் பேசும்போது, சின்ன பசங்ககூட கூலிப் பயன்படுத்துகின்றனர் எனத் தெரிந்துகொள்ள முடிகிறது.  திருப்பூர் மாவட்டத்தில் ஊத்துக்குளி ஆசிரியர், “பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட ஆசிரியர்கள், ஒருநாள் முழுவதும் தங்கள் பள்ளிகளில் நடக்கும் கூலிப் பிரச்சனை குறித்துதான் பேசி வருந்துகின்றனர். மொரட்டுப்பாளையம், வாவி பாளையம், முதலிபாளையம், ஊத்துக்குளி உள்ளிட்ட அனைத்துப் பள்ளி மாணவர்களும் இந்த போதைப் பொருள் பயன்பாட்டால் சீரழிவதைக் காணச் சகிக்கவில்லை” என்கிறார். கரூர் பகுதி ஆசிரியர் சாதாரணன் என்பவர், தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நகர மயமான தனது பள்ளியில், இந்த கூலிப் பழக்கக் குழந்தைகளைக் கண்டறிந்து, அதைக் களையப் பள்ளி ஆசிரியர்கள் இணைந்து எடுத்த நடவடிக்கைகள் குறித்து சில மாதங்களுக்கு முன்பு, தனது முகநூலில் விரிவாக எழுதியிருந்தார். இப்படி ஏராளமான கதைகள் அன்றாடம் நடந்துகொண்டு இருக்கின்றன பள்ளிகளில். சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரி மாணவர்கள்தான்  அங்கொன்றும் இங்கொன்றுமாக புகைப்பிடிப்பது போன்ற பழக்கங்களைக் கைக்கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. ஆனால் தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் வந்தபிறகு, பள்ளி மாணவர்கள் பெரும்பாலும் எல்லா ஊர்களிலும் மதுக்கடைகளுக்குச் சீருடையில் செல்வதாகவும் சில பள்ளிகளில் பள்ளிக்குள்ளேயே மது அருந்திவிட்டு வந்து மாணவர்கள் பிரச்சினை செய்வதாகவும் செய்திகளைப் பார்த்திருக்கலாம். ஆனால் கொரோனா காலத்தின் கொடையால் அங்கொன்றும் இங்கொன்றுமாக இலைமறை காய்மறையாக இருந்த இந்த போதைப்பொருள் கலாச்சாரம், தற்போது பள்ளிகளில் வெளிப்படையாகவே வேரூன்றி, மாணவர் சமுதாயத்தை நாசம் செய்து வருகின்றது. இப்படியான பழக்கம் கண்டறியப்பட்ட எத்தனையோ மாணவர்கள், மருத்துவச் சிகிச்சைக்கும் செல்கின்றனர். அப்படியான ஒரு சூழலில் ஒரு மருத்துவர் பகிர்ந்துகொண்ட செய்தி நம்மைத் திகைக்க வைக்கிறது. “இந்த ‘கூலிப் ‘ போதை மருந்துப் பொடியில் கண்ணாடித் துண்டுகள் மிகப் பொடியாக அரைத்துக் கலக்கப்படுகின்றன” என்கிறார் அவர். அதை மாணவர்கள் வாயில் வைத்து அடைத்துக்கொள்ளும்போது, வாயின் உட்புறம் இருக்கும் மிக மெல்லிசான தசைப் பகுதியை அறுத்துச் செல்லும் கண்ணாடித் துண்டுகள், இரத்தத்தில் உடனடியாக போதை மருந்து கலப்பதற்காகவும் அந்த போதை உணர்வை வீரியப்படுத்துவதற்காகவும்  அப்படி காலக்கப்படுகிறது” என்று சொல்வதை எப்படி நம்மால் சந்தேகிக்க முடியும்? இந்தப் பழக்கம் ஏழை – பணக்காரன், ஆண் குழந்தைகள் – பெண் குழந்தைகள், அரசுப்பள்ளி – தனியார் பள்ளி என்று எந்த வேறுபாடுகளும் இல்லாமல், அனைத்துத் தரப்பு மாணவர்களையும் அடிமைப்படுத்தியுள்ளது. பெண் குழந்தைகளும் இதைப் பயன்படுத்துவதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனனர். எண்ணிக்கையில் குறையலாம். ஆனால், இப்போது மது குடிக்கும் பழக்கம் எப்படிப் பெண் குழந்தைகளையும் விட்டுவைக்கவில்லையோ, அதுபோலவே இதுவும்.  வயது வித்தியாசம் இல்லாமல் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் இதை உபயோகிப்பதை, ஒவ்வொரு பள்ளியையும் கண்காணித்தால் தெரிந்துகொள்ள முடியும். தனியார் பள்ளிகளைப் பொறுத்தவரை, மாணவர்கள்  ஓரளவு பெற்றோர்களின் கண்காணிப்பு வளையத்திற்குள் இருப்பதால் கண்டறிய முடிவதாகவும் பெரும்பாலும் மீட்டுவிடுவதாகவும் சில தனியார் பள்ளி ஆசிரியர்கள் கூறுகின்றனர். ஆனால் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பெரும்பாலும், பெற்றோர்களால் கைவிடப்பட்டவர்கள் என்றே கூறுமளவிற்கு வீடுகளில் கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் எதார்த்தம். ஏனெனில், இந்தச் சமுதாயத்தில் அன்றாடங்காய்ச்சிகளாகவே வாழும், பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கும் கடைக்கோடி மக்களின் குழந்தைகளுக்கான அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள்தான் இந்த வியாபாரிகளின் வலையில் சிக்கித் தவிப்பவர்கள். அரசாங்கம் நினைத்தால் இந்த போதைப் பொருள்கள் தயாரிப்பு, விநியோகம் இவற்றைத் தடுத்து நிறுத்த முடியும். ஆனால் பள்ளி ஆசிரியர்கள் கண்டறிய வேண்டும் என்று சுற்றறிக்கைகள் விடுவது எந்த வகையிலும் பொறுப்பேற்காத தன்மையைக் காட்டுகிறது. பாம்பின் கால் பாம்பறியும். ஆமாம், காவல்துறைக்குத் தெரியாமல் எந்தக் கடைகளுக்கு இந்த போதைப் பொருள்கள் வந்துவிடும் சொல்லுங்கள். அரசியல்வாதிகளுக்குத் தெரியாமல் இதுபோன்ற கேடுகள் சமூகத்தில் நடக்க வாய்ப்பு உண்டா? அதோடு, எந்த ஆசிரியர் இயக்கங்களும் சங்கங்களும் இது குறித்து அரசையோ கல்வித் துறையையோ ஏன் கேள்வி கேட்க மறுக்கிறார்கள்? அல்லது ஏன் இதை ஒரு பிரச்சினையாகவே எடுத்துக்கொள்ளவில்லை? என்ற கேள்வியையும் முன்வைக்கிறோம். இத்தனை விபரீதமான பழக்கத்தை ஒழிக்க, பள்ளிகளில் உறுதிமொழி எடுக்கச் சொல்கிறது அரசு. விழிப்புணர்வுப் போட்டிகள் நடத்தக் கூறுகிறது.  ஆனால், தலைமை ஆசிரியர் பாடம் நடத்தும் ஆசிரியர்களது வகுப்பறையைக் கவனித்து எமிஸ் ஆப்பில் போட வேண்டும். அதில் இதுபோன்ற மாணவர்கள் வகுப்பறைகளில் ‌இருக்கின்றனரா என்று ஏதாவது கேள்வியை வடிவமைத்திருக்கிறதா கல்வித்துறை என்பதை உங்கள் யூகத்துக்கே விட்டுவிடுகிறேன். தேசிய கல்விக் கொள்கை, இப்படியான மாணவர்களுக்கோ பள்ளிகளைப் பீடித்திருக்கும் இந்த விபரீதப் போக்கிற்கோ என்ன தீர்வை வைத்துள்ளது? இந்த அரசு எடுக்கும் கல்வி சார்ந்த திட்டங்களில் இந்தப் பிரச்சனைக்கு என்ன திட்டம் வைத்துள்ளது? பள்ளி மேலாண்மைக் குழுக்களில் இவையெல்லாம் மனம் திறந்து பேசப்படுகிறதா? கிராமங்களில்கூட வேரூன்றி வளர்ந்துள்ள இந்தப் பழக்கங்களைக் களைய, கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானம் போடப்படுகிறதா? மாணவர்கள் எதிர்காலம் நாசமாகி வருவதைத் தடுக்க, கல்வி அமைச்சர்

தலைகீழாகத்தான் குதிப்பேன்

தலைகீழாகத்தான் குதிப்பேன்

அரசியல் நையாண்டி: ஆர்னிகா நாசர் உதயசங்கர் ஸ்கூட்டி பெப்பை ஓட்டியபடி அந்த குறுக்குச் சந்துக்குள் புகுந்தான். எதிரில் ஒரு இ-பைக் மோதுவது போல வந்து சறுக்கி நின்றது. இ-பைக்கில் அமர்ந்திருந்த சீனிவாசன் இரைந்தான். “உனக்கு என்னோட மோதுரதே பழக்கமாகிப் போச்சு உதயா!” மோத வந்தது நீயா நானா?” இருவரும் ஓரமாய் ஒதுங்கி அவரவர் வாகனங்களை ஸ்டாண்டிட்டனர். “அப்புறம்?” “ரொம்ப சந்தோஷமா இருக்க போல சீனி…” “ஹிஹி… ஆமா… எங்க மோதானியின் சாதனைகளை நினைச்சா எனக்கே மார்பளவு 65 இஞ்ச் ஆகுது!” “வெடிச்சிறப் போகுது நெஞ்சு. நாட்டை பிடித்த ஒன்பதரை நாட்டுச் சனி உங்க மோதானி. பீடையைக் கைகழுவ நேரம் பார்த்துக்கிட்டு இருக்கம்!” “அதெல்லாம் நடக்காது. மோதானியின் டாப்கிளாஸ் சாதனைகளில் ஒன்றாக சிந்தியாவின் பெயர் மாற்றம் இருக்கப் போகிறது. ‘சாரத்’ எவ்வளவு இனிமையான பெயர்!” “இருபத்தெட்டு எதிர்க்கட்சிகள் ஒன்னு கூடி கூட்டணி அமைச்சிருக்கிறது, உங்க மோதானிக்கு பீதியைக் கிளப்பிருச்சு. பிரதீப்ஷாவுக்கு அல்லு விட்ருச்சு. உங்க பிஎஸ்எஸ்ஸுக்கு பேதியை பிடுங்கி விட்ருச்சு!” “ஹ… ‘சாரத்’ என்கிற பெயர் மாற்றத்துக்குப் பின்னால் ஒரு மிகப்பெரிய ராஜதந்திரம் ஒளிந்திருக்கிறது உதயா!” “அப்படி என்ன ராஜதந்திரம்?” “மோதானி அரசு 105 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது என உபிகள் புலம்புகின்றனர். கிருணாச்சலசத்தில் கோனா நுழைஞ்சதுக்குப் போய் வாயிலும் வயிற்றிலும் லபோதிபோன்னு அடிச்சுக்கிறாங்க. சிந்தியான்னு பெயர் இருக்கும் போதுதானே கடன் வாங்கினோம்? இப்ப எங்க பெயர் சாரத் எங்களுக்கும் சிந்தியா வாங்ன கடனுக்கும் துளி சம்பந்தமில்லை என கடன் கொடுத்தவனை விரட்டுவோம். சிந்தியால சில இடங்களை புடிச்சோமா சாரத்தில் சில இடங்களை பிடிச்சோமான்னு கன்ப்யூஸ் ஆகி பிடிச்ச இடத்தை விட்ருவான் கோனாக்காரன்!” “அரைகுறை மங்கியாக இருந்த நீ முழு மங்கியா மாறிட்ட சீனி!’ “சாரத்’ பெயர் மாற்றத்துக்கு அறிவியல்பூர்வமான காரணம் ஒன்னு சொல்றேன் கேளு உதயா!” “சொல்லு…” “நிலாவுக்குப் போன கிந்தராயன் விண்வெளில இருந்து பாத்தப்போ சிந்தியா நாடு நாடு ‘சாரத்’ என்கிற எழுத்து வடிவில் தெரிஞ்சிருக்கு, ‘சாரத்’ என்கிற சொல்லில் சா-ர-த் எனும் மூன்று எழுத்துகள் உள்ளன. ‘சா’ என்பது மித்வோ குணம். ‘ர’ ரஹிஜோ குணம். ‘த்’ என்பது தங்மோ குணம். இந்த மூன்று குணங்களும் இணைந்த ‘சா—ர-த்’ என்பது சக்தி வாய்ந்த மந்திரம். ஒருமுறை கான்ஸ்டீன் விண்வெளி ஆராய்ச்சி செய்யும்போது ‘சாரத்’ எனும் ஒலி பிரபஞ்சத்தில் இருந்து கேட்பதை உணர்ந்தார். ‘சாரத்’ என ஒருமுறை சொல்வது கிக் வேதத்தில் இருக்கும் சக்தி வாய்ந்த மந்திரங்களை ஆயிரம் முறை சொல்வற்குச் சமம். ‘சாரத்’ என்று சொன்னால் நீண்ட நாள் நோய் குணமாகும். கடன் பிரச்சனை தீரும். பஸ்ஸில் போனால் வாந்தி வராது, ஏடிஎம்மில் நீங்கள் எத்தனை முறை பணம் எடுத்தாலும் உங்கள் வங்கிக் கணக்கில் பணம் குறையாது.” “அட பைத்தியக்கார பக்கி… மங்கித்தனம் தொத்து நோயா? படிச்சவன், படிக்காதவன், சயின்டிஸ்ட், கிஸ்ரோ டைரக்டர், ஜட்ஜ், போலீஸ்காரன், இப்படி எல்லார்கிட்டயும் தாறுமாறா பரவி இருக்கு. துட்லரின் பெர்மனி ஆகிக்கிட்டு இருக்கு சிந்தியா…” “எங்களைக் கழுவிக் ழுவி ஊத்தினாலும் துளி வெக்கப்பட மாட்டோம். தொடர்ந்து மங்கிதனம் செய்வோம்!” “சாரத்னு பெயர் மாத்தறதுக்கு பதில் ‘வல்லரசு’ என்று பெயர் மாத்திடுங்க. நாட்டை வல்லரசு ஆக்கிட்டோம்னு கும்மாளம் போடலாம் நீங்க!” “வல்லரசு சாரத்’-னு பெயர் மாத்திட்டா போச்சு!” “பெயர் மாற்றத்துக்கு 15000 முதல் 20000 கோடி ரூபாய் வரை செலவாகும்!” “ஆனா ஆகிட்டுப் போகுது டிலோன் ஸ்ரீபங்கானும், திர்மா ஸயான்மர்ன்னும், கிர்ஷியா டர்ரான்னும், டயாம் சேய்லாந்துன்னும், டோலந்து பெதர்லாந்துன்னும், பம்பூச்சியா லம்போடியான்னும், காடீசியா டும்பாவேன்னும் பெயர் மாறிக்கலையா?” “நீ சொன்ன சில நாடுகள் நியாயமான காரணங்களுக்காகத் தங்கள் பெயர்களை மாற்றி இருக்கலாம். கடந்த ஒன்பதரை ஆண்டுகளில் மோதானி செய்த அலங்கோலங்களைப் பட்டியலிடுகிறேன் கேள். நாணயமதிப்பிழப்பு நடவடிக்கை 13000கோடி செலவு. மைரோனா ஊரடங்கால் நூற்றுக்கணக்கானோர் மரணம். வாழ்வுரிமை திருத்த சட்டத்தால் கிஸ்ஸாம் அகதி மாநிலம் ஆயிற்று. கிஸ்லாமிய பெண்களின் குடும்ப வாழ்க்கையை சீரழிக்க பத்தலாக் சட்டம். கார்ப்பரேட்களுக்கு 14,5லட்சம் கோடி கடன் தள்ளுபடி. பந்தி திணிப்பு. செத்துப் போன உமஸ்கிருதத்தை தலையில் வைத்து கூத்தாடுதல். கட்சி சொத்தை 6500கோடியாக பெருக்கியது. 90சதவீத கிரிமினல்களை லஞ்ச ஊழல் பேர்வழிகளை வைத்து கட்சி நடத்துதல். கட்சிதாவல் தடை சட்டத்தை கேலி கூத்தாக்கி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைத்தல். மதவெறி இனவெறி அரசியல் பண்ணுதல். பணிப்பூர், தரியானா, ச.பி.,யில் இரத்தவெறியாட்டம். வேலைவாய்ப்பின்மை. விலைவாசி உயர்வு. டாலருக்கு நிகரான சிந்திய ரூபாய் மதிப்பு சரிவு. சுகாதார கட்டமைப்பின்மை. வடக்கத்தியர்களை தெற்கில் குடியமர்த்துவது. வங்கி ரயில்வே பணிகளில் கிமிழர்களை முழுமையாக புறக்கணித்தல். குலக்கல்வி திட்டத்தை அமுல்படுத்தல். இரண்டு சதவீத உயர்சாதி சிந்துகள் கால்களில் 140கோடி சிந்தியரை விழுந்து கிடக்க செய்தல். நீதிதுறையை பாவிமயமாக்குதல் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்… மோதானியின் ஒன்பதரை ஆண்டு ஆட்சி நாட்டை நூறு வருடங்களுக்கு பின்னே கொண்டு சென்றுவிட்டது. மோதானி எந்த அழிவு காரியம் செய்தாலும் அதனை ஆதரித்து பேசி எழுதுகிறீர்களே… இதனை தெரிந்து செய்கிறீர்களா, தெரியாமல் செய்கிறீர்களா?” “பேதர்களும் உயர்ஜாதி சிந்துகளும் ஒன்று. எங்களுக்கான ராஜா மோதானி. அவரை ஆதரிப்பதே எங்கள் உயிர்மூச்சு!” “சிந்தியாவை ‘சாரத்’ என மாற்றினால் என்னென்ன குழப்படிகள் நேரும் தெரியுமா? சிந்திய ரிசர்வ் வங்கி, சிந்திய தொழில்நுட்ப கழகம், சிந்திய ரயில்வே, சிந்தியா போஸ்ட், சிந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், சிந்திய தேர்தல் ஆணையம், சிந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பெயர்களை மாற்ற வேண்டிவரும்!” “மாத்திட்டு போரோம்…” “பாஸ்போர்ட், பேஜார்அட்டை, பிங்பாங் அட்டை, ரேஷன் அட்டை, வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமை, சிண்டியன் கரன்ஸி இப்படி எல்லா விஷயங்களையும் பெயர் மாற்றவேண்டும்!”  “மாத்திட்டுப் போறோம்!” “எதிர்கட்சி கூட்டணி ‘சிண்டியா’ன்னு பேர் வச்சதினால ‘சாரத்’னு பேர் மாற்றம் செய்றீங்க சரி… நாளைக்கே எதிர்கட்சி கூட்டணி தங்களின் பெயரை ‘சாரத்’னு மாத்தி வச்சுக்கிட்டா என்ன பண்ணுவீங்க!” சிரித்தான் சீனிவாசன். சிரிப்பு ஹிஸ்டீரிகலாய் இருந்தது. கண்கள் கொடூரமாய் மின்னின. “கினாதன் ராஷ்டிரம் என மாற்றுவோம்…” “சீனி! ஒரு முக்கியமான விஷயத்தை உனக்கும் உன் சகமங்கிகளுக்கும் வலியுறுத்த வேண்டி இருக்கிறது. சிறுபான்மை மக்கள் இல்லாத சிந்தியா சாத்தியமே இல்லை. ஒரு கட்டத்தில் சிந்தியா ரஷ்யாபோல 28மாநிலங்களும் 8யூனியன் பிரதேசங்களும் தனித்தனி நாடுகளாய் சிதறி விடும். சோற்றுக்கும் தண்ணீருக்கும் மத்தியோப்பியர்கள் போல் அடித்துக் கொள்வோம். ஸ்ரீபங்கா போல திவாலாகி விடுவோம். தேர்தல் ஜனநாயகத்தை கிஜேபி ரத்து செய்துவிடும். சிந்தியாவோ சாரத்தோ கற்காலக் காட்டுமிராண்டிகள் நாடாகிவிடும். அப்படி ஒரு மோசமான சிந்தியாவை நம் மகன்களுக்கும் நம் பேரன் பேத்திகளுக்கும் விட்டுச் செல்லப் போகிறோமா?” “சும்மா பூச்சி காட்டாதே உதயா… ஒட்டுமொத்த சலேசியா கண்டமும் ‘அகண்ட சாரத்’ ஆகும் நாள் வெகுதூரத்தில் இல்லை!” “கண்களை திறந்து கொண்டே அதளபாதாளத்தில் தலைகீழாய் விழுகிறீர்கள்!” “அப்படித்தான் விழுவோம் உதயா!” “உன் சீனிவாசன் என்கிற பெயர் உனக்கு பிடித்திருக்கிறதா?” “அறுபது வருடங்களுக்கு முன் என் அப்பன் எனக்கு இந்தப் பெயரை வைத்து விட்டான்… அபிஷ்டு… பிரம்மஹத்தி… அசடு… நான் என் பெயரை கவர்மென்ட் கெஜட்ல குடுத்து மாத்திக்கப் போறேன்!” “புதுசா என்ன பெயர் வச்சுக்கப் போற?” “ரொம்பதூரம் போய்ட்டேன்… திரும்பி வர முடியாது… எங்களை மங்கி மங்கின்னுதானே கேலி பண்றீங்க… கேலி பண்ற பெயரையே வச்சுக்கிட்டா?” ‘மங்கின்னா லட்சக்கணக்கான மங்கிகளில் நீயும் ஒருவன் என்றாகிறது உன் தனித்தன்மை பாழாகுமே?” சீனிவாசனின் முகம் சூரியனித்தது. “இன்றிலிருந்து என் பெயர் கினாதன் மங்கி…” நூறுமுறை தனக்குள் சொல்லி பார்த்துக் கொண்டான், “ஆயிரம் நஷ்டங்கள் வந்தாலும் இனி என் பெயர் கினாதன் மங்கிதான்… கினுதர்மம் வாழ்க! பர்ணாசிரமம் வாழ்க! குலத்தொழில் வாழ்க வாழ்க!” மானசீகத்தில் லட்சம் மங்கிகள் கூடிக் குலவை ஒலி எழுப்பினர்.

சாபத்தில் பிறந்தவர்கள்

சாபத்தில் பிறந்தவர்கள்

கவிதை: செ. புனித ஜோதி நாங்கள்நதியின் சாபத்தில் பிறந்தவர்கள்எப்போதும் எங்களோடுஓடிக்கொண்டிருக்கிறதுகண்ணீர் நாங்கள்மண்ணின் சாபத்தில் பிறந்தவர்கள்எப்போதும் குண்டு வெடிப்பில்ஈந்து கொண்டிருக்கிறோம்உடலை நாங்கள்கடலின் சாபத்தில் பிறந்தவர்கள்உண்பதற்கும் உடுப்பதற்கும்உறங்குவதற்கும் இடமின்றிபரந்த தேசத்தில் தினம் தினம்அலைக்கழிக்கப்படுகின்றோம்அலைகளாய் நாங்கள்காற்றின் சாபத்தில் பிறந்தவர்கள்மூச்சுவிடக்கூடஉரிமையற்று இருக்கின்றோம் அத்தனையும்மனிதமற்ற மனங்களின்வன்மத்தில் விளைந்தவிளைச்சல்கள் அவர்களின் ரொட்டித் துண்டுகளில்பழக்கூழ் போலத் தடவித்தடவிஉண்டு மகிழ்கின்றனர்எங்கள் குருதியை காட்டாற்று வெள்ளமாய்ப் பெருகியோடும்அரசியல் ஆதிக்கத்தில்திசைக்கொன்றாய்த் திரிகின்றோம்செத்த பிணமாய் ஏனெனில் நாங்கள்திரிசங்கு நேரத்தில் பிறந்தஅகதிகள்

நிறைவேறாத ஆசையுடன் தூக்கிலேறிய மாவீரன்

நிறைவேறாத ஆசையுடன் தூக்கிலேறிய மாவீரன்

பகத்சிங் பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை பகத்சிங் இருந்த அறையில் ஏகப்பட்ட புத்தகங்கள் நிறைந்திருந்தன. இவையெல்லாம் ஜெயதேவ் மூலமாக வந்த புத்தகங்கள். கொஞ்ச நாட்களாகவே அந்தச் சிறையறை ஒரு நூலகம்போல் மாறியிருந்தது. வரவழைக்கப்பட்டப் புத்தகங்களில் ‘வரலாற்றுப் பொருள் முதல்வாதம்’ என்ற நூல் இல்லை. பஞ்சாப் பொது நூலகத்திலிருந்து வரலாற்றுப் பொருள் முதல்வாதம் என்ற நூலைப் பெற்று அனுப்பிவைக்குமாறு ஜெயதேவுக்கு ஒரு கடிதம் எழுதினார் தணியாத அறிவு தாகம் கொண்டிருந்த பகத்சிங். ‘ஒன்றுக்கு மேற்பட்ட வாழ்க்கைகள் வாழ எனக்கு வாய்ப்புத் தரப்பட்டாலும் நான் அந்த ஒவ்வொரு வாழ்க்கையையும் என் தேசத்தின் நலனுக்காகவே அர்ப்பணம் செய்வேன்’ என்று பிரகடனம் செய்த, முதலாம் லாகூர் சதி வழக்கின் நாயகன் கர்த்தார் சிங்கைத் தனது குருவாக ஏற்றுக்கொண்டவர், இரண்டாம் லாகூர் சதி வழக்கின் நாயகன் பகத்சிங். பஞ்சாப் நேஷனல் காலேஜ் என்ற கல்லூரியில் பகத்சிங் படித்துக்கொண்டிருந்தபோது, அக்கல்லூரியில் பணியாற்றிக்கொண்டிருந்த அவருக்கு நெருக்கமான ஆசிரியரான வித்யாலங்கர் என்பவர் மூலம் அரசியலும் ஆன்மீகமும் கலந்த அரவிந்தரைப் போன்ற மனிதரான சச்சின் சன்யால் என்ற புரட்சியாளரிடம் அறிமுகமானார். அவர் வழியாக உலக அரசியல், இந்திய அரசியல், இந்திய அரசியலில் வெள்ளையன் வந்த கதை, பொருளாதாரப் பிரச்சினைகள் எனப் பல விஷயங்களை அறிந்துகொண்டார். இத்தகைய சூழலில் சட்ட மறுப்பு இயக்கம் வந்தபோது, அதில் முழு வேகத்தோடு பகத்சிங் இறங்கினார். கோரக்பூர் மாவட்டத்தில் செளரி சௌரா என்ற கிராம மக்களிடம் கொந்தளிப்பு அதிகரித்திருந்ததால், காவல் நிலையத்தைத் தாக்கி 22 காவல் துறையினரைக் கொளுத்திவிட்டனர் என்ற செய்தியை அறிந்து, ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்திவிட்டார் காந்தி. பகத்சிங் போன்ற ஏராளமான இளைஞர்களைத் திசை திருப்பிய வரலாற்றுப் போக்கின் கரு இதுதான். போராட்டம் வாபஸ் பெறப்பெற்றதால் இளைஞர்கள் பலர் தனித்தனியாக இயக்கம் கண்டனர். நவஜவான்பாரத் சபா என்ற இயக்கத்தைத் தோற்றுவித்து, அதன் பொதுச்செயலாளராக பகத்சிங் விளங்கினார். 1921ஆம் ஆண்டில் காந்தியால் ஆரம்பிக்கப்பட்ட சட்ட மறுப்பு இயக்கம் 1922இல் திரும்பப் பெறப்பட்டது. அதிலிருந்து 1928ஆம் ஆண்டு வரை எந்தவிதமான போராட்டமும் இந்தியாவில் நடக்கவில்லை. விடுதலைப் போராட்டம் மந்தமாகவே போய்க்கொண்டிருந்தது. 1928இல் சைமன் என்கிற வெள்ளையன் தலைமையில் 10 பேர் கொண்ட குழு இந்தியாவிற்கான அரசியல் அமைப்புச் சட்டத்தை நிர்ணயிப்பதற்காக வந்தது. இந்தக் குழுவில் இந்தியர் யாரும் இடம்பெறவில்லை என்ற செய்தி நாடு முழுவதும் கோபக் கனலை எழுப்பியது. ‘இந்திய நாட்டின் எதிர்காலத்தை உருவாக்குவதற்கு நீ யார்? இந்த நாட்டில் வியாபாரம் செய்ய வந்த நீ, ஆளத் தொடங்கி விட்டாய். ஆள வந்த உன்னை முற்றிலுமாக அகற்றியே தீருவோம்’ என்று கூறி, ‘சைமனே திரும்பி போ’ என்று முழக்கமிட்டுத் தங்களது கோபத்தை இந்திய இளைஞர்கள் வெளிப்படுத்தினர். அந்த நேரத்தில், சந்திரசேகர ஆசாத்தால் தொடங்கப்பட்ட இந்துஸ்தான் குடியரசுச் சங்கத்தின் செயற்குழு கூடி, அதன் பெயரை ஹிந்துஸ்தான் சோசலிசக் குடியரசுப் படை என்று மாற்றிக்கொண்டது. சங்கம் என்று இருந்ததை, படை என்று மாற்றியதுடன் அதனுள் சோசலிசம் என்பதைப் பொதிந்து வைத்தார்கள். சோசலிசம், உலகத்தில் நம்பத் தகுந்த மிகச்சிறந்த விஞ்ஞான எழுச்சியாக விஸ்வரூபம் எடுத்துக்கொண்டிருந்த அந்தக் காலத்தில்தான், தமது அமைப்பின் பெயரை இளைஞர்கள் அவ்வாறு மாற்றினார்கள். இந்தப் படை சார்பாக சைமன் கமிஷனை எதிர்த்துப் பகிரங்கமாக ஆர்ப்பாட்டம் செய்வதோடு, கருப்புக் கொடி காட்டவும் முடிவெடுத்து, முடிவின்படி செயல்பட்டனர். தொடர்ந்து நாட்டின் விடுதலைக்காகப் போராடினர் பகத்சிங்கும் அவரது தோழர்களும். ‘புரட்சி என்றால் குண்டுகளையும் துப்பாக்கிகளையும் ஆராதனை செய்வதல்ல; அநீதியை அடித்தளமாகக் கொண்டுள்ள இன்றைய சமுதாய அமைப்பினை மாற்றி அமைப்பது என்பதுதான் புரட்சி என்ற சொல்லின் உண்மையான பொருள்; இப்போதுள்ள அரசாங்க அமைப்பு தொடருமேயானால் ஒரு பெரும் போராட்டம் வெடிக்கும். அதில் நாங்கள் முன்வரிசையில் இருப்போம்’ என்று அந்த இளைஞர் கூட்டம் வேலை செய்து வந்தது. ‘கையில் புத்தகம் இல்லாமல் பகத்சிங்கைப் பார்த்ததே கிடையாது’ என்கிறார் அவரது நண்பர் சிவ வர்மா. ஆரம்பக் காலங்களில் விக்டர் ஹியூகோ, டால்ஸ்டாய், பெர்னாட்ஷா, தாஸ்தோவஸ்கி, சார்லஸ் டிக்கன்ஸ் ஆகியோரின் நூல்களை விரும்பிப் படித்தார். கம்யூனிசத்தில் ஆர்வம் ஏற்பட்ட பிறகு, மாக்சிம் கார்க்கி, லெனின் ஆகியோரின் நூல்களைப் படித்தார். இந்தி, ஆங்கிலம்,பஞ்சாபி, உருது ஆகிய மொழிகளில் எழுதவும் பேசவும் பகத்சிங்கிற்குத் தெரியும். உருது மொழியில் உள்ளம் உருகும் கவிதைகளைப் படைத்தார். படிப்பைவிட, தேச விடுதலையும் கம்யூனிசச் சிந்தனைகளும் அவரை முழுமையாக ஆக்கிரமித்தன. தன்னுடைய சீக்கிய மத அடையாளமான தலைப்பாகை, தாடி உள்ளிட்டவற்றை அகற்றி, இந்தியன் என்ற உணர்வைத் தவிர வேறு அடையாளமே இருக்கக் கூடாது என்று உறுதியாக இருந்து, முறுக்கு மீசையும் தலையில் தொப்பியுமாக மாறினார். வாழ்வின் குறுகிய காலத்திற்குள்ளேயே அரசியல், கடவுள்,மதம்,மொழி, கலை, இலக்கியம், பண்பாடு, காதல், அழகு, தற்கொலை, நடப்பு நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு ஆய்வுப் பொருள்களிலும் அவர் எண்ணற்ற நூல்களை எழுதிக் குவித்தார். பகத்சிங் சிறையில் இருந்தபோது, ‘கனவுலகத்திற்கு அறிமுகம்’, ‘நான் ஏன் நாத்திகனாக இருக்கிறேன்?’, ‘சோஷலிசத்தின் கோட்பாடுகள்’, ‘இந்தியாவில் புரட்சி இயக்கத்தின் வரலாறு’, ‘மரணத்தின் வாசலில்’ ஆகிய நூல்களை படைத்தார். இவற்றில் கனவுலகத்திற்கு அறிமுகம், நான் ஏன் நாத்திகனாக இருக்கிறேன்?ஆகிய படைப்புகள் மட்டுமே இப்போது இருக்கின்றன. மற்ற படைப்புகளும் சிறையிலிருந்து ரகசியமாக வெளியே கொண்டுவரப்பட்டாலும் 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது – அரசு அடக்குமுறை எந்திரம் முழு வீச்சில் இருந்த போது – அக்கையெழுத்துப் பிரதிகள் அழிக்கப்பட்டுவிட்டன. பேச்சையும் எழுத்தையும் வெற்றிகரமாக உபயோகித்துக்கொண்ட பகத்சிங், விவாதம் செய்வதில் வல்லவர். சோஹன் சிங் ஜோஷ் குருமுகி, உருது ஆகிய மொழிகளில் மாத இதழாக அமிர்தசரஸில் நடத்திய இதழில் பல புனைபெயர்களில் கட்டுரைகள் எழுதினார். ஹிந்தியில் பிரதாப், பிரபா (கான்பூர்), மஹாரதி (டெல்லி), சாந்த் (அலகாபாத்) ஆகிய பத்திரிகைகளில் எழுதினார். சீக்கியர்களின் இலக்கியம் முழுவதும் குருமுகி எழுத்து வடிவில் உள்ளது. அதன் உள் கூறுகளில் ஹிந்தி அதிக அளவில் இருந்தாலும் பஞ்சாபியே அதன் பிரதான கூறாகும். எனவே சீக்கியர்கள் குருமுகியில் எழுத்து வடிவத்தில் எழுதப்படும் பஞ்சாபியைத் தங்கள் மொழியாக ஏற்றுக்கொண்டுள்ளனர். பஞ்சாப் ஹிந்தி சாகித்ய சம்மேளனம் 1924இல் ஏற்பாடு செய்திருந்த பஞ்சாப் மொழி மற்றும் எழுத்து வடிவம் பற்றிய கட்டுரைப் போட்டிக்கு பகத்சிங் எழுதிய கட்டுரையில், ‘மொழியை ஒரு மதப் பிரச்சினையாக மாற்றாமல் அதற்கு ஒரு விரிவான தோற்றத்தைத் தர வேண்டும்’ என்கிறார். ‘ஒவ்வொருவரும் தங்கள் மத நம்பிக்கையின் அடிப்படையிலேயே அணுகும் தடைகளை அகற்றி, பஞ்சாபி மொழி மற்றும் எழுத்து வடிவம் தொடர்பாக இலக்கிய விழிப்புணர்வை சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள் மத்தியில் ஏற்படுத்திட வேண்டும். பரஸ்பர விவாதங்களின் மூலமே தீர்மானித்திட வேண்டும். இதற்கு மத அடிப்படையை விட்டொழித்து அணுக வேண்டும். அமிர்தசரசிலிருந்து வெளிவரும் பிரேம் போன்ற இதழ்களின் மூலம் மொழியை மேம்படுத்த வேண்டும். பஞ்சாப் பல்கலைக்கழகத்திடமிருந்து பஞ்சாபி மொழிக்கான அங்கீகாரத்தைக் கோர வேண்டும். இதன் மூலமே பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும். இடைஞ்சல்கள் எல்லாம் இவ்வாறு அகற்றப்பட்ட பின்னர், பஞ்சாபி மொழி ஓர் அழகிய, தரமான இலக்கியங்களைப் படைத்திடும் மொழியாக மாறிடும். பஞ்சாபி மொழியும் இந்தியாவின் நல்ல மொழிகளுக்கு இடையில் வைத்து எண்ணப்படக்கூடிய ஒன்றாகத் திகழும்’ எனக் கூறியதன் மூலம், மொழி மீது பகத்சிங் கொண்டிருந்த கருத்து தெள்ளத் தெளிவாக இருக்கிறது எனலாம். அக்கட்டுரையைப் படித்த சாகித்ய சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் அதை மிகவும் போற்றிப் பாராட்டினார். அக்கட்டுரைக்கு 50 ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. அந்தக் கட்டுரை, 1933 பிப்ரவரி 28 அன்று ஹிந்தி இதழ் ஒன்றில் பிரசுரிக்கப்பட்டது. தலைமறைவு வாழ்க்கையின்போது, பகத்சிங் எப்போதும் புத்தகங்களையும் துப்பாக்கியையும் தன்னுடையே வைத்திருந்தார். நாட்டின் மீது, இலக்கியத்தின் மீது, மொழியின் மீது அளவிடற்கரிய பற்றுக் கொண்டிருந்த பகத்சிங்கின் நிறைவேறாத ஓர் ஆசையும் உண்டு. தூக்கிலிடப்படுவதற்கு முன் அவரது கடைசி ஆசையை அதிகாரிகள் கேட்டபோது, சிறையில் துப்புரவுத் தொழிலாளியாக இருந்த பேபே என்ற பெண்ணின் வீட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட உணவைச் சாப்பிட வேண்டும் என்ற தனது கடைசி ஆசையை வெளிப்படுத்தினார். அதிகாரிகளின் விழிகள் வியப்பில் ஆழ்ந்தபோது, அதற்கான விளக்கத்தை பகத்சிங் கொடுத்தார். ஒரு குழந்தையின் மல ஜலங்களை முகம் சுளிக்காமல் தூய்மை செய்பவரை ‘தாய்’ என்கிறோம்! இங்கே இத்தனை பேரின் கழிவுகளை அகற்றி, அந்தப் பணியைச் செய்கிற அவரும் நம் அனைவருக்கும் ‘தாய்’தானே! அதனால்தான் அந்த அன்னையின் கைகளால் கடைசி உணவைச் சாப்பிட விரும்புகிறேன் என்று சொன்னபோது, கேட்டவர் கண்களில் நீர் தழும்பியது! அதன்படி, அந்தப் பெண்ணும் 23ஆம் தேதி உணவு தயாரித்து எடுத்து வந்தார். ஆனால் திடீரென்று முன்னதாகவே தண்டனை நிறைவேற்றப்பட்டதாலும் வெளியிலிருந்து சிறைக்குள் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டதாலும் அவரது கடைசி ஆசை நிறைவேறாது போயிற்று. தூக்கிலிடப்படுவதற்குச் சற்று முன்னர் வரை, லெனின் எழுதிய ‘அரசும் புரட்சியும்’ என்ற நூலை வாசித்துக்கொண்டிருந்தார் பகத்சிங். தூக்கிலிடுவதற்கு அதிகாரி அழைத்ததும் அதிகாரியைப் பார்த்து, ‘ஒரே ஒரு அத்தியாயம்தான் இருக்கிறது. எனது கடைசி அத்தியாயம் முடிவதற்குள் அந்த அத்தியாயத்தைப் படித்து முடித்துவிடுகிறேன்’ என்று கூறினார். அவருடன் இருந்த தோழர்கள், ‘இந்த நிலையிலும் படித்துக்கொண்டிருக்கிறாயே?!’ என்று கேட்டபோது, ‘அறியாமையோடு பகத்சிங் இறந்துவிட்டான்’ என்று யாரும் கூறக்கூடாது. அறிவோடுதான் பகத்சிங் இந்த தேச விடுதலைக்காக மரணத்தை ஆலிங்கனம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறான்’ என்றார். ஏற்றத்தாழ்வு இல்லாத,சாதி, மத பேதம் இல்லாத, எல்லாரும் இந்தியன் என்ற பெருமித முயற்சியோடு, மண்ணிற்காக மகிழ்ச்சியுடன் மடிந்தாரே பகத்சிங்! அவரை நாம் என்றும் நினைத்துப் போற்ற வேண்டும்; அவர் வழி நடக்க வேண்டும். தூக்கு மேடைஏறுவதற்கு முன்பாகச் சிறை அதிகாரிக்கு எழுதிய கடிதத்தில், ‘இறுதிப் போராட்டம் வெகு விரைவில் நடக்கவிருக்கிறது. அந்தப் போராட்டம் தீர்மான முடிவை ஏற்படுத்தும். ஏகாதிபத்திய, முதலாளித்துவ சக்திகளின் ஆயுட்காலம் எண்ணப்பட்டு வருகிறது. இந்தச் சக்திகளை ஒழித்துக்கட்டும் போராட்டத்தில் நாங்களும் பங்கு கொண்டோம். அதற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம்’ என்றார். இன்று அவரது பிறந்தநாளில் (28.09.1907) அவரது நினைவுகளைப் போற்றுவோம்.

மக்களின் சொர்க்கம்; அரசின் தலைவலி

மக்களின் சொர்க்கம்; அரசின் தலைவலி

முகப்புக் கட்டுரை நான் பணியில் இருந்தபோது சக பெண் தோழர்கள் வெளிநாடு போவதற்கு அனுமதி வேண்டி விண்ணப்பிப்பார்கள். அது ஒரு பெரிய நடைமுறை. எல்லா மட்டங்களுக்கும் சென்று, காரண காரியங்கள் ஆராயப்பட்டு, மூன்று மாதம் கேட்டால் இரண்டு மாதம் விடுமுறை தருவார்கள். நாங்கள் சங்கத்தின் மூலம் போய்ப் பேசி, மூன்று மாதங்கள் வாங்கித் தருவோம். இதில் என்ன சொல்ல வருகிறேன் என்றால், நிறைய பேர் கனடாவிற்குச் செல்ல விண்ணப்பிப்பார்கள். இதன் பின்னால் உள்ள ரகசியம், பணி ஒய்வு பெற்ற பின்னரே எனக்குத் தெரிந்தது. அங்கே தங்கியிருந்த தோழி ஒருவர், அந்த நாட்டைப் பற்றி, சூழல் பற்றி, ஒழுங்குமுறை பற்றி, அரசு ஆட்சி பற்றியெல்லாம் பேசுவார். கல்வி அங்கே எப்படிச் சிறந்து விளங்குகிறது என்று சொல்வார். Hassle free education என்பார். தற்போது சில வாரங்களாக, கனடா இந்தியா உறவுகள் எப்படி மாறிவிட்டன?! இந்தியாவிற்கான விசா அனுமதி நிறுத்தப்பட்டிருக்கிறது. கனடாவில் வசிக்கும் இந்தியர்கள் பத்திரமாக இருக்கவும் என்று இந்திய வெளியுறவுத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. இரு நாடுகளின் வெளிநாட்டுத் தூதுவர்கள் (ambassadors) திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர். ஏன் இந்த நிலைமை? என்ன நடக்கிறது கனடாவில்? ஒரு பருந்துப் பார்வை பார்க்கலாம். வெளிநாடு அல்லவா? மேலிருந்து பார்த்தால் போதும். கனடா ஒரு சர்வ சுதந்திர ஜனநாயக நாடு என்று தன்னைப் பிரகடணப்படுத்திக் கொண்ட நாடு. மக்களின் உரிமைகளை மதிக்கிறோம் என்று காண்பிக்கும் நாடு. இதற்கு சாட்சியே, அங்கே சுதந்திரமாக இயங்கிக்கொண்டிருக்கும் காலிஸ்தான் ஆதரவு இயக்கங்கள். அந்த இயக்கத்தின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கடந்த சில வாரங்களுக்கு முன் அடையாளம் தெரியாதவர்களால் சுடப்பட்டார். அதில் இந்திய ஏஜென்சிகளுக்குப் பங்கு உள்ளது என்று அதிகாரப் பூர்வமாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே அறிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையே தலைவலி ஆரம்பித்தது. தூதுவர்கள் விலக்கிக்கொள்ளப்பட்டனர். கடந்த வாரம் டெல்லியில் நடந்த G 20 மாநாட்டில்கூட இரு நாடுகளுக்கும் தனிச் சந்திப்பு (one to one talk) நடைபெறவில்லை என்று தகவல் கிடைக்கிறது. வெளியுறவுத்துறை அதிகாரிகள் பேசினார்கள் தவிர, தலைவர்களிடையே சந்திப்பு நடைபெறவில்லை. இதற்கான காரணங்களை ஆராயும் முன்னர், நம் இரு நாடுகளுக்கிடையே தொடர்பு, உறவுகள் எப்படி ஆரம்பித்தன, இருந்தன என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னால், விக்டோரியா மகாராணியின் குடையின் கீழ் இந்தியா, கனடா போன்ற நாடுகள் இருந்த காலம். “எங்கள் சாம்ராஜ்யத்தில் எங்கு சென்றாலும், இந்தியர்களுக்குப் பாரபட்சம் காட்டப்படமாட்டாது; ஆங்கிலேயர்களும் இந்தியர்களும் சம உரிமை பெறுவார்கள்” என்று பிரிட்டிஷ் அரசு அறிவித்ததன் பேரில், இங்கிருந்து ஓய்வுபெற்ற ராணுவத்தினர் பலர் கனடாவில் குடியேறினர். ராணுவத்தினர் எனில், பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த சீக்கியர்கள் அதிகம் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. இப்படித்தான் சீக்கியர்களின் குடியேற்றம் கனடாவில் தொடர்ந்து நடந்தது. பல இந்தியர்களும் குடியேறினார்கள். இந்தியா போன்ற நாடுகள் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து சுதந்திரம் அடைந்த பின்பு, அவை காமன்வெல்த் நாடுகள் என்ற பெயரில் ஒன்றிணைந்தன. பரஸ்பர ஒற்றுமையும் வணிக ஒப்பந்தங்களும் ஏற்பட்டன. 1949இல் பிரதமர் நேரு, கனடா சென்று ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் என்று அழைக்கப்படும் கனடா பாராளுமன்றத்தில் உரையாற்றினார். 1950இல் கொழும்புவில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாடு பல ஒப்பந்தங்களுக்கு வழிகோலியது. விவசாயம் சார்ந்த உணவுப் பொருட்கள், இயந்திரங்கள் சார்ந்த தொழில்நுட்பம் போன்றவற்றில் இந்தியாவுடன் கனடா ஒப்பந்தம் செய்துகொண்டது. தமிழ்நாட்டின் குந்தா நீர் மின்னேற்ற நிலையம், கனடாவின் ஒத்துழைப்புடன் நிறைவேறியது. நன்றாகச் சென்றுகொண்டிருந்த பயணத்தில் 1974இல் பொக்ரான், ப்ரேக் போட்டது. இந்தியா நடத்திய ‘சிரிக்கும் புத்தர்’ அணுசக்தி சோதனையைத் தங்கள் நாட்டு அணு உற்பத்தி சாதனமான CIRUS உலையைக்கொண்டு நடத்தியது, ஒப்பந்த மீறல் என்று கனடா குற்றம் சாட்டியது. இரு நாடுகளுக்கிடையே விரிசல்கள் விழத் தொடங்கின. NPT என்று அழைக்கப்படும் அணுசக்தி எதிர்ப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று கனடா இந்தியாவைக் கட்டாயப்படுத்தியது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அதற்கு இடம் தரவில்லை. இந்தியா, பாகிஸ்தான் இரண்டும்தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகள். “இந்தியா அணுசக்தியின் எதிர்மறை விளைவுகளை ஆதரிப்பதில்லை. எனினும், அந்த ஒப்பந்தத்தின் சில பிரிவுகள், ஒரு சில நாடுகளுக்குப் பாரபட்சம் காட்டுவதாக இருக்கின்றன. எனவே நாங்கள் கையெழுத்திட வாய்ப்பு இல்லை” என்று இந்தியா அறிவித்தது. அந்த ஒப்பந்தத்தின்படி, நம் நாட்டின் அணு உற்பத்தி நிலையங்களை, சில குறிப்பிட்ட நாடுகளைக்கொண்ட ஏஜென்சிகள் பார்வையிடலாம். இதை இந்தியா ஒத்துக்கொள்ளவில்லை. 1971இல் அன்றைய பிரதமர்கள் இந்திரா காந்தி, பியர் ட்ரூடே (ஜஸ்டின் ட்ரூடேவின் தந்தை) 1985 ஜனவரி ஒரு மோசமான விமான விபத்து நிகழ்ந்தது. கனடாவின் டொராண்டோ நகரிலிருந்து டெல்லி வந்துகொண்டிருந்த AI 182 விமானம், வெடிகுண்டுத் தாக்குதலுக்கு உள்ளானது. விமானத்திலிருந்த 329 பேரும் உயிரிழந்தனர். இதில் கனடா நாட்டினர் அதிகம். அதற்கு முந்தைய ஆண்டில்தான் இந்திரா காந்தி கொல்லப்பட்டிருந்தார். விபத்திற்குக் காரணம் கனடாவில் இருந்த சீக்கியத் தீவிரவாதிகள் என்று கண்டுபிடிக்கப்பட்டது. குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டனர். நான்கு பேர்களுக்கு எதிராகக் குற்றம் சாட்டப்பட்டு, இந்தர்ஜித் சிங் ரேயாத் தண்டிக்கப்பட்டார். இந்த விபத்திற்கு முழுமுதற் காரணமாக, மூளையாகச் செயல்பட்ட, தல்வீந்தர் சிங் பர்மார், தண்டனை நிரூபிக்கப்படாமல் விடுதலையானார். இந்தியாவில் பிறிதொரு நாளில் அவர் என்கவுண்டர் செய்யப்பட்டார். இந்தியாவில் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டவர்கள், கனடாவில் காலிஸ்தான் அமைப்பின் பேரில் சுதந்திரமாக இயங்கி வந்தனர். கனிஷ்கா விமான விபத்திற்கான விதை, கனடாவில்தான் ஊன்றப்பட்டது. கனடாவில் தற்போதைய பிரதமரின் தந்தையின் காலத்திலேயே காலிஸ்தான் அமைப்புகள் இயங்கினாலும் தற்போதைய பிரதமரின் ஆட்சியில் அவர்களின் போராட்டங்கள் அதிகமானது. இவ்வளவு விஷயங்கள் நடந்தாலும் கனடாவில் சீக்கிய அமைப்புகள் அரசியல் கட்சியாகப் பரிமளித்தன. தேர்தலில் போட்டியிட்டு அமைச்சர்கள் ஆன வரலாறும் உண்டு. காலிஸ்தான் ஆதரவு பெற்ற ஜக்மீத் சிங், ட்ருடேவின் அமைச்சரவையில் பங்கு பெற்றார். அவரின் நம்பிக்கைக்கும் ஆளானார். தற்போதைய நிஞ்ஜார் கொலைக்கும் இந்தியாவைக் காரணம் காட்டுவதுகூட, அவருடைய உந்துதலால்தான் என்கின்றார் பழைய கனடா அமைச்சர் உஞ்சால் தோசஞ்ச். கனடாவின் “பேசுவதற்கான உரிமை” காலிஸ்தான் இயக்கங்களுக்குத் துணையாக இருப்பதாகவும், அதை அவர்கள் தவறாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்றும் அவர் கூறுகிறார். தோசன்ஞ் 2004 – 06 காலத்தில் கனடாவில் அமைச்சராக இருந்தவர். சீக்கியராக இருந்தாலும், காலிஸ்தான் ஆட்களால் தாக்கப்பட்டவர். இதுபோல சாத்வீக சீக்கியர்களுக்கும் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கும் சண்டைகள் நடப்பது சகஜம் என்கிறார் அவர். 2014இல் மோடி பிரதமர் ஆனபோது, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே, உங்கள் அமைச்சரவையில் இருக்கும் சீக்கியர்களைவிட, இங்கே அதிக அமைச்சர்கள் உண்டு என்று கிண்டலடித்ததும் உண்டு. 2008இல் போடப்பட்ட அணு உற்பத்திசார் ஒப்பந்தம் மூலமாக, இந்தியாவுடனான அமெரிக்கா, கனடா நாடுகளின் உறவு மேம்படத் தொடங்கியது. பிரதமர் மன்மோகன் சிங் 2010இல் G 20 நாடுகள் மாநாட்டில் கலந்துகொண்டார். 2011ஆம் ஆண்டு கனடாவில் இந்திய ஆண்டாக (Year of India) கொண்டாடப்பட்டது. 1000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் அதில் கலந்து கொண்டனர். 2015இல் நமது பிரதமர் கனடா செல்ல, 2018இல் கனடா பிரதமர் இந்தியா வர, உறவுகள் மேம்பட்டன. அதே சமயம், கனடா பிரதமரின் மனைவி சோஃபி கிரிகாய்ரே, 2018இல், காலிஸ்தான் அமைப்பைச் சேர்ந்த ஜஸ்பால் அட்வாலுடன் ஒரு திருமண வரவேற்பில் கலந்துகொண்டதும் கவனிக்கத்தக்கது. தற்போதைய பிரச்சினை வரும் வரை, கனடா – இந்தியா உறவுகள் நல்ல நிலைமையிலேயே இருந்தன. 2023இல் மட்டும் அதற்கு முந்தைய ஆண்டை விட 57% வணிகம் அதிகரித்ததாகவும் கனடாவின் வருமானம் 12 பில்லியன் கனடியன் டாலர் என்றும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இந்தியாவிற்கான கனிமங்கள் இறக்குமதியில் கனடா பெரும் பங்கு வகிக்கிறது. சமீபத்திய செய்திகளின்படி, கனடாவின் நட்பு நாடுகள், இந்தியாவுடன் பேசி, கனடா இந்தப் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளன. கனடா பிரதமரைப் பொறுத்தவரை, அவருக்கு 5 நாடுகள் கொண்ட உளவு அமைப்பின் வழியாக (5 Eyes Allies) கவனிக்கத்தக்க செய்திகள், இந்தியா சம்பந்தமாக வந்துள்ளன என்கிறார். அதேவேளை, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் இந்தியாவைக் குறித்துப் பேசவும் தயங்குகின்றன. அவர்களுக்கு சீனா காரணமாக, இந்தியாவுடனான சுமூக உறவு நீடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அதே சமயம், இந்த நிகழ்வு இந்தியாவில் என்ன பாதிப்பை ஏற்படுத்தும்? வழக்கமாக வருடம் ஒருமுறை சுழற்சி முறையில் வரும் தலைமைப் பொறுப்பை, ஏதோ உலக நாடுகளே தன்னைத் தேர்ந்தெடுத்து இந்தக் கிரீடத்தைக் கொடுத்ததாகவும் இந்த G 20 மாநாடு தன் இமேஜை வானளவிற்கு உயர்த்தும் என்றும் பேசிய பிரதமருக்கு, அந்த மாநாட்டின் வாசனை போவதற்கு முன், ஒரு G 20 நாட்டுடன் உறவில் சிக்கல் வந்துள்ளது பெரிய பின்னடைவு. இனி கனடாவின் நட்பு நாடுகள், அறிவுரை என்ற பெயரில் இந்தியாவிடம் பேச ஆரம்பிப்பது இந்தியா கூட்டணிக்கு ஆதரவாகப் போகலாம் என்ற பதைபதைப்பை ஆளும் அரசுக்குத் தரலாம். இதை எப்படியாவது சமன்படுத்த அரசு முயலலாம். அல்லது வழக்கம்போல ஏதாவது திசைதிருப்பும் நுட்பத்தைக் கையில் எடுக்கலாம். இந்தியாவிற்கு ஆதரவான குரல்கள் அதிகரித்துள்ள நிலையில், வேறு நாடுகளைப் போல பெரியண்ணன் மனோபாவத்துடன் நடக்காமல், கனடாவில் வாழும் இந்தியர்களின் நலனையும் கணக்கில்கொண்டு, பிரச்சினையை இந்தியா தீர்த்து வைக்கும் என்று நம்புவோம்.

ம(க்கா)தக் குப்பை

ம(க்கா)தக் குப்பை

கவிதை கடற்கரை எங்கும்கடவுள் கிடக்கிறார் மடங்கிய கையுடன்மல்லாந்து கிடக்கிறார் உடைந்த கால்கள்ஒதுங்கிக் கிடக்கின்றன கடலும் இரங்கிக்கண்ணீர் வடித்ததுதடவித் தடவித்தானும் ஓய்ந்தது சங்கச் செல்வர்கள்சரித்துப் போட்டபின்தங்க நேரமின்றிசரக்கடிக்கப் போய்விட்டார் துங்கக் கரிமுகத்தோன்சுருண்டு கிடக்கஅங்கவன் கண்கள்ஆகாயம் பார்த்தன மக்காத குப்பைதான்மதவெறி என்பதால்தக்க வைக்காமல்சமுத்திரம் தள்ளியதோ!

சொல்லணு குண்டுகள்

சொல்லணு குண்டுகள்

கவிதை எங்கள் கவிதை வரிகளேஎங்கள் வெடிகுண்டுத் தொழிற்சாலையிலிருந்துவெளி வருகின்ற அணுகுண்டுக் காவியங்களே நாங்கள் உங்களை வெளியே வீசும்போதுஅன்று யூரோசீமாவில் வீசப்பட்டஐன்ஸ்டீன் உருவாக்கியஅணுகுண்டுகளைப் போல் அழிவுகள்உருவாகப்போவதில்லை அந்த அணுகுண்டுசுரண்டுவோன் சுரண்டப்படுவோன் என்றுஎவரையும் மிச்சம் வைக்காமல்தன் தீ வாயினுள் வைத்துப்பொசுக்கி உண்டு ஜீரணித்துவிட்டது ஆனால், இன்று நீங்களோஏழைகளைச் சுரண்டியதால் தங்கள் வாழ்க்கையைசொர்க்கமாக மாற்றிக்கொண்டிருக்கும்சூழ்ச்சிக்காரர்களின் உல்லாச உப்பரிகைகளைவேரோடு தரைமட்டமாக்கிஇந்நாள் வரையில் சுரண்டப்பட்டுஏழ்மைக் குவியல்களில் வாழ்கின்றமுதுகுத் தண்டுகளுக்குப் புதிய பாதைசமைக்கப் போகின்றீர்கள் இந்த சமுதாய ஜீவநதியைத்தனது நச்சுக் கருத்துக்களால்சாக்கடை நீராக்கி, சகதிக் குளமாக்கிஓட முடியாமல் தேங்கும்தடைகளைக் களைவதற்குஎங்கள் உடலிலிருந்து ஒவ்வொரு செல்லையும்அழித்து உருவாக்கும் எங்கள்அருமைக் கவிதைகளே நீங்கள் வெளியே பாய்ந்து வருவதுஅந்தச் சாக்கடையில் சங்கமாவதற்கு அல்லஉங்களுள் இருக்கின்ற சொல்லணுக்களால்அதிலே இருக்கின்ற கிருமிகளையும்கிளர்ச்சி செய்து போரிட்டு அழித்து ஒழித்துவிட்டுபுதிய ரத்த ஓட்டத்தை உருவாக்கவேநீங்கள் புறப்பட்டுச் செல்கின்றீர்கள் நீங்கள்வரிசை வரிசையாய்ஏட்டில் வந்து படியும்போதெல்லாம்எங்களது கண்களில்தொழிலாளி வர்க்கம்வரிசை வரிசையாக வந்துஓரணியில் திரண்டு கூக்குரல் இடுகின்றகாட்சிகள்தான் தென்படுகின்றன தான் உண்ட உணவை ஜீரணிக்கதன்னைச் சுற்றிக் கூடு கட்டிக்கொண்டிருக்கும்கூட்டுப் புழுக்கள் அல்ல நீங்கள்இந்தச் சமுதாயத்திலுள்ள கொடுங்கோலர்களைக்கொட்டுவதற்காகப் பறந்து செல்லும்குளவிப் பூச்சிகள் இந்தச் சமுதாயத்தில் நீச்சலடிக்க முடியாமல்தத்தளிக்கும் ஏழை மக்களுக்கு நீங்கள்கட்டுமரங்களாகவும் கலங்கரை விளக்கமாகவும்விளங்க வேண்டுமென்றேஎங்கள் சிந்தனைத் தேரோட்டத்திலிருந்துசெதுக்கப்பட்டுப் புறப்படுகின்றீர்கள் எங்கள் சோதனைக் குழாயிலிருந்துவெளி வருகின்ற நீங்கள் குழந்தைகள் அல்லதிராவக ஆவிகள் உங்களை உருவாக்கும் பிரம்மாபின்புறம் கையை வைத்துஉங்கள் தலையெழுத்தை எழுதவில்லைமுன்னே வைத்துதீர்க்க தரிசனப் பார்வையோடுஇரும்புச் சூட்டு எழுத்துக்களால் எழுதுகிறான் உங்களது கதிரொளியால் இங்கு உருவாகப்போவதுபச்சை நிற வயல் வெளிகளல்லசெஞ்சாத்து நிறத்தின் செங்குருதிஆற்றில் மிதக்கக் போகும்துப்பாக்கிக் கட்டைகள் நீங்கள் மேடை ஏறியதும்உங்களுக்கு சூட்டப்படப் போவதுமலர் மாலைகள் அல்லஇரும்புச் சங்கிலிகளும்தூக்கு மரச் சுறுக்கு முடிச்சுமே ஆகும் உங்களை யாரும் தூக்கி வைத்துகுழந்தைப் பாட்டு பாடப்போவதில்லைஉங்களைத் தூக்கி தூக்கி வீசப் போகிறார்கள்ஏனென்றால் நீங்கள்அனைத்தும் வெடிகுண்டுகள் நீங்கள் ஆடப் போவதுஊர்வசியின் மோகன அடிகளல்லதொழிலாளி வர்க்கத்தின் ருத்ர தாண்டவம் உங்களிடமிருந்து பனி உருகுவதால் நீங்கள்வால் நட்சத்திரமாய்த் தெரியப் போவதில்லைஅப்போது உருகப்போவதுதனியுடைமைவாதிகளின் ரத்தக் கொழுப்புகள் உங்கள் அடிகளின் கீழே நசுங்கப்போகும் மாட மாளிகைகள்சுரண்டியதால் உருவான குடிசைகளைவிண் முட்டும் கோபுரங்களாகக் காட்டப்போகின்றன நீங்கள் சுவற்றில் எழுதப்படுகின்றதேர்தல் கோஷங்கள் அல்லஇதயத்தில் கீறப்படுகின்ற வறுமை கீதங்கள் நீங்கள் சிவப்பு விளக்கு போட்டுக்கொண்டுவெளியே வந்தாலும்அங்கே நடக்கப்போவதுபாலியல் வன்கொடுமைகள் அல்லஅங்கே போடப்போவதுபொதுவுடமைப் பூ மஞ்சமும்அறிவுடைய அன்பு வாழ்வுமே ஆகும் நீங்கள் வெளியே வரும்போதுகோழி இறகால் உங்களை நாங்கள்அடைகாக்கப் போவதில்லைசெங்கற்சூலை போட்டுசுட்டு எடுத்து அடுக்குகிறோம் உங்களைக் கொண்டு கட்டப் போகும் மாளிகைக்குகுருதி நீர்தான் தெளிக்கப்பட்டாலும்அதன் நிறம் இறுதியில்வெண்மையாகவே மாறப்போகிறது நீங்கள்நான்கு சுவர் அறையிலேபாப் மியூசிக்கோடு கத்தப் போகும்காட்டுக் கூச்சல் அல்லதெருவின் முனையில்பசியின் கண்களோடும் கிழிந்த உடைகளோடும்ஆவலோடு எதிர்பார்க்கும்ஏழைகளின் காதுகளில் விழப் போகும்பூபாள எழுச்சி ராகங்கள் நீங்கள்இந்தத் தனியுடமைக் கடலைத் தாண்டும்போதுஎதிர்ப்படுகின்ற முதலாளித்துவ அரக்கிகளின்வாயிலே புகுந்து காதிலே வரக்கூடாதுஉன் அகன்ற தீ வாயிலேஅவர்களை விழுங்கிவிட்டுபொதுவுடைமை பூமியிலே காலூன்ற வேண்டும் செல்லுங்கள்திசை மாறிச் சென்று சோம்பிக் கிடக்காதீர்கள்உங்களுக்குநாங்கள் ‘போ போ’ என்று கட்டளை இடவில்லைஉங்கள் காதுகளிலே ‘போர் போர்’ என்றதாரக மந்திரத்தை உச்சரித்து அனுப்புகிறோம் உங்களுக்காகஏழை மக்கள் கோடி கோடியாகக்காத்துக் கிடக்கின்றனர்அவர்களின் கைகளிலேயேஉறுதி மிகுந்த அன்புப் பிணைப்பினை ஏற்படுத்துங்கள்முதலாளித்துவத்தின் தலையிலேசதிராட்டம் போடுங்கள்

தொடக்கக் கல்வியில் NCFFS ஆபத்து – AISEC நடத்தும் உரையாடல்

தொடக்கக் கல்வியில் NCFFS ஆபத்து – AISEC நடத்தும் உரையாடல்

புதிய தேசிய கல்விக் கொள்கை, நீட் போன்றவற்றைப் பற்றிப் பொதுமக்களிடம் முழுமையான புரிதல் இல்லாவிட்டாலும்கூட ஓரளவுக்கேனும் அவை குறித்த அறிமுகமும் செய்திகளும் அவர்களைச் சென்று சேர்ந்திருக்கின்றன. ஆனால், ஒன்றிய அரசு கல்வித்துறையில் செய்துவரும் பரவலான மாற்றங்கள் குறித்த முழுமையான புரிதல் பெரும்பாலான கல்வியாளர்களிடம் கூட இல்லை என்பதே கசப்பான உண்மை. மாற்றங்கள் என்பவை மாறாதவை என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால் அந்த மாற்றங்கள் எதை நோக்கி நம்மை வழிநடத்துகின்றன என்பதுதான் நம்முன் நிற்கும் முக்கியக் கேள்வி. இந்தச் சூழலில் குழந்தை பிறந்தது முதலே கல்வி என்ற நடைமுறையைப் புதிய கல்விக் கொள்கை வலியுறுத்துவதோடு, அதற்கான செயல்திட்டங்களும் வெளியாகிவருகின்றன. தொடக்கக் கல்விக்கான NCFFS (National Curriculum Framework For Foundational Stage) என்ற கலைத்திட்டம் அண்மையில் வெளியிடப்பட்டது. அதைக்குறித்து பொதுத்தளத்தில் ஒரு புரிதலை உருவாக்கும் நோக்கில், அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டி, மெய்நிகர் உரையாடல்களை நடத்தி வருகிறது. இந்த உரையாடலின் தொடக்கமாக நடைபெற்ற முதல் கூட்டத்தில் NCFFSஇன் முதல் இரண்டு அத்தியாயங்கள் விரிவாக விளக்கப்பட்டன. அந்தப் புரிதலை அனைவருக்கும் எடுத்துச் செல்லும் வகையில் கூட்டத்தில் நிகழ்த்தப்பட்ட உரைகளின் தொகுப்பை வெளியிடுகிறோம். நிகழ்வை ஒருங்கிணைத்த தோழர் சுதாகர், இந்த உரையாடலின் நோக்கம் குறித்து நிகழ்த்திய உரை:   சென்ற வாரம் செய்தி ஊடகங்களில் +2 பொதுத் தேர்வு பற்றிய செய்தி, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களால் பெரிதும் உற்று நோக்கப்பட்டது. NCFஇன் பரிந்துரைப்படி இனிமேல் +1, +2 வகுப்புகளுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வுகள் நடத்தப்படும். (இந்த நடைமுறைக்கு  மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு எழும் என்பதால்) நடத்தப்படும் இரண்டு தேர்வுகளில் எதில் அதிக மதிப்பெண்கள் பெறுகின்றனரோ அதை அந்தக் கல்வியாண்டின் மதிப்பெண்ணாக எடுத்துக்கொள்ளப்படும் என்றும் செய்தி வெளியிடப்பட்டது. 2020 புதிய தேசிய கல்விக் கொள்கையைப் பற்றி அறிந்தவர்களுக்கு இந்தத் திட்டம் என்பது, 9 முதல் 12ஆம் வகுப்புகள் வரை செமஸ்டர் முறையை அறிமுகப்படுத்த வலியுறுத்தும் NEP 2020இன் வழிகாட்டுதலின் தொடக்கப் படிதான் என்று நன்கு தெரியும். NEP 2020 பற்றிப் பலரும் பரவலாக அறிந்திருந்தாலும் NCF (National Curriculum Framework) என்றால் என்ன? NEP – NCF இரண்டிற்கும் உள்ள வேறுபாடு மற்றும் தொடர்பு என்ன? என்பன போன்ற பல கேள்விகள், சந்தேகங்கள் இருக்கின்றன. இந்தச் செய்தி வருவதற்கு முன்பாகவே, NCF என்கிற நாசகாரக் கட்டமைப்புப் பற்றி நன்கு அறிந்து, அதனை மாணவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள், கல்வி மீது அக்கறை கொண்டவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரிடம் இதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ‘அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டி’ திட்டமிட்டிருந்தது. எனவே ஒரு விரிவான ஆய்வுக் கூட்டத்தை ஏற்பாடு செய்து நடத்துவது எனத் திட்டமிட்டு, முதல் மெய்நிகர் கூட்டம் 30.08.2023 அன்று நடைபெற்றது.   தேசிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை 2019ஆம் ஆண்டு சற்றேறக் குரிய 400க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட ஆவணமாக வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து தேசிய கல்விக் கொள்கை 2020 மத்திய அரசாங்கத்தால் எந்தவித விவாதமும் இல்லாமல் தன்னிச்சையாகக் கொண்டு வரப்பட்டு, அதைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை நாம் அறிவோம். NEP 2020, இங்குள்ள கல்வி அமைப்பைப் பல படிநிலைகளாகப் பிரிக்கிறது. உதாரணமாக, பள்ளிக் கல்வியை 5+3+3+4 எனப் பிரிக்கிறது. அதோடு மட்டுமல்லாமல், அதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தத் தேவையான கலைத் திட்டங்களை (NCE) உருவாக்க மத்திய அரசு National Steering Committee என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அமைப்பு NCFFS  (National Curriculum Framework For Foundational Stage) என்ற கலைத் திட்டத்தை, 3 முதல் 8 வயது வரையுள்ள குழந்தைகளுக்கான கல்வி ஆவணமாக வடிவமைத்து வெளியிட்டுள்ளது. இது பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் (Ministry of Women and Child Development) உருவாக்கப்பட்டு, அதாவது பிறந்த குழந்தையிலிருந்து மூன்று வயது வரையுள்ள குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட ECCE இன் (Early Childhood Care and Education) என்ற திட்டத்தின் தொடர்ச்சி எனக் குறிப்பிட்டுள்ளது. இது பிறந்த குழந்தைகளின் கற்றல் தூண்டுதல்களுக்கான வழிமுறைகளைப் பற்றியும் பிற வளர்ச்சிகளைப் பற்றியும் குறிப்பிடுவதுடன், சமூகப் பொருளாதார நெறிமுறைகள் மேம்பாடு (Socio Economical Ethical Development) குறித்தும் போதனைகளைப் பற்றியும் வழிவகுக்கிறது. அப்படி வழிவகுத்தவற்றைப் பெற்றோர்களிடமும் தன்னார்வலர்களிடமும் (Community members – volunteers) கொடுக்கின்றனர். யார் அந்தத் தன்னார்வலர்கள் என்று நம் எல்லாருக்கும் தெரியும். பிறந்த குழந்தைக்குக் கல்வி முறை என்பது உலகில் எந்த நாட்டிலும் இல்லை. நம் நாட்டில் மட்டும்தான் இதைக் கொண்டு வந்துள்ளனர். பலதரப்பட்ட சமூகக் கட்டமைப்புகளைக் கொண்ட நம் நாட்டில், மத்திய சமூக வளர்ச்சி அமைச்சகம் கூறும் விளக்கம் நமக்குப் பல கேள்விகளை எழுப்புகிறது. அதே போல NCFSE (National Curriculum Framework For School Education) என்ற கலைத் திட்டத்திற்கான ஆவணத்தையும் பள்ளி மாணவர்களுக்காக வடிவமைத்து வெளியிட்டுள்ளது. அதேபோல, NHEQF (National Higher Education Qualification Framework) என்ற கலைத் திட்டத்திற்கான ஆவணத்தை உயர் கல்வி மாணவர்களுக்காக வடிவமைத்து வெளியிட்டுள்ளது. இந்த ஆவணங்கள் எதுவும் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் வெளியிடப்படவில்லை. தேசிய கல்விக் கொள்கை 2020 வெளியிடப்பட்டபோது தமிழ் மொழியிலோ மற்ற மாநில மொழிகளிலோ வெளியிடவில்லை. அதேபோல இந்த ஆவணங்களும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படவில்லை. மொழிப் பற்றாளர்களிடமிருந்தும் எந்தக் குரலும் இதுவரை எழுப்பப்படவில்லை. அதாவது இதன் முக்கியத்துவம் இன்னும் உணரப்படவில்லை என்று அகில இந்தியக் கல்விப் பாதுகாப்புக் கமிட்டி பதிவு செய்கிறது. இதன் காரணமாக, இதைப் பற்றிய தெளிவான புரிதலை மக்கள் மத்தியிலும் குறிப்பாக கல்வியாளர்கள் மத்தியிலும் பெற்றோர், ஆசிரியர், மாணவர் மத்தியிலும் உருவாக்க வேண்டும் என்பதற்காக இந்த உரையாடலை நாம் தொடங்கியிருக்கிறோம்.  சிறப்பு அழைப்பாளர் ஊடகவியலாளர் சரவணபாரதி அவர்களின் வாழ்த்து: நீங்கள் எடுத்துள்ள இந்த அற்புதமான முயற்சி, சாதாரணப் பொதுமக்களுக்கும் சென்று சேர வேண்டியது. கருத்தரங்கில் கலந்துகொள்பவர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். இந்தக் கருத்தரங்கில் நடைபெற்றதை உங்கள் எழுத்தின் வாயிலாகவும் உரையின் வாயிலாகவும் வீடியோ வாயிலாகவும் பல மக்களுக்கும் தெரியப்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஒரு நல்ல முன்னெடுப்பை அனைவரும் எடுக்க வேண்டும். NCFFSஇன் முதல் இரண்டு அத்தியாயங்கள் குறித்து பேராசிரியர் யோகராஜன் விளக்கிப் பேசிய ஆய்வுரை: என் முன்னே இருக்கக்கூடிய பணி, எளிய பணி என்று என்னால் கருத இயலவில்லை. இதுவொரு மிக நுட்பமான பணி. ஏனெனில், இப்போது நாம் பேசக்கூடிய இந்தப் பொருண்மையானது, பல ஆண்டுகளாக இந்தியாவில் இருக்கக்கூடிய பல தத்துவங்களுக்கு இடையில் நிலவும் போராட்டங்களுடைய வெளிப்பாடு ஆகும். அதனை இப்போது கல்வித் தளத்திற்குக் கொண்டுவந்துள்ளனர். இதுவரை அரசியல், சமூகம், கலாச்சாரத் தளங்கள் என வெவ்வேறு தளங்களில் இப்பிரச்சனைகள் நிலவிவந்தன. அப்பிரச்சனைகளின் மையமாக இன்று கல்வி மாறிவிட்டது. கல்விக் கொள்கை (Educational Policy) என்பது  என்ன? கலைத் திட்டம் (Curriculam Framework) என்பது என்ன? என்பனவற்றை நாம் அடிப்படையிலிருந்து அறிந்துகொள்ள வேண்டும். கல்வித்திட்டம் என்பது அடிப்படையில் கொள்கை முடிவு ஆகும். கற்பித்தல் முறைகள் (Pedagogy) எப்படி இருக்க வேண்டும், கல்வி எப்படி இருக்க வேண்டும், ஆரம்பக் கல்வி எப்படி இருக்க வேண்டும், கல்வியை நிர்வகிக்கும் அமைப்புகள் எப்படி இருக்க வேண்டும் என்று கல்விக் கொள்கைகள் வரையறுக்கின்றன. இக்கொள்கைகளை நிறைவேற்ற வேண்டுமென்றால் அதற்கு ஒரு திட்ட வரைபடம் (Blue Print) வேண்டும். உதாரணமாக, ஒரு கட்டடம் கட்ட வேண்டுமென்றால் அதன் வடிவமைப்புக்கென ஒரு வரைபடம் உருவாக்கப்படுவதுபோல, கல்வியில் பாடத்திட்டம், வகுப்பறைகள், பள்ளிகள், கல்வி நிறுவனங்கள், ஆசிரியர்கள், கற்பித்தல் முறைகள், இன்னும் பலப்பல வழிமுறைகள், செயல்முறைகள் உள்ளிட்டவற்றைக் குறித்த திட்ட வரைபடம்தான் NCF. இந்தத் திட்ட வரைபடம் நான்கு அடுக்குகளில் வந்துள்ளது. எனவே இந்த நான்கு படிநிலைகளையும் நாம் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இந்த உரையாடலில் நாம் ஆரம்பக் கல்விக்கான வரையறையையும் பள்ளிக் கல்விக்கான வரையறையையும் கையில் எடுத்துள்ளோம். தொடர்ச்சி நாளை வெளியாகும்.

கிழவனிடம் காதல் கொண்டேன்

கிழவனிடம் காதல் கொண்டேன்

புதிதாக ஒன்றையும் சொல்லிவிடப் போவதில்லை இக்கட்டுரை. எண்ணற்ற ஆளுமைகள் சொல்லியிருப்பவற்றைக் காட்டிலும் அரிதாக எதனையும் அள்ளித் தந்துவிடப் போவதில்லை நான். நூற்றாண்டைத் தாண்டியும் ஒடுக்குமுறையாளர்களைக் கனவிலும் கிலி கொள்ள வைக்கும் அக்கிழவனைப் பற்றிப் பேச என்னிடம் என்ன மிச்சமிருக்கிறது?! ஆனாலும், உலகம் முழுக்க ஒடுக்குமுறைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தவர்கள் எண்ணற்றோர். அவர்களை நேசிக்கும் அதே வேளையில், எனது அதீத நேசிப்பென்பது இவ்வுலகில் இருவர் மீது மட்டுமே. அதிலொருவர், புரட்சியாளன் சேகுவேரா; மற்றொருவர், கலகக்காரன் ஈ.வே.ராமசாமி. தனது இனம் ஒடுக்கப்பட்டது, தனது மொழி ஒடுக்கப்பட்டது, தனது சாதி ஒடுக்கப்பட்டது, தனது மதம் ஒடுக்கப்பட்டது, தனது நாடு ஒடுக்கப்பட்டது, தனது வர்க்கம் ஒடுக்கப்பட்டது, தனது நிறம் ஒடுக்கப்பட்டது என்பதன் பொருட்டுப் புயலாய் எழுந்த மரியாதைக்குரியவர்கள் ஏராளம். ஆனால், தனிப்பட்டவிதத்தில் எந்தவித ஒடுக்குதலுக்கும் ஆளாகாமல் ராஜபோகமாய் வாழ்ந்துகொண்டிருக்கையிலேயே, தான், தனது, என்பதைத் தாண்டி  பிற மனிதர் துன்பம் காணச் சகியாது களத்தில் குதித்தார்களே, அதன்பொருட்டே ‘காதல் கொண்டேன்’ இவ்விருவர் மீதும். ஒட்டுமொத்த மானுடத்தையே நேசித்த டாக்டர் சேகுவேரா பிறந்ததோ அர்ஜன்டைனா. போராடியதோ கியூபா, புரட்சிக்கான விதைகளைத் தூவியதோ காங்கோ உட்படப் பல நாடுகள், மாவீரனாய்ச் சரிந்ததோ பொலிவியா. ஓரளவுக்கு அப்படித்தான் நமது கிழவனும். சமூகப் பணிக்கு வரும்போது ஈரோட்டில் அங்கம் வகித்த பதவிகள் மட்டுமே நாற்பதுக்கும் மேல். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஒலிக்கத் தொடங்கிய பெரியாரின் குரல் இருபதாம் நூற்றாண்டின் முக்கால்பாகம் வரை சுழன்றடித்த பின்பே ஓய்வு கொண்டது.  ஓய்வு கொண்டதென்னவோ உடல்தான். ஆனால் ஒடுக்குதல்களுக்கு எதிரான அவரது முழக்கங்கள் அரை நூற்றாண்டு கடந்தும் இன்றும் தென்னாட்டைத் தாண்டி, வடக்கு கிழக்கென வியாபித்து, போர்க்குரல் எழுப்புவோர் இடையே ஒலித்துக்கொண்டிருக்கிறது. யானையின் தும்பிக்கையினைப்போலப் போட்டுக்கொண்டிருந்த  ‘லை’யினையும் ‘னை’யினையும் சீர்திருத்தி, இன்றைக்கு இதனைக் கணினியில் தட்டச்சும்போதும்கூடப் பயன்படுகிற எழுத்துச் சீர்திருத்தத்தினை எண்பதாண்டுகளுக்கும் முன்னரே அறிமுகப்படுத்தியவர்தான் தந்தை பெரியார். தெலுங்குக் கீர்த்தனைகள் மட்டுமே பாடிக்கொண்டிருந்த தமிழ்நாட்டின் சங்கீத சபாக்களின் முன் தமிழில் பாடச் சொல்லிப் போர்க்குரல் கொடுத்ததோடு நில்லாமல் தமிழகமெங்கும் தமிழிசை விழாக்களை நடத்தத் துணை நின்றவர்தான் தந்தை பெரியார். இனம், நிறம், பால், மொழி, சமயம், பிறப்பு, உட்பட எதிலும் பாகுபாடு காட்டக்கூடாது என்ற ஐ.நா.வினது உலகளாவிய மனித உரிமைப் பிரகடனம் (Universal Declaration on Human Rights) கூட 1948இல்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், அதற்கும் இருபதாண்டுகளுக்கு முன்னரே அதைச் செயலாக்கத் துணிந்த அக்கிழவனை என்னென்பது?! ஆம், ‘தான் யார்?’ என்பதைக் காட்டிலும் ‘தான் யாருக்கானவன்?’ என்பதில் அம்மனிதனுக்கு இருந்த தெளிவுதான் இன்றைக்கும் அம் மாமனிதனை எண்ணிச் சிலாகிக்க வைக்கிறது நம்மை. சாதி ரீதியாகப் பார்த்தால் தந்தை பெரியாரின் குடும்பமோ ‘முற்பட்ட’ வகுப்பு. ஆனால் குரல் கொடுத்ததோ ஒடுக்கப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்காக. மொழி ரீதியாகப் பார்த்தால் வீட்டார் கன்னடம். ஆனால் குரல் கொடுத்ததெல்லாம் தமிழ் மக்களுக்காக. நம்பிக்கையின் அடிப்படையிலோ நாத்திகர். ஆனால் இறைத்தலங்களில் சமத்துவம் நிலவக் குரல் கொடுத்ததென்பதோ ஆத்திகர்களின் சுயமரியாதைக்காக. மத ரீதியாகப் பார்த்தால் பெரும்பான்மை. ஆனால் ஓங்கி ஒலித்த குரல் சிறுபான்மை மக்களுக்காக. பாலின ரீதியில் ஆண். ஆனால், குரல் கொடுத்ததெல்லாம் பெண்ணினத்திற்காக. இவை போதாதா இப்பூவுலகு இன்னமும் இந்த மனிதனை நேசித்துக்கொண்டிருக்க? (சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள திராவிடச் சுவடுகள் நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரை)

ஞானக்கிழவன்

ஞானக்கிழவன்

கவிதை அக்கினிக் குழம்புகள் அள்ளி எடுத்துப்பக்குவ லேகியம் படைத்த கிழவனே புழுத்துக் கிடந்த புழுக்களுக் குள்ளேபுலியின் ரத்தம் புகுத்திய தலைவனே விழித்தால் மரணம் விளையுமென் றஞ்சித்தூங்கிக் கிடந்த வேங்கையை எழுப்பிநகங்களை நீதான் ஞாபகப் படுத்தினாய்முகங்களில் மீசை முளைப்பதைச் சொன்னாய் தள்ளாடும் வயதிலும் சருகான தில்லைநீஓலையாய்த் தானே உபயோக மானாய் இத்தனை சாதனை வித்தைகள் புரியஎத்தனை பரம்பரை இருந்தது உனக்கு? இரணிய மின்னல் எழுந்ததே அதுவும்சித்தரின் நெருப்புச் சித்தாந்தங்களும்மட்டுமா உன்னை மாற்றின? இல்லையே வால்டேர் செய்த வார்த்தைப் புரட்சிகள்டார்வின் வீசிய தத்துவ வெடிகள்காரல் மார்க்சின் கனத்த கருத்துகள்ரஸ்ஸல் புரிந்த ரசவா தங்கள்விஞ்ஞானிகளின் மெய்ஞ்ஞா னங்கள்இத்தனை உரங்கள் இட்டத னால்உன்மூளையில் மூலிகை முளைத்தது தந்தையே சூரிய மருந்து பட்டதும் வானில்உடுக்கள் என்னும் வடுக்கள் மறையும் உன்கரம் பட்டதும் எம்முடல் தன்னில்காயம் மறைந்தொரு மாயம் நிகழ்ந்தது கி.மு. கி.பி. பழைய கணக்குபெ.மு. பெ.பி. புதிய கணக்கு ஒரு நூற்றாண்டைக் கூட்டிக் கழித்தால்உன்றன் அறிவே மிஞ்சும் எமக்கு நின் அடையாளம் தாடியும் தடியும்நீதான் எங்கள் அடியும் முடியும் (சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள திராவிடச் சுவடுகள் நூலில் இடம்பெற்றுள்ள கவிதை)

அடித்தட்டு மக்களின் அரசியல் ஆளுமை

அடித்தட்டு மக்களின் அரசியல் ஆளுமை

அண்ணா பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை சின்ன காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை, போற்றத்தக்க ஆட்சியாளராக, அறிவார்ந்த கருத்துக் கரூவூலமாகத் திகழ்ந்தவர் என்று, தமிழ் கூறும் நல்லுலகம் அவரை அன்போடும் வாஞ்சையோடும் நினைவு கூர்கிறது. அவரிடமிருந்து பொங்கிப் பிரவாகம் எடுத்த தமிழ் ஊற்றுதான் அரசியல் வானில் விஸ்வரூபமாக எழுந்து நின்று, பேரறிஞர் அண்ணா என்று அனைவர் மனத்திலும் பதிய வைப்பதற்குக் காரணமாக இருந்தது. சொல் புதிது, பொருள் புதிது எனத் தமிழ் மொழியின் புதிய அடையாளமாகத் திகழ்ந்தார். மேடைத் தமிழுக்கு மகுடம் சூட்டினார். நல்ல தமிழ் அறிஞராக, நாவன்மைமிக்க நாவுக்கரசராக, ஆங்கிலத்தில் நாவாடுகிற பாங்கைக் கண்டு ஆங்கிலேயர்களே வியந்த வித்தகராக, வற்றாத ஊற்றெடுக்கும் எழுத்து வன்மை மிக்க ஒரு எழுத்துக்காரராக, நாடக ஆசிரியராக, நடிப்பின் மெய்ப்பாடுகளை எடுத்துரைக்கும் கலைஞனாக, அரசியலில் உச்சம் தொட்ட ஆளுமையாக, காங்கிரஸ் அல்லாத முதல் அமைச்சராக என்று விரிந்து பரந்துகொண்டே செல்கின்றன அவரைப் பற்றிய நினைவுகள். தமிழ்த்தாயின் தலைமகனாய், தமிழினத்தின் தனித் தலைவராய், திராவிட அரசியலின் பெருந்தலைவராய்த் திகழ்ந்த அண்ணாவிடமிருந்து உதித்த சொல், செயல் அனைத்திலும் தமிழ்தான் இரண்டறக் கலந்திருந்தது. மொழிக்கும் இனத்திற்கும் அவர் காட்டிய பாதை, ஒரு சிறந்த வழித்தடத்தை ஏற்படுத்தியது. ஆகவேதான், உரிமையோடு ‘அண்ணா’ என்று அழைத்த அனைவரும் அவரது உடன்பிறப்புக்களாயினர். அண்ணாவின் அறிவு, விசாலமானது; செறிவு மிக்க உறுதிப்பாடு உடையது. ஆகவேதான், அவரைப் பேரறிஞர் என்று எல்லாரும் வழிமொழிந்தார்கள். அறிவியல், பொருளியல், உளவியல், அரசியல், வரலாறு, தத்துவம், இலக்கியம் எனப் பன்முகப் புலமை பெற்றவர். அதனால்தான், தமிழகத்தின் 20ஆம் நூற்றாண்டை அறிவு யுகமாக அவர் மாற்றிக் காட்டினார். அண்ணாவின் இலக்கிய வளத்தால், இவ்வையகம் தழைத்தது, திளைத்தது. சமுதாயச் சீர்திருத்தக் கருத்துக்களை தனது எழுத்துக்களின்மூலமாக எடுத்து வைக்கும், ஒரு புதிய உத்தியை அவர் கண்டறிந்தார். அதுவே, ‘தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்’. இக்கடிதங்களை, தேநீர்க் கடைகளில் ஒருவர் படிக்க, பெரும் கூட்டமாக நின்று கேட்கும் பழக்கம் அக்காலகட்டத்தில் மிகப் பிரபலமாகும். அண்ணாவின் கடிதங்களைப் படிக்கும்வரை, சாப்பிடாமல் இருந்தவர்கள் ஏராளம் உண்டு. இவற்றோடு மாத்திரம் இல்லாமல், அண்ணாவின் நாடகங்கள், சிறுகதைகள், புதினங்கள், தமிழக மக்களிடத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. சௌமியன், சமதர்மன், பரதன், நக்கீரன், குறிப்போன், ஒற்றன், வீரன் என்னும் புனைப் பெயர்களில் இவரது படைப்புகள் வெளிவந்தன. பொழுதுபோக்கிற்காக இலக்கியங்கள் படித்தவர்கள் மத்தியில், சமூகச் சீர்திருத்தக் கருத்துக்களுக்காகவும் படிக்கும் சூழ்நிலையை இவர் உருவாக்கிக் காட்டினார். சமூகத்தில் நிலவிய மூடப் பழக்கவழக்கங்கள் மீதான சாடல், பெண்ணுரிமை, முதலாளித்துவ எதிர்ப்பு போன்றவற்றை வித்தாக, மூலக்கருத்தாக இவரது கதைகள் தூக்கிச் சுமந்தன. இவரது எழுத்துகள் எத்தகைய அழகுணர்ச்சி கொண்டவையாக எதுகையும் மோனையும் கொஞ்சி விளையாடியனவோ அதற்கேற்ப, இவரது பேச்சு ஒரு புதிய வடிவத்தோடு அனைவரையும் வசீகரித்தது. தமிழ்நாட்டு மக்களின் மாசுகளை அகற்றுவதற்காக, அவர்கள்தம் வாழ்வில் மறுமலர்ச்சியை வித்திடுவதற்காக, மொழிப்பற்று, இனப்பற்று, நாட்டுப்பற்று, விடுதலை வேட்கை ஆகியவை தமிழ் மக்களிடத்தில் செழித்திடவும் செம்மாந்து நிலைத்திடவும், அவர்கள் வாழ்வு சிறந்திடவும் எத்தகைய எதிர்ப்புகளையும் கண்டு அஞ்சாது செயலாற்றி, ‘மக்கள் பணியே, மகேசன் பணி’ எனப் புதிய முழக்கத்தை நாளெல்லாம் பறை சாற்றினார். இதழ் தோறும் இதழ் உரை, கட்டுரை, மடல், ஆய்வுரை, சிறுகதை, புதினம், சிறுநாடகம், நாடகம், கவிதை, ஊரார் உரையாடல், வரலாறு, நந்திக் கலம்பகம் எனும் வடிவங்களில் மக்கள் விரும்பிச் சுவைக்கும் சுவையான கருத்துக்களை வரைந்தார். ஏனென்றால், அவரே ஒரு முறை சொல்லுகிறபோது, “நந்திக்கலம்பகம் புது முறைத் தொடராக அளிக்க எண்ணியிருக்கிறேன். கோடுகள் தயாராகிவிட்டன. விரைவில் வண்ணமும் கூட்டிட இயலும்” என்று வர்ணித்துள்ளார். இவையெல்லாம் எப்போது நிகழ்ந்தன, எப்படி நிகழ்ந்தன என எண்ணிப் பார்த்தால், நமக்கு வியப்புத்தான் மேலிடும். பிறமொழி ஆதிக்கத்தால், தமிழ்நாடு இருள் சூழ்ந்த நிலையில் இருந்தபோது, அறிஞர் அண்ணாவின் தமிழ் மொழியின் ஆற்றலால், இவையெல்லாம் நிகழ்ந்தன. ஒருமுறை விழுப்புரத்தில் அண்ணா பேசச் சென்றிருந்தார். தேர்தல் நேரம் என்பதால் பல கூட்டங்களில் பேசிவிட்டு இரவு பத்து மணிக்குத்தான் அங்கு அவரால் வர முடிந்தது. மக்கள் கண்களில் தூக்கம் தொற்றிக்கொண்டது. மேடையேறிய அண்ணா, “மாதமோ சித்திரை; மணியோ பத்தரை; மக்களுக்கோ நித்திரை; வழங்குவீர் எங்கள் சின்னத்தில் உங்கள் முத்திரை” எனப் பேச ஆரம்பித்தவுடன் மக்களின் தூக்கம் கலைந்தது. எழுந்த கரவொலி அடங்க வெகுநேரம் ஆயிற்று என்ற செய்தியைப் பலரும் அறிந்திருக்கலாம். இதுபோலவே, தென்மாவட்டத்தில் ஒரு கூட்டத்திற்குப் பேச சென்றார். அப்போது ஆட்சியிலிருந்த காங்கிரஸ், அண்ணா பேசும் மேடைக்கு எதிரே, ஒரு பெண் கையில் விளக்குமாறு வைத்திருப்பதாக உள்ள படத்தை மாட்டியிருந்தனர். அதைக் கண்ட தொண்டர்கள் ஆதங்கப்பட்டனர். அவர்களை அமைதிப்படுத்திய அண்ணா இப்படிச் சொன்னார். “அவர்கள் ஒன்றும் தவறாக வைக்கவில்லை. அவர்கள் செய்யும் ஊழல்களை என்னை நன்கு விளக்குமாறு பணித்திருக்கிறார்கள்” என்றார். இதைக் கேட்ட எதிர் முகாமினர் வெட்கித் தலைகுனிந்தனர். இப்படி எண்ணற்ற அனுபவங்களை நாம் சொல்லிக்கொண்டே செல்லலாம். ஒரு தடவை சில இங்கிலாந்து மாணவர்கள், அண்ணாவைப் பரிகசிப்பதற்காக அவரிடம், ஏனென்றால் (Because) என்ற வார்த்தை மூன்று முறை தொடர்ந்து வருகிற மாதிரி வாக்கியம் கூற முடியுமா? என்று கேட்டனர். அதற்கு அவர், “No sentence can begin with because, because, because is a conjunction” என்று உடனே பதிலளித்தார். இவ்வாறாக, பேச்சாற்றலில் அனைவரையும் வியக்க வைத்தவர் அண்ணா. ஆகவேதான், அவருடைய மேடைப் பேச்சுகளை, மாலைநேரக் கல்லூரிகள் என்றும் கட்டடம் இல்லாத கல்லூரிகள் என்றும் வரலாற்று வகுப்பறைகள் என்றும் புகழாரம் சூட்டினார்கள். இவை ஏதோ சில பொருள்களைத் தரும் சாதாரண சொற்றொடர்கள் அல்ல. ஒரு சமுதாயத்தை விழிக்கச் செய்து, மறுமலர்ச்சி பெறச் செய்து, புது உணர்வுகளைத் தாண்டி புதிய சமுதாயமாக ஆக்கிய ஆற்றல்மிக்க வரிகள். இவையெல்லாம் அண்ணா உதிர்த்த முத்துக்கள்; பின்னாளில் தமிழகத்தின் சொத்துக்களாயின. இந்தச் சொற்றொடர்கள் ஒவ்வொன்றும் மனோதத்துவ ஆய்வாளர்களால் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய இலக்கியக் குறியீடுகள்; மனித வாழ்விற்கு அடிப்படை இலக்கணங்கள்; தமிழக வரலாற்று அத்தியாயங்களின் தலைப்புகள்; இருபதாம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் அறிஞர் அண்ணாவின் இதயத் துடிப்புக்கள்; தமிழ்த் தாயின் தலைமகனின் இலட்சிய விளக்கங்கள்; தமிழ்ச் சமுதாயத்தின் தன்னிகரற்ற வழிகாட்டியின் வரலாற்றை விளக்கும் அடையாளங்கள்; அவருடைய வாழ்க்கை நெறிகள். ஆம், அரசியல் என்பது மற்றவர்களின் வாழ்க்கையைப் பணயம் வைத்து ஆடும் சூதாட்டமல்ல. ஆழ்ந்த அன்பும் இணையற்ற பாசமும் நிறைந்த, சகோதர உணர்வும் மனிதாபிமானமும் கலந்த ஒரு வாழ்க்கை முறை என்பதை உலகுக்கு உணர்த்திய ஒரு மாபெரும் சிந்தனையாளர் அண்ணா. தமிழ்நாட்டின் ஆறாவது முதலமைச்சரான அண்ணா, குறுகிய காலமே ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்தாலும் தமிழ்நாட்டின் அரசியல் போக்கையே புரட்டிப் போட்டவர். அரசியல் மேடைகளைத் தமிழ் வளர்க்கும் அரங்கமாக மாற்றிக் காட்டினார். தமிழ் உள்ளத்தோடும் உணர்வோடும் ஆட்சிக்கு வந்ததால் தம் ஆட்சிக் காலத்தில் என்றுமில்லாத அளவுக்குத் தமிழை முன்னிலைப்படுத்தியே ஆட்சியை நடத்தினார். சுயமரியாதைத் திருமணங்களைச் சட்டப்பூர்வமாக்கி, தனது திராவிடப் பற்றை வலுப்படுத்தினார். இரு மொழிச் சட்டத்தை உருவாக்கினார். மதராஸ் மாநிலம் என்றிருந்த சென்னை மாகாணத்தை, தமிழ்நாடு என்று பெயர் மாற்றி, தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றார். உலக வரலாற்றிலேயே, பொது வாழ்க்கைக்குத் தன்னை ஒப்படைத்துக்கொண்ட ஒரு தலைவனுக்கு, அறிஞர் அண்ணாவிற்கு ஏற்பட்டது போன்ற துயரம் மிகுந்த அனுபவம் ஏற்பட்டிருக்காது. இதயத்தைத் தூளாக்கும் சொற்கள், இழிமொழிகள், வசைகள், ரத்தத்தைச் சூடேற்றும் நாராச – நரகல் நடைப் பேச்சுக்கள், அழித்து ஒழிப்பதற்கான இடைவிடாத தாக்குதல்கள், தன்னை ஆளாக்கிய தலைவனிடமிருந்து, தான் ஆளாக்கிய அன்புத் தம்பிகளிடமிருந்து எப்போதும் எதிர்க்கும் எதிரிகளிடமிருந்து என்று, அனைத்து தரப்பினருடைய தாக்குதல்களையும் தாங்கிக்கொண்டார். எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று பொறுமை காத்தார். மறப்போம், மன்னிப்போம் என்றார். இழைத்த கொடுமைகளை மறந்தார், மன்னித்தார். வீழ்த்த முயன்றவர்களும் வெறி பிடித்துத் தாக்குதல் தொடுத்தவர்களும் வெட்கித் தலைகுனிந்தனர். தாக்குதலையும் தழுவுதலையும் ஒன்றாகக் கருதினார். எதிர் முகாம்களில் இருக்கும் பண்பாளர்கள், தியாக உள்ளம் படைத்தவர்கள், திறமையாளர்கள், நல்லவர்கள், நாட்டுக்கு உழைத்த வித்தகர்கள், எங்கிருந்தாலும் எந்த முகாமில் இருந்தாலும் பாராட்டுகிற பண்பை வளர்த்தார். பகை, பழி, வெறுப்பு என்ற அநாகரிக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்த, திராவிடத்தின் தொடக்கப் புள்ளியான அண்ணாவின் கனிவும் அவர் பிறரைக் கனியச் செய்யும் முறையும் நாம் கற்க வேண்டிய பாடங்களாகும்.  (சுவடு பதிப்பகத்தின் முதல் வெளியீடான திராவிடச் சுவடுகள் நூலில், மேனாள் அமைச்சர் முனைவர் வைகைச் செல்வன் எழுதியுள்ள கட்டுரை. கட்டுரைக்கான முகப்போவியம் : சுந்தரம் முருகேசன். நூல் அட்டை வடிவமைப்பு: நாநா)

வந்தே பாரத் வடை 

வந்தே பாரத் வடை 

நகைச்சுவைச் சிறுகதை குளித்து முடித்து வெளியே வந்தார் சின்னமலை. வயது 42. உயரம் 170 செமீ, மார்பளவு 40 அங்குலம். திராவிட நிறம், தூக்கி வாரப்பட்ட சொற்பக் கேசம், சகுனி கண்கள், மீசை இல்லாத சுயசவர முகம். பூஜையறைக்கு வந்தார். அனுமன் விக்கிரகம் முன் வந்து நின்று, அனுமன் சாலீஸா மந்திரத்தை ஓத ஆரம்பித்தார். “ஜெய ஹனுமானே! ஞானக் குணக்கடலே!உலகத்தின் ஒளியே வானரர் கோனே!ராம தூதனே! ஆற்றலின் வடிவமே!அஞ்சனை மைந்தனே! வாயு புத்திரனே…” தொடர்ந்து ஓதி முடித்தவுடன் தனக்குள் முணுமுணுத்தார் சின்னமலை. ‘ஜிலேபி கட்சிக்கு மாநிலத் தலைவராக, கும்பிடுற சாமியையே மாத்த வேண்டி இருக்கு பாரேன்.. முனியப்பனைக் கும்பிட்டு, சாராயம் குடிச்சிட்டு கறிவிருந்து சாப்ட்டுட்டு மல்லாக்ற சுகத்தை விட்டு ரெண்டு வருஷமாகுது. சில சமயங்களில் கட்சில இருக்கோமா அல்லது ட்ராமா கொட்டகைக்குள்ள இருக்கோமான்னு சந்தேகம் வந்திருது. நொடிக்கு நொடி வேஷத்தை மாத்திக்கிட்டே இருக்க வேண்டியதாயிருக்கு.. “ யாரோ வரும் சத்தம் கேட்கவே, (சத்தமாக) “ஜெய் பஜ்ரங் பலி!” உதவியாளன் அண்டா மணி வந்தான். உருண்டு திரண்ட அவன், சபாரி அணிந்திருந்தான். நெற்றியில் விபூதிப் பட்டை. நடுவில் குங்குமம். “காலை வணக்கம் தலைவரே” “காலை வணக்கம் மணி!” “தலைவரே.. எனக்கொரு சந்தேகம்” “கேளுடா..” “நீங்க நிஜமாவே ஐஎஸ் ஐஎஸ்ஸா?” “அடேய்.. அது ஐஎஸ் ஐஎஸ் இல்லடா.. ஐபிஎஸ்!” “என்னவோ ஒன்னு தலைவரே. என் சந்தேகம் அது இல்ல. ஐபிஎஸ் ஆகுறதுக்கு நீங்களே பரிட்சை  எழுதுனீங்களா? இல்ல உங்களுக்கு பதில் ஆள் வச்சு எழுதுனீங்களா?” “டேய் அதிகப் பிரசங்கி.. என்னடா உளர்ற?” “இல்ல தலைவரே.. பல சமயங்கள்ல நீங்க எட்டாம் கிளாஸ் அஞ்சு தடவை பெயிலானவன் மாதிரியே பேசுறீங்க..” “ஐபிஎஸ் சின்னமலை வேற.. ஜிலேபி கட்சித் தலைவர் சின்னமலை வேற.. காசுக்காக, புகழுக்காக, பதவிக்காக நடத்துற டிராமாடா இது..” “அது சரி, ஐபிஎஸ் வேலையை எதுக்குண்ணே ரிஸைன் பண்ணுனீங்க?” “ஜிலேபி கட்சிக்குத் தலைவர் ஆகுறதுக்குதான்?” “அதான் தலைவரே கேக்கறேன்.. தோள் பட்டைல நூல் பட்டை மாட்டுன ஆளுங்க இருக்கும்போது உங்களை எப்படி செலக்ட் பண்ணாங்க..?” “அப்பதானடா ஆண்ட பரம்பரை ஆளுங்களை ஏமாத்த முடியும்?” “என்ன தலைவரே சொல்றிங்க? ஏமாத்தவா?” “ஆமா.. தோள்ல கயிறு மாட்டினவங்க சாய்ஸ் எப்படின்னாலும் ஜிலேபி கட்சிதான். ஆனா கைல கலர் காலரா கயிறு கட்டுற ஆளுங்கள கவர் பண்ணனும்னு சொல்லி எனக்குக் கொடுக்கப்பட்ட அஜெண்டா இது..” “அப்படின்னா எல்லாமே டுபாக்கூரா தலைவரே..” “வாயைத் திறந்தா வர்றது பூராவுமே வண்டி வண்டியா டுபாக்கூர்தான்..” “கன்னிமாரா லைப்ரரியைக் கரைச்சுக் குடிச்சது?” “டுபாக்ஸ்!” “ரெண்டு லட்சம் கேஸ் போட்டது?” “டுபாக்ஸோ டுபாக்ஸ்.. என்னடா மணி.. நான் பேசுறதை வீடியோ எதுவும் எடுக்கறியா?” “திருட்டு விடியோ பிளாக்மெயில் எல்லாம் உங்க வேலை தலைவரே.. சுட்டுப் போட்டாலும் எனக்கு வராது!” “என் தினப்படி ஸ்பான்ஸர்கள் எங்கடா?” “வரவேற்பறைல காத்துக்கிட்டு இருக்காங்க..” “அண்ணே! நீங்க வாக்கிங் போகக் கேரவன் வேணும்னு கேட்டீங்களே.. இந்தாங்க சாவி. வண்டி வெளியே நிக்குது..” – ஒரு ஸ்பான்ஸர். “கரன்ட் பில் கட்டிட்டேன்!’‘ “உங்க நாலு போன்களுக்கு ரீசார்ஜ் பண்ணிட்டேன்!” “வீட்டு வாடகை செட்டில் பண்ணிட்டேன்!” “உங்க ஒரு மாத பெட்ரோல் செலவை நான் பாத்துக்கிட்டேன்!” “இந்தாங்க நீங்க எங்க போனாலும் சோத்துக்கு கூப்பன்..” “ஒரு டஜன் ஜாக்கி ஜட்டி கேட்டீங்கள்ல.. இந்தாங்க..” “ஓகே ஓகே ஸ்பான்ஸர்ஸ். நீங்க எந்த அளவுக்கு எனக்கு ஸ்பான்ஸர் பண்ணுறீங்களோ, அந்த அளவுக்கு உங்கள் பித்தலாட்டங்களை எல்லாம் வாசிங் மெஷின்ல போட்டு கிளீன் பண்ணித் தரச் சொல்லி நம்ம மேலிடத்துக்கு ரெக்கமண்ட் பண்ணுவேன்..” “வாழ்க எங்க வார்ரூம் தலைவர் சின்னமலை!” “வாழ்க குபீர் கடிகாரம் சின்னமலை!” வாழ்க கோஷம் கேட்ட மகிழ்ச்சியில் செல்போனைத் திறந்த சின்னமலையின் முகம் சுருங்கியது. “டேய் மணி, ஒரு சிங்கம் வேணும்னு கேட்டு ஆன்லைன்ல ஆர்டர் பண்ணியிருந்தம். ஆனா ஒரு கரடி பொம்மையை அனுப்பி ஏமாத்திட்டடாங்கன்னு மீம்ஸ் போட்ருக்காங்கடா..” “விடுங்க தலைவரே.. இதெல்லாம் அரசியல்ல ஜகஜம்தானே!” – அண்டா   மணி. தலைமை அலுவலகத்துக்குக் கேரவனில் கிளம்பினார் சின்னமலை. உடன் அல்லக்கைகள் மற்ற கார்களில் ஏறிக்கொண்டனர். தலைமை அலுவலகத்தின் போர்டிகோவில் போய் வண்டி நின்றது. போர்டிகோவுக்கு இடதுபக்கம் பத்தாயிரம் பேரும் வலதுபக்கம் பத்தாயிரம் பேரும் நின்றிருந்தனர். இடதுபக்கம் நின்றிருந்தோர். “கர்நாடக முதலமைச்சர் சின்னமலை வாழ்க!’‘ வலதுபக்கம் நின்றிருந்தோர் “தமிழ்நாடு முதலமைச்சர் சின்னமலை வாழ்க!” நடுவில் நின்ற கூட்டம், “கர்நாடக முதலமைச்சரும் சின்னமலைதான், தமிழ்நாட்டின் முதலமைச்சரும் சின்னமலைதான்!’‘ சின்னமலை அந்தக் கூட்டத்திடம் போனார் “என்னப்பா இதெல்லாம்?” ஒருவன் மார்புச் சட்டையை கிழித்து காட்டினான் “இதோ உங்க பெயரை பச்சை குத்தி வச்சிருக்கேன். நீங்க ஆட்சிக்கு வந்தாதான் ரெண்டு மாநிலத்தையும் காப்பாத்த முடியும்!” “நீங்க ரெண்டு மாநிலங்களுக்கும் முதல்வராக மறுத்தீங்கன்னா சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன்!” “எங்க கோரிக்கையை டிமோஜி ஏத்துக்கிடனும்னு கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர்வரை அங்கப் பிரதட்சணம் செய்வோம்!” “இருமாநிலங்களிலும் மதக்கலவரங்கள் ஏற்படுத்துவோம்!” “சரி, சரி. உங்க உணர்வுகளை மதிச்சு நான் ரெண்டு ஸ்டேட்டுக்கும் சிஎம் ஆகிடறேன்..” “தலைவரே, அது எப்படி நீங்க ஒரே ஆள் ரெண்டு ஸ்டேட்டுக்கும் சிஎம் ஆக முடியும்..? அதுவுமில்லாம, கர்நாடகாவுல போன மாசம்தான் தேர்தல் முடிஞ்சிருக்கு. அங்க உங்க ஜிலேபி கட்சி வாய்ல அல்வா திணிச்சிட்டாங்க. தமிழ்நாட்டுல ஏற்கனவே ஸ்ட்ராங்கா ஒரு ஆட்சி நடந்துட்டு இருக்கு. இன்னும் அவங்களுக்கு மூனு வருஷம் ஆட்சி இருக்கு. இதுல நீங்க எப்டி ரெண்டு ஸ்டேட்டுக்கும் சிஎம் ஆகறது?” – அண்டா  மணி. “அடேய் அண்டா .. நம்ம டிமோஜியால முடியாதது எதுவுமே இல்லடா.. கர்நாடகா மார்க்கெட்ல எம்எல்ஏ என்ன விலைன்னு விசாரி.. நம்ம பாதுஷாகிட்ட சொல்லி பேசி முடிக்கச் சொல்லி நான் சிஎம்மாகிடுவேன். தமிழ்நாட்டுல எந்திரன் சனாவுக்கும் அழகி தனத்துக்கும் ஆபத்துன்னு சொல்லி நம்ம கொப்பர மணியாட்டி சாமிய விட்டு ஆட்சியைக் கலைச்சிட வேண்டியதுதான்.. அப்புறம் என்ன, நான்தான் டபிள் ஸ்டேட் சிஎம்!’‘ “அரசியல் அமைப்புச் சட்டத்துல இதுக்கெல்லாம் இடம் இருக்கா தலைவரே..” “அடேய்.. இங்கிலீஷ் மியூசிக் ரெண்டு டிஸ்ட்ரிக்ட்ல கலெக்டரா இல்லையா? அதையே உதாரணமா சொல்லி, சட்டத்தை நமக்குச் சாதகமா திருத்திக்கிட்டா போச்சு..” “நீங்க கன்னடிகான்னு கர்நாடகக்காரன் ஒத்துப்பானா? தமிழ்நாட்டுக்காரன் உங்களை ஏத்துப்பானா?” “அடேய்.. நம்ம டிமோஜி நினைச்சார்ன்னா, நைட்டு எட்டு மணிக்கு டிவில வந்து, உலகம் முழுக்க நடந்த எந்தத் தேர்தலும் செல்லாது அப்படின்னு சொல்லி, எல்லா நாட்டுலயும் ஆட்சியைக் கலைச்சிட்டு, ஒட்டு மொத்த பூமியையும் பாரத் தேஷ் அப்படின்னு அறிவிச்சுடுவார். ஒரே உலகம் ஒரே எலெக்சன்னு சொல்லித் தேர்தல் நடத்தி, அவர் பூமி பாரத் அதிபராவும் என்னை சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் கவர்னராகவும்கூட ஆக்கிடுவாரு.. ஏன்னா அவங்களை அடக்க என்னை மாதிரி ஐபிஎஸ் ஆபீசராலதான் முடியும்.. தெரிஞ்சுக்கடா அண்டா ..” “இதெல்லாம் நம்புற மாதிரியா தலைவரே இருக்கு..” சுற்றி நின்ற கூட்டம் கோஷமிடத் தொடங்கியது. “வந்தே பாரத் அதிபர் வாழ்க.. டபுள் கண்ட்ரி பிஎம் ஸ்மால் மவுண்டன் வாழ்க..!” “எனக்கு வெக்கமாயிருக்கு தலைவரே..” “அடேய்.. அதெல்லாம் உனக்கு. நான் அரசியலுக்கு வர்றதுக்கு முன்னமே சூடு சொரணை சுயகௌரவம் தன்மானம் வாய்மை உண்மை நேர்மை எல்லாம் தூக்கி எறிஞ்சிட்டுதானே வந்தேன்.. இங்க பாரு, வந்தே பாரத் அப்படிங்கிறது ரயிலுக்கு வச்ச பேருன்னு கூடத் தெரியாம வாழ்க கோஷம் போடறாங்க.. இந்த மாதிரி ஆட்கள் இருக்கிற வரை, ஜிலேபி கட்சி எவ்வளவு வடை சுட்டு வித்தாலும் வியாபாரம் ஆகும்.. புரியுதா..?” “இந்தக் கண்றாவியெல்லாம் என்னால ஏத்துக்கவே முடியல தலைவரே..” “ஏத்துக்க முடியலைன்னா நீ போய் உன் குலத் தொழிலைக் கவனிடா.. இது கவர்னரின் உத்தரவு” கோபமாகக் கத்திய சின்னமலையைப் பிடித்து உலுக்கினான் அண்டா  மணி. “என்ன தலைவரே.. பகல் கனவா? யார் குலத்தொழில் பாக்கணும்? எல்லாரும் அவரவர் குலத்தொழில்தான் பாக்கணும்னா நீங்க எப்படி தலைவரே ஐபிஎஸ் ஆகியிருக்க முடியும்?” அண்டா மணியின் கேள்விக்குப் பதில் சொல்லத் தெரியாமல் விழித்தார் சின்னமலை. “மணியடிக்கிறவன் காலத்துக்கும் மணியடிக்கணும். மத்தவனெல்லாம் அவனுக்கு அடிமை சேவகம் பண்ணனும் அப்படின்னு சொல்ற நீங்க நியாயப்படி இப்போ என்ன பண்ணனும்? ஆடுதானே மேய்க்கணும்? அப்புறம் எப்படி மக்களை ஆள நினைக்கலாம்? இவ்வளவு கேவலமான புத்தி இருக்கிற உங்ககூட இனிமேலும் என்னால இருக்க முடியாது தலைவரே..” எப்படியாவது பெட்ரோமேக்ஸ் லைட் வாயை வாடகைக்கு விட்டுப் பிழைத்துக்கொள்ளலாம் என்று கனவு கண்ட சின்னமலையின் மேண்டிலை உடைத்த பெருமையுடன் அங்கிருந்து வெளியேறினான் மணி.

சந்திராயன் பயணத்தில்

சந்திராயன் பயணத்தில்

கவிதை கடக்கும் தொலைவுநீண்டதாக இருந்தாலும்சுங்கச் சாவடியில்லாததுதமது பயணத்தில்சுகமாக இருந்ததாய்சந்திராயன் சொன்னான் பள்ளம் மேடானசாலைகள்கூடநிலாவை அடையும் வரைஎங்கும் பார்க்கவில்லையெனஅவன் சொன்னதுஅதிசயமாய் இருந்தது சிறுநீர் கழிக்கஐந்து ரூபாய் வசூலிக்கும்சாலையோர உணவகங்கள்ஒன்றுகூடக் காணவில்லை எனசந்திராயன் சொன்னதுசரித்திர முக்கியத்துவமானது வழியில் காசு வாங்கஒரு கடவுள் கூடஉண்டியல் வைத்திருக்கவில்லைஎனச் சொன்னதுநம்ப முடியாத ஆச்சரியம் அனைத்து ஆவணங்களும்சரியாக இருந்தும்போக்குவரத்து விதி மீறலெனப்போலீஸ் பிடிக்காததைசந்திராயன் சொல்லிச்சிரித்தான் செல்கிற வழிகளில்விண்வெளி இடங்களைவீட்டு மனைகளாக்கிவிலை பேசி விற்கரியல் எஸ்டேட்நிறுவனங்களின்அறிவிப்புப் பலகையைப்பார்க்காததுசந்திராயனுக்கு ஷாக் உற்சாக பானம்அருந்திவிட்டுஉருண்டு புரண்டு கிடக்கும்எந்தப் பரமாத்மாக்களையும்தான் செல்லும் வழியில்பார்க்காதது சந்திராயனுக்கு சற்றுசௌகரியக் குறைவுதான் நிலவின்தென்துருவத்தில் இறங்கிவெகு நேரமாயிற்றுஇன்னும் கூடபாட்டி வந்தபாடில்லைபேரப் பிள்ளைக்குஆரத்தி எடுக்கஎன வருத்தம் வேறுஅவனுக்கு ஆங்காங்கேஇரைந்து கிடக்கின்றனஅவளது கன்னக்குழியில்கால் வைத்தசந்திராயன் எடுத்தபுகைப்படத்தில்அவர் சுட்ட வடைகள்

அங்கேயே..

அங்கேயே..

கவிதை இரங்கற்பா எழுதிக்கொண்டிருக்கிறேன்விரைவில் வந்துவிடும்எங்கும் போய்விடாமல்அங்கேயே இருங்கள் மலர் மாலைகள்தயார் செய்ய நேரமாகலாம்வேம்பு நிச்சயம் இருக்கும்எங்கும் போய்விடாமல்அங்கேயே இருங்கள் ஆயிரம் முதலைகள்உடனே ஒப்புக்கொண்டுள்ளனபோட்டியில் கலந்துகொள்ளஎங்கும் போய்விடாமல்அங்கேயே இருங்கள் வண்ணக் கோலாட்டம்மிதமாகத் தோன்றலாம்பறை அடித்து விளையாடகுத்தாட்டம் வரும்எங்கும் போய்விடாமல்அங்கேயே இருங்கள் தள்ளிப் போகுமோகவலை வேண்டவே வேண்டாம்முகச் சவரமும் உடன் செய்வார்எங்கும் போய்விடாமல்அங்கேயே இருங்கள் தண்ணீர்ப் பானைக்காகத்தேடி அலைய வேண்டாம்தோளை வலுவாக வைத்துஎங்கும் போய்விடாமல்அங்கேயே இருங்கள் என்ன!வாய்க்கரிசிக்கும் வழியில்லையா? அடடா!சரி, அதையும் நாங்களே தருகிறோம்எங்கும் போய்விடாமல்அங்கேயே இருங்கள் முறையாகச் செய்ய வேண்டியகாரியங்கள் தெரியுமா?இல்லை, அதுவும் எங்கள் வேலையா?எங்கும் போய்விடாமல்அங்கேயே இருங்கள் ஐந்தாம் நாள், மாதக் கணக்காவதுமுடியுமோ என்னவோ.. பரவாயில்லைஎங்கும் போய்விடாமல்அங்கேயே இருங்கள் கழுத்து நெரிபட்டுக்கிடந்தசனநாயகம் இறந்த நேரமாவதுசரியாகக் குறித்தீரா சோதிடரேபாவம் அந்தப் பச்சை மண்ணைஇனியாவது பிரித்துப் பார்க்காமல்வலியின்றி அடக்கம் செய்வோம் விரைந்து வருகிறது எல்லாம்எங்கும் போய்விடாமல்அங்கேயே இருங்கள்

அரச விருந்தாளி

அரச விருந்தாளி

நகைச்சுவைச் சிறுகதை முதல் வகுப்பு நீதித்துறை மாஜிஸ்டிரேட் கோர்டின் குற்றவாளிக்கூண்டில் ராக்கப்பன் நின்றிருந்தான். வயது 40, உயரம் 175 செமீ, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவன், திருமணமானவன், மனைவி அவனை விட்டு விலகி நான்கு வருடங்கள் ஆகின்றன. மீன் அங்காடியில் மீன்களை வெட்டிச் சுத்தம்செய்து தரும் பணியைச் செய்து வந்தான். குரூர நகைச்சுவை உணர்வு கொண்டவன். மாஜிஸ்டிரேட், பழைய திரைப்பட நடிகர் உசிலைமணியின் சாயலில் இருந்தார். அரசு வழக்கறிஞர் எழுந்து, மெதுவாக நடந்து ராக்கப்பனிடம் வந்தார். “நீதானே நண்டு ராக்கப்பன்?” “நீதானே பப்பரப்பா பப்ளிக் புராசிகுட்டர்?” “மரியாதை இல்லாம பேசக்கூடாது” “நீ மட்டும் பேசலாமா?” “சரிங்க நண்டு சார். விஷயத்துக்கு வருவோம்…” “வந்துக்க” “12.06.2023 அன்று காலை 10.30 மணிக்கு ஆர் ஒன் போலீஸ் ஸ்டேஷன் போனாயா?” “போனேன்” “போலீஸ் ஸ்டேஷன் வாசல்ல நின்ன டானாக்காரருக்கு மீசையும் நாமமும் வரைஞ்சு விட்டியா?” “சமத்தா நின்னார். மீசையும் நாமமும் வரைஞ்சேன்” “போலீஸ்காரர்னு உனக்குத் துளியும் மரியாதை இல்லை” “சரியா வரையாம விட்ட மீசையை எச்சில் துப்பி அழிச்சேனே… அதைச் சொல்றீங்களா? நான் மீசையும் நாமமும் வரைஞ்சதை அந்தப் போலீஸ்காரர் செமத்தியா என்ஜாய் பண்ணினார் தெரியுமா?” “அடுத்து என்ன பண்ணின? ஸ்டேஷனுக்குள்ள திமுதிமுன்னு எருமைமாடு மாதிரி புகுந்த” “ஆமா… எவ்வளவு நேரம் வெளிவாசல் டானாக்காரர்கிட்டயே நிக்றது? உள்ளே நடந்தேன்” “கொண்டு வந்த மீன் கழிவுகளை ஸ்டேஷனுக்குள்ள விசிறியடிச்சே” “அஞ்சு கிலோ இருக்கும். கழிவுகளைக் கொட்ன பிறகு ஸ்டேஷன் பூராவும் கலீஜான நாத்தம்.. மீன் மார்க்கெட் அட்மாஸ்பியரை ஸ்டேஷனுக்குள்ள கொண்டு வந்திட்டேன்ல்ல..” “அட்ரோஸியஸ்..” “டைரக்டர் அட்லி பத்தியெல்லாம் எனக்குத் தெரியாதுங்க..” “ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் மரியசூசை ஓடிவந்து, ‘ஏய்யா மீன் கழிவுகளைக் கொட்டின?’ அப்டின்னு கோபமா கேட்டார்” “பழைய ரயில் கரி இன்ஜின் போலப் புசுபுசுத்தார்” “அவரை நீ என்ன பண்ணின?” “அவரை மடிலபோட்டு ரோரோன்னு கொஞ்சினேன்” “பொய்.. அவரைத் தாறுமாறா அடிச்சு, சட்டையைக் கிழிச்சு, தலைமுடியைப் பிய்ச்சு, அவர் மூஞ்சில சாணிய அப்பிட்ட… இன்ஸ்பெக்டர் ஐஸியூல இருந்து போன வாரம்தான் டிஸ்சார்ஜ் ஆனார். ஸ்டேஷன் ஆளுக வந்து உன்னையும் இன்ஸ்பெக்டரையும் விலக்கிவிடலைன்னா இன்ஸ்பெக்டர் அடி தாங்காமச் செத்திருப்பார்” “என்னை ரொம்பப் புகழாதிங்க பப்பரப்பா பப்ளிக் புராசிகுட்டர்” “நீ வெளிவாசல் டானாக்காரரைத் தொந்திரவு பண்ணினது, இபிகோ 353 பிரிவின்படியும் இன்ஸ்பெக்டரைத் தாக்கிக் கொல்ல முயன்றது இபிகோ 307 பிரிவின்படியும் குற்றம். இதோட உன் க்ரைம் நின்னுச்சா? இல்லையே…” “எதையும் அரைகுறையா செய்றது என் பழக்கமில்லை” “ஸ்டேஷனுக்குள்ள இருந்த பெண் போலீஸைக் கட்டியணைச்சு இங்கீலிசு முத்தம் கொடுத்திருக்க.. பெண் போலீஸிடம் அத்து மீறி, பாலியல் பலாத்காரம் பண்ண முயற்சி பண்ணின. அந்தப் பொண்ணு வாங்கின முத்தத்தோட தப்பிச்சு ஓடிருச்சு” “அந்தப் பொம்பளை போலீஸ் எனக்குப் போதிய ஒத்துழைப்புத் தரல… ரேப் பண்றது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?” “பணியில் இருந்த பெண் போலீஸைப் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது இபிகோ 376 பிரிவின்படி ஏழுவருடக் கடுங்காவலுக்குரிய குற்றம். பெண் போலீஸின் கழுத்துச் செயினைத் திருடினாய். இது இபிகோ 511 பிரிவின்படிக் குற்றம்..” “அந்தப் பெண் போலீஸ் மாடு கட்டுற கயிறு மாதிரி இருந்துச்சு. அந்தச் செயினை விலைக்கா வாங்கிப் போட்டிருக்கும்? லஞ்சம் வாங்கித்தான் போட்டிருக்கும். அதான் லஞ்சப் பொருளைப் பறிமுதல் பண்ணினேன்…” “உன் அடுத்த க்ரைம்.. எழுத்தர் மேஜைக்கு ஓடி அவரின் கம்ப்யூட்டரை உடைத்தாய். அவரின் மேஜையிலிருந்த கோப்புகளைக் கிழித்துப் போட்டாய்..” “போலீஸ் ஸ்டேஷன்கள் இல்லேன்னா ஆட்டோமாட்டிக்காக குற்றங்கள் குறைஞ்சிடும். ஒருத்தனும் கள்ளச்சாராயம் காய்ச்ச மாட்டான். நேஷனல் பெர்மிட் லாரிக்காரன்கள் நிம்மதியா லாரி ஓட்டுவான்க. நடைபாதை வியாபாரிகள்கிட்ட கோயில் யானை மாதிரி பிச்சை கேட்பது நின்றுவிடும். கட்டப் பஞ்சாயத்துகள் நடக்காது..” மாஜிஸ்டிரேட் குறுக்கிட்டார். “விட்டா நீதிமன்றங்களும் தேவை இல்லைன்னு சொல்வ போல…” “நீதிமன்றங்கள்ல நேர்மை இருந்தா சாமானியர்களுக்கு எளிமையா நீதி கிடைச்சிரும். ஆனா அதனால நமக்கென்ன லாபம் மொதலாளி? இதுல தொழில் ரகசியம் என்னன்னா.. கி.. கி.. கி..” உசிலைமணியைப் போலவே மிமிக்ரி செய்து நீதிபதியை நக்கல் அடித்தான் ராக்கப்பன். “உன் பேச்சு நீதிமன்ற அவமதிப்பின் கீழ் வரும். நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் 1971இன் பிரிவு 2(சி), உன் துர்நடத்தைக்குத் தகுந்த தண்டனை தரும்” பப்ளிக் பிராஸிக்யூட்டர் தொடர்ந்தார். “காவல்நிலையப் பணிகளைச் செய்ய விடாதது, காவல்நிலைய சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தது ஆகியவை இபிகோ 425இன் படி குற்றம்” “குற்றம் குற்றம்னு ஏன் பினாத்றீங்க?” கத்தினான் ராக்கப்பன். “இதோட குற்றஞ்சாட்டப்பட்ட ராக்கப்பனின் குற்றங்கள் முடிவடையவில்லை. லாக்கப் ரூம் சாவியை எடுத்துத் திறந்து, லாக்கப்பில் இருந்த ஆறு கைதிகள் தப்பித்து ஓட உதவியிருக்கிறார்” “உங்கள்மீது சுமத்தப்படும் குற்றங்களை எல்லாம் ஒப்புக்கொள்கிறீர்களா ராக்கப்பன்?” “ஒத்துக்கிட்டா அவார்டா தரப் போறீங்க?” “நேரடியான பதில் தேவை…” ராக்கப்பன் சார்பாக வாதாடும் வக்கீல் எழுந்தார். “யோவ் தேங்காமூடி வக்கீல்… நீ எனக்காக வாதாடி இன்னும் தண்டனையைக் கூட்டிராத. கம்னு உக்காரு” மாஜிஸ்டிரேட் ஒருகணம் யோசித்தார். “மிஸ்டர் பிபி, அக்யூஸ்ட்டின் நடவடிக்கைகள் முழுக்க மனநிலை பிறழ்ந்த ஒருவரின் நடவடிக்கைகளாகத் தெரிகிறது. நாம் ஏன் இவரை மனநலப் பரிசோதனைக்கு அனுப்பக்கூடாது?” “ஏய் ஜட்ஜு.. யாரைப் பாத்து மென்டல்னு சொன்ன? நீதான் மெண்டல். நான் நல்லாத்தான் இருக்கேன்.. என்னால வேணுமின்னா பத்து பேரு மெண்டல் ஆவானுக” “போலீஸ் உன்னை அடித்தார்களா?” “அவனவன் பொண்டாட்டிக மேல இருந்த கோவத்தை என்னை அடிச்சுத் தீர்த்துக்கிட்டான்க. நான் வடிவேலுமாதிரி. என்னை ஆயிரம் அடி அடிச்சாலும் நல்லா இருந்துச்சு மசாஜ்னு எந்திரிச்சு வந்திருவேன்..” “உன்னைப் பார்த்தால் எனக்குப் பரிதாபமாக இருக்கிறது” “நான் பரிதாபப்படச் சொன்னேனா? நீ உன் வேலையப் பாரு மாஜிஸ்..” “உன் தண்டனையைக் குறைக்கலாமா?” “எதுக்கு? இபிகோ என்ன சொல்லுதோ அந்த தண்டனைகளை என் மீது விதிச்சிட்டுப் போ..” மாஜிஸ்டிரேட் தன் தீர்ப்பை வாசிக்க ஆரம்பித்தார். “இபிகோ 353, 376, 425, 511 மற்றும் நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் 1971 பிரிவு 2(சி)இன்படி குற்றஞ்சாட்டப்பட்ட ராக்கப்பனுக்கு மொத்தமாக 17 வருடக் கடுங்காவல் தண்டனையும் ஒரு லட்சம் அபராதமும் விதிக்கிறேன். அபராதம் கட்டவில்லை என்றால் கூடுதலாக ஆறுமாதம் கடுங்காவல் தண்டனை…” “டாங்ஸ் மாஜிஸ் செல்லாக்குட்டி” “உனக்கு அப்பீல் செய்ய அவகாசம் வேண்டுமா? சொந்த ஜாமீன் தரட்டுமா?” “அய்ய.. நேரா என்னைப் புழலுக்கு அனுப்பு அம்மணி..” *** புழல் சிறைச்சாலைக்குள் நுழைந்தான் ராக்கப்பன். “என்னய்யா… நுணலும் தன் வாயால கெடும் என்பதுபோல, குற்றங்களை எல்லாம் பெருமையா ஒத்துக்கிட்டு ஜெயிலுக்கு வந்திட்ட?” என்றார் வார்டன். “நான் போட்டு வைத்த ஜெயில் திட்டம் ஓகே கண்மணி” பாடினான் ராக்கப்பன். “என்னது.. திட்டம் போட்டியா?” “ஆமா.. திட்டம்தான். மூன்று வேளை ராஜ உணவு- வாரத்திற்கு ஒரு புது சினிமா- மாதம் ஒருமுறை மனைவியுடன் மூன்று மணிநேரம்- செல்போன் இன்கம்மிங் கால் வசதி- ஆறுமாதத்துக்கு ஒரு வாரம் பரோல்- ஏசி அறை ஈரோப்பியன் கிளாசெட்டுடன். சிறைக்குள் கிடைக்கும் வசதி வாய்ப்பெல்லாம், மாதம் நாப்பதாயிரம் செலவு பண்ணினாலும் கிடைக்காது. தினம் மீன்வெட்டிச் சுத்தப்படுத்திக் கொடுத்தா பிச்சைக்காசு இருபது முப்பது ரூபாதான் கிடைக்கும். அதனால திட்டம் போட்டு போலீஸ் ஸ்டேஷனுக்குள்ள புகுந்து, வெரைட்டி வெரைட்டியா க்ரைம் செய்து கைதாகிவிட்டேன். அடுத்த 15-18 வருஷத்துக்கு நான் மாமியார் வீட்டுக்குப் போன புது மாப்பிள்ளை.. செம என்ஜாய் கரோதான்” வார்டன் தோள்களைக் குலுக்கி அங்கலாய்த்தார். “அட கிறுக்குப் பயலே.. எனி ஹவ், அரச விருந்தாளிக்கு என் கண்ணிய வரவேற்பு..” வெல்கம் ட்ரிங்க்காகக் கொடுக்கப்பட்ட மட்டன் சூப்பைக் குடித்தபடி கண் சிமிட்டிய ராக்கப்பன் சொன்னான், “சுதந்திர தினத்திற்கு பீஃப் பிரியாணி போட்ருங்க..”

அத்தியாகிரகம்

அத்தியாகிரகம்

கவிதை ஆடையற்ற மேனியோடுநடக்கும் நங்கையைகிட்டப் பார்வையில் கண்டதும் நகையோடு நடக்கும் சுதந்திரத்ததைதூரப் பார்வையில் கண்டகிழவனின் கண்ணாடிகீழே விழுந்து சிதறியது அதன் நூற்றாயிரம் துகள்களும்கோரப் பார்வையோடு வெறித்தபடி நடக்கும்கால் நரம்புகளை ஊடுருவி கண் நரம்புகளைச் சிதைக்கும்அத்தியாகிரகத்திற்குஅழைப்பு விடுத்திருக்கின்றன மெளனச் சாணத்தால்கிழவனின் கண்ணாடிச் சில்லுகளைஒருபோதும் ஒற்றி எடுத்திட முடியாது நாடே போற்றிய எழுபத்தைந்துநைந்து போனது வீதியெங்கும் மூவர்ணம்பறக்க-விட்டோம்வீடெங்கும் ஏற்றி வைத்துச்சிறக்க வைத்தோம் அதையின்றுஉயர் வர்ணம் யாரென்றகர்ணத்தில் உடைத்துவிட்டார்கள் கிழவனின் கண்ணாடிச் சில்லுகளின் மீதுமெளனத்தை அடைகாக்க அனுமதித்தால் ஆபரணங்களைப் போலஆடைகளுக்கும்வட்டி கட்ட நேரிடும்

அணுகுண்டின் தந்தையும் பகவத்கீதையும்

அணுகுண்டின் தந்தையும் பகவத்கீதையும்

இரண்டாம் உலகப்போரில் ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் மீது இரண்டு அணுகுண்டுகள் அமெரிக்காவால் வீசப்பட்டன. 1945ஆம் ஆண்டு ஆகஸ்டு 6ஆம் தேதி மற்றும் 9ஆம் தேதிகளில் அடுத்தடுத்து இரண்டு அணுகுண்டுகள் வீசப்பட்டன. 60க்கும் மேற்பட்ட நகரங்கள் ஒரு நொடியில் பஸ்பமாக்கப்பட்டு 2 லட்சத்திற்கும் அதிகமான மக்களும் கொல்லப்பட்டதாக வரலாறு சொல்கிறது. லிட்டில் பாய் (Little Boy) மற்றும் ஃபேட் மேன் (Fat Man) என்று பெயரிடப்பட்ட அந்த அணுகுண்டுகள்தான் உலக வரலாற்றில், மனித வரலாற்றில் முதல்முறையாக, போரில் பயன்படுத்தப்பட்ட அணுகுண்டுகள் (Atomic Bombs). இந்த அணுகுண்டுகளைத் தயாரிக்க, அமெரிக்க அரசால் உருவாக்கப்பட்டிருந்த மன்ஹாட்டன் புராஜெக்ட் (Manhattan Project) குழுவினர்தான் இதைச் செயல்படுத்தினார்கள். மன்ஹாட்டன் புராஜெக்டின் ஒரு அங்கமாக நியூ மெக்ஸிகோவில் உள்ள லாஸ் அலமாஸ் என்ற இடத்தில் மிக ரகசியமாக உருவாக்கப்பட்டிருந்த ஆய்வுக்கூடத்தில்தான் இந்த அணுகுண்டுகள் உருவாக்கப்பட்டன. அங்குதான் உலகத்தின் முதல் அணுகுண்டு பரிசோதனையும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அந்த அணுகுண்டுகளை உருவாக்கும் ஆய்வின் தலைமை சயிண்டிஸ்டாக – மாஸ்டர் மைண்டாகச் செயல்பட்டவர்தான் ஓப்பன்ஹெய்மர் என்கிற இயற்பியல் அறிவியலாளன். குவான்டம் பிஸிக்ஸ் மீது ஓப்பன்ஹெய்மருக்கு இருந்த தீவிரமான காதல்தான் அணுகுண்டின் தந்தை என்ற நிலையை நோக்கி அவரை இழுத்துச் சென்றது. 1945 ஜூலை 16ஆம் நாள், நியூ மெக்ஸிகோ நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு, ட்ரினிட்டி (Trinity) என்று ஓப்பன்ஹெய்மரால் பெயர் சூட்டப்பட்டிருந்த அந்த உலகத்தின் முதல் அணுகுண்டு பரிசோதனை நடத்தப்பட்டு வெற்றி பெறுகிறது. அந்த வெற்றிதான் Father of Atomic Bomb என்ற வரலாற்றுப் பெயரை ஓப்பன்ஹெய்மருக்குத் தருகிறது. அணுகுண்டு பரிசோதனை வெற்றியடைந்த பின் அமெரிக்கா நீண்ட காலம் எல்லாம் காத்திருக்கவில்லை. வெறும் 20 நாட்களில் அமெரிக்கா ஜப்பான்மீது அணுகுண்டுகளை வீசுகிறது. “இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின் கை ஓங்கி இருக்கிறது. ஜெர்மனியில் அணுகுண்டு ஆராய்ச்சியை ஏற்கனவே தொடங்கிவிட்டார்கள். அவர்களுக்கு அது சாத்தியமாகும் எனில், உலகம் பேரழிவைச் சந்திக்கும். அதைப்போல ரஷ்யாவும் இந்த அணுகுண்டு ஆராய்ச்சியில் மிகவும் மும்முரமாக இருப்பதாக அறிகிறோம். உலகத்தின் பேரழிவைத் தடுக்க, இதை நாம் செய்தாக வேண்டியிருக்கிறது” என்று சொல்லித்தான் ஓப்பன்ஹெய்மர் இதைச் செய்யச் சம்மதிக்க வைக்கிறார்கள். ஏனெனில், ஓப்பன்ஹெய்மர் கம்யூனிஸ ஆதரவாளராக இருக்கிறார். கூடவே, ‘தியரட்டிக்கல்தான் என் விருப்பம்; எக்ஸிகியூஸன் அல்ல’ என்றும் கூறுகிறார். ஆனால் ஜெர்மனியையும் ரஷ்யாவையும் ஹிட்லரையும் காரணம் காட்டித்தான் லாஸ் அலமாஸில் அந்த ரகசிய ஆய்வுக்கூடத்தை, ஓப்பன்ஹெய்மரை வைத்து உருவாக்குகிறார்கள். இதுதான் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ஓப்பன்ஹெய்மர் படத்தின் கதை சாராம்சம். இது தவிர ஹெய்மரின் காதல்கள், அவரின் கம்யூனிஸ ஆதரவு மற்றும் அணு ஆயுதங்கள் (Nuclear Weapons) குறித்த அவரது நிலைப்பாட்டால் அவருக்கு ஏற்பட்ட அரசாங்க ரீதியான பிரச்சினைகள், நெருக்கடிகள், சக விஞ்ஞானிகளின் பொறாமைகள் என, கொஞ்சம் எமோஷனல் ஏரியாவும் உண்டு. ஓப்பன் ஹெய்மருக்கு, அணுகுண்டு சோதனை வெற்றிபெற்று விடும்; உலகத்தின் முதல் அணுகுண்டு லாஸ் அலமாஸில் உருவாக்கப்பட்டு விடும் என்று, தன் ஆய்வின் மீது மிகப்பெரிய நம்பிக்கை வருகிறது. அப்போது அதன் கூடவே அவருக்கு மிகப்பெரிய அவநம்பிக்கையும் சந்தேகமும் எழுகிறது. ஏனென்றால், இந்த அணுகுண்டு சோதனை வெற்றிகரமாக முடிந்தால் உலகம் இதை வைத்து எவ்வளவு மோசமான கொடுரங்களைச் செய்யும், எவ்வளவு மக்கள் கொல்லப்படுவார்கள், இதைக் கண்டிப்பாக நாம் செய்தே ஆக வேண்டுமா என்றெல்லாம் ஓப்பன்ஹெய்மர் குழம்புகிறார். அங்கேதான் ஓப்பன் ஹெய்மரின் தோளில் தட்டி, ‘அதெல்லாம் தப்பில்லை, கண்டிப்பாக இதை நீ செய்ய வேண்டும்’ என்று நம்ம ஊரிலிருந்து ஒருவர் ஆறுதல் கூறி, ஆதரவுக் கரம் நீட்டுகிறார். அவர் வேறு யாருமல்ல. ‘தி கிரேட் லார்ட் கிருஷ்ணா அலைஸ் கண்ணன்’தான். ஆம். ஓப்பன்ஹெய்மர் பகவத் கீதாவை வாசித்தபோது, அதில் அர்ஜூனன், போரில் தன் சொந்தபந்தங்களை நானே கொல்வதா என தவித்துக் கலங்கி நின்றபோது, கண்ணன் கீதாசாரத்தைக் கூறுகிறார். அதாவது, “மரணம் என்பது நான்தான். மக்கள், மரம், செடி, கொடி எல்லாம் நான்தான். கொல்பவனாகிய நீயும் நான்தான். கொல்லப்படுபவர்களாகிய மக்களும் நான்தான். கொல்லச் சொல்பவனும் நான்தான். நீ எதையும் செய்யவில்லை. நான்தான் அனைத்தையும் செய்கிறேன். நீ இதைச் செய்வதனால் போற்றப்பட்டாலும் தூற்றப்பட்டாலும் அது என்னையே சேரும்; உன்னைச் சேராது. நீ இதைச் செய்யவில்லை என்றாலும் இன்னொருவன் செய்யத்தான் போகிறான். எனவே, உன் கடமையை நீ செய்; பலனைப் பற்றி நீ யோசிக்காதே” என்கிறான். அதில் தெளிவு?! பெற்ற அர்ஜூனன் போல, ஓப்பன்ஹெய்மரும் தெளிவு பெற்று அணுகுண்டைத் தயாரிக்கிறார். கிறிஸ்டோபர் நோலன் இந்த உரையாடலையே படத்தின் ஒரு காட்சியாகவும் வைத்திருப்பார். கண்ணனாக அப்போதைய அமெரிக்க பிரசிடென்ட் ரூஸ்வெல்ட்டும் அர்ஜூனனாக ஓப்பன்ஹெய்மரும் பேசிக்கொள்வதுபோல அச்சு அசலாக அந்த உரையாடலைக் காட்சிப்படுத்தியிருப்பார் நோலன். ஒரே ஒரு வித்தியாசம், பாரதப் போரில் மக்களைக் கொல்வதற்கு முன் நடக்கும் உரையாடல், இங்கே ஜப்பான்மீது குண்டு வீசிக் கொன்றபின் நடக்கும். இப்படியாக அவர்கள் இயற்பியல், அறிவியல், குவான்டம் பிஸிக்ஸ் என்று அறிவியல் சார்ந்த படங்கள், அறிவியலாளர்கள் சார்ந்த படங்கள், வரலாற்றுப் படங்கள் என எடுத்துக்கொண்டிருக்க, நாம் கேரளக் கதைகள் கஸ்மீர்க் கதைகள் என்று புளுகிக் கொண்டிருக்கிறோம். கில்லியன் மர்பி, ஓப்பன்ஹெய்மராகவே வாழ்ந்திருக்கிறார். என்ன ஒரு ஸ்டைல், ஆட்டிட்யூட்! கூடவே ராபர்ட் டௌனி ஜுனியர், அட நம்ம அயர்ன்மேனா இது ஆச்சர்யப்பட வைக்கும் தோற்றத்தில் கேரக்டரில் வந்து அசத்துகிறார். மார்ஷியன் மேட் டேமென் அட்டகாசமான கதாபாத்திரத்தில் வருகிறார். மொத்தத்தில், ஓப்பன்ஹெய்மர் படமாகவும் மிகச்சிறப்பான அனுபவமாக இருக்கும்.

திருப்பூர் எனும் திருப்புமுனை – 2

திருப்பூர் எனும் திருப்புமுனை – 2

முதல் பகுதிக்குக் கிடைத்த ஆதரவு, மகிழ்ச்சியையும் கூடவே பொறுப்புணர்வையும் அதிகரித்துள்ளது. ஏனெனில், பாராட்டுகளுக்கு அப்பாற்பட்டு, இதுவொரு வரலாற்றுப் பதிவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பல்வேறு தரப்பிலும் உருவாகியுள்ளது. இவற்றையெல்லாம் உள்வாங்கி, உணர்ந்து, நம்பிக்கையுடன் தொடர்வோம். பொதுவாகவே, கொங்கு மண்டலப் பகுதி என்பது மழை மறைவுப் பிரேதேசம் ஆகும். இந்தப் பகுதியின் நீராதாரம் நொய்யல், பவானி, அமராவதி உள்ளிட்ட ஆறுகளையும் பருவமழையையும் மட்டுமே சார்ந்துள்ளது. இங்கு முன்னெடுக்கப்படும் விவசாயம், பருவமழை சார்ந்த விவசாயம் என்பதால், பொருளீட்டலுக்கான தேடல் கொங்குப் பகுதிகளில் இயற்கையாகவே அதிகம். இதன் காரணமாகவே, பல்வேறு சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் இங்கு பல்கிப் பெருகி, தமிழ்நாட்டின் தொழில் சார்ந்த வேலைவாய்ப்புகளிலும் பொருளாதாரம் மற்றும் உற்பத்திக் குறியீடுகளிலும் கொங்குப் பகுதி எப்பொழுதும் முன்னணி வகிக்கிறது. ஒட்டுமொத்த கொங்குப் பகுதிகளில் ஜவுளித் தொழில் பிரதானமாக வளர்ந்ததற்கு, பருத்தி உற்பத்தியோடு, நான் மேற்சொன்ன காரணங்களும் உள்ளடங்கியுள்ளன. இதையும் கடந்து, ஒரு வரலாற்றுத் தரவையும் இங்கு குறிப்பிட வேண்டும். ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த கொடுமணல் என்னும் ஊரில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில், சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னரே இப்பகுதியில் பட்டுப்பூச்சி வளர்ப்பும் பட்டாடைகள் நெய்து ரோமானிய நாட்டிற்கு ஏற்றுமதியும் நடந்துள்ள விவரங்கள் கிடைத்துள்ளன. எனவே, இங்குள்ள மக்களின் மரபணுவிலேயே ஜவுளித்தொழிலின் தாக்கம் இருப்பதே, இங்கு இந்தத் தொழில் வளர முக்கியக் காரணங்களில் ஒன்றாகக் கூறலாம். 1950-களில் வேறொரு பணியின் காரணமாகக் கல்கத்தா சென்ற திரு. குலாம் காதர் அவர்கள், அங்கிருந்து தையல் இயந்திரங்களை வாங்கிவந்து, இங்கு பனியன் உற்பத்தியை முன்னெடுத்தார்.  தொடக்கத்தில் வெள்ளை நிற உள்ளாடைகள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. நூலைத் துணியாகப் பின்னுவதற்கான நிட்டிங் இயந்திரம் லூதியானாவிலிருந்து வாங்கப்பட்டு, துணி உற்பத்தி தொடங்கியது. தொடர்ந்து, அந்தத் துணிகளை வெள்ளையாக்கும் வேலைகளைச் செய்ய சலவைப் பட்டறைகள் உருவாக்கப்பட்டன. 1970-களில் துணிகளுக்கு வண்ணம் ஏற்றும் சாய ஆலைகள் தொடங்கப்பெற்று, உள்ளாடைகளைத் தாண்டி மேலாடை உற்பத்தியும் தொடங்கியது. பின்னர் ஆடைகளில் அச்சு (பிரிண்ட்) செய்வதற்கான ஆலைகளும் உருவாகின. ஏற்றுமதித் தரம் வாய்ந்த ஆடைகளின் தயாரிப்பு தொடங்கப்பெற்று, 1980-களில் ஏற்றுமதியும் தொடங்கியது. ஒரு தொழில் அமைக்க ஏதுவான சுற்றுச்சூழல், அந்தத் தொழில் குறித்தான நுட்பங்கள், அதற்கான அடிப்படைக் கட்டமைப்புகள், அதனைச் சந்தைப்படுத்தும் வழிகள், எல்லாவற்றிற்கும் மேலாகப் பொருளாதாரம், இவையனைத்தையும்  உள்ளடக்கியதுதான் வெற்றிகரமான உற்பத்தித் தொழிலுக்கான அடிப்படை. எந்தவித தொழில்நுட்ப, கல்விப் பின்புலமோ வழிகாட்டுதல்களோ இல்லாது, ‘உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றதுதள்ளினுந் தள்ளாமை நீர்த்து’ என்னும் திருவள்ளுவரின் வாக்குக்கேற்ப, உயர வேண்டும் என்கிற எண்ணமும் அதற்கான தேடலும் தேடலைப் பகிர்தலும் அதன் வாயிலாக ஒரு சமூகமாக உயர்ந்ததும் திருப்பூரின் வெற்றிக்கான அடிப்படை. இந்தத் தொழிலும் இந்த ஊரும் சுயம்புவாக உருவானவை என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க இயலாது. 1980-களில் ஒரு தொலைபேசி இணைப்பைப் பெறுவதற்கே பெரும் செலவு செய்து, நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டும். அதுவும், வெளிநாடுகளுக்குத் தொடர்பு கொள்வது அத்தனை எளிதல்ல. அந்தக் காலகட்டத்தில் திருப்பூர் ஒரு சிறு நகரம்; ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தின் ஒரு அங்கம். வெளிநாடுகளுக்கான தொலைபேசித் தொடர்புக்கு கோவைக்குச் செல்லவேண்டிய சூழல் இருந்தது. ஏற்றுமதிக்கான ஆவணங்களைத் தயார் செய்துகொண்டு, அதற்கான அனுமதியை அளிக்கும் மத்திய  அரசின் அலுவலகங்களை நோக்கி சென்னை, பெங்களூரு, மும்பை அல்லது டெல்லி செல்லவேண்டும். இத்தகையை சிரமங்கள் நிறைந்த அந்தக் காலகட்டத்தில் இந்தத் தொழிலில் ஈடுபட்டவர்களின் மனோபலமும் விடாமுயற்சியும் எதற்கும் துணிந்த செயல்பாடுகளும் இந்தத் தொழிலின் ஆரம்பகாலச் சிரமங்களைக் கடந்து முன்னேற, அடுத்தடுத்து இந்தத் தொழிலில் ஈடுபட்டவர்களுக்குப் பெருமளவு உதவியது. பொதுவாக ஒரு தொழிற்சாலை தொடங்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கும்போது, எளிதாக அந்தத் தொழிற்சாலைக்குள் அனுமதிப்பதோ நுட்பங்களைக் கற்று கொடுப்பதோ சந்தையைப் பற்றிய அறிவினைப் பகிர்வது என்பதோ நடக்காது. இன்றும், இந்தத் தொழில்நுட்ப வசதிகள் பெருகியுள்ள காலத்திலும் பல இடங்களில் இது சாத்தியமில்லை. ஆனால், திருப்பூரைப் பொறுத்தமட்டில் இந்தத் தொழில் வளர்ந்ததற்கான பிரதான காரணங்கள் பல என்பதை ஒவ்வொரு இடத்திலும் சுட்டிக்காட்ட வேண்டியது அவசியம். அதுபோலவே, பகிர்தல் என்பது திருப்பூரின் வளர்ச்சிப் பின்புலத்தின் பிரதான காரணங்களில் ஒன்று. தொழில் நுட்பங்கள், நிதியாதாரத் திரட்டல், சந்தை வாய்ப்புகள், மூலப்பொருட்களின் மூலம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் எந்தவிதத் தயக்கமுமின்றி இந்தத் தொழிலை முன்னெடுக்க வந்த நண்பர்கள், உற்றார், உறவினர், நண்பர்களின் நண்பர்கள், உறவினர்களின் நண்பர்கள் எனப் பகிர்ந்து, அவர்களையும் தொழிலை நிறுவச்செய்த பண்பாடு  திருப்பூரைத் தவிர வேறெந்த ஊருக்கும் இல்லாத சிறப்பு என்பதைப் பெருமிதத்துடன் குறிப்பிடலாம். இதைச் சொல்வதால் மற்ற தொழில் நகரங்களைத் தாழ்த்தியோ அல்லது திருப்பூரை உயர்த்தியோ கூறுவது நோக்கமல்ல. இங்குள்ள இயல்பினையும் சுயம்புவாக இந்தத் தொழில் உருவானதையும் பல பத்தாண்டுகளாக நாட்டின் பல்வேறு மாநிலங்களின் ஆட்சியாளர்கள் திருப்பூரைப் போன்ற ஒரு தொழில்நகரைத் தங்கள் மாநிலங்களில் அமைக்க முயன்று இயலாமல் போனதும் இன்றைய, மத்திய வர்த்தகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர்  திரு. பியூஸ் கோயல், பல்வேறு உள்நாடு மற்றும் வெளிநாட்டு தொழில்சார் கூட்டங்களில், ‘திருப்பூரைப் போன்று, இந்தியா முழுவதும் 75 திருப்பூரை உருவாக்கவேண்டும்’ என்று பதிவு செய்வதின் அடிப்படையும் திருப்பூரின் இந்தப் பண்பாட்டு விழுமியமே. ‘திருப்பூர் எனும் திருப்புமுனை’ கட்டுரை, இன்றைய சிக்கலான சூழலை விவரிக்கத்தானே! ஏன் பழைய வரலாறுகளைப் பேசவேண்டும்?’ என்ற கேள்வி உங்களில் பலருக்கு எழலாம். திருப்பூரின் தொழில், அடுத்த தலைமுறை மற்றும் சில தொழிற்சாலைகளில் இரண்டாம் தலைமுறைக்கு நகர்ந்துள்ள சூழலில், ஜவுளித் தொழிலைச் சாராதவர்களும் இந்தக் கட்டுரையை வாசிக்கும்போது, அவர்களுக்கும் இந்தத் தொழில் கடந்து வந்த பாதை, அதைக் கடக்க ஏற்பட்ட சிரமங்கள், அந்தப் பயணத்தில் நேர்ந்த நல்ல விடயங்கள் மற்றும் தவறான முடிவுகள், செய்யத் தவறிய விடயங்கள் உள்ளிட்டவற்றை விவரித்தால் மட்டுமே, அடுத்து பயணிக்க வேண்டிய பாதையை வலுவாக அமைத்துக்கொள்ளலாம் என்பதாலேயே முந்தைய வரலாறுகளைச் சொல்ல வேண்டியுள்ளது. எனவே கடந்தகால வரலாற்றை மிகச் சுருக்கமாகப் புரிந்துகொண்டு, மேலும் பல்வேறு தகவல்களை அடுத்தடுத்த பகுதிகளில் பார்ப்போம்.

நரகவாய் மோகன்

நரகவாய் மோகன்

அரசியல் நையாண்டிச் சிறுகதை ஸ்கூட்டி பெப்பில் தனக்கும் தன் மனைவிக்கும் இடையே தனது பத்து வயது மகனை உட்கார வைத்துக்கொண்டு சாலையில் சீறிப் பாய்ந்தார் பாலகணேஷ். “எங்க போறோம் பாலகணேஷ்?” மகன் மோகன்ராஜா வினவினான். தந்தையைப் பெயர் சொல்லிதான் அழைப்பான். சகமனிதர்களை, புழுக்களைப் பார்ப்பது போலத்தான் பார்ப்பான். வெண்கலக் குரல். “சும்மா இங்க பக்கத்துல என் பிரண்டு வீட்டுக்கு!” “பொய் சொல்ற. நீயும் உன் மனைவியும் பேசுறதை உங்க பெட்டுக்கு அடில படுத்திருந்து முழுசா ஒட்டுக் கேட்டுட்டேன்!” “உன் க்ரைம் ரேட் கூடிக்கிட்டே போகுதே ராஜா?” “உன் டிக்ஷனரிலதான் நான் செய்றதுக்கு க்ரைம் என்று பெயர். என் டிக்ஷனரில என் செயல்களுக்கு சாகசம் என்ற பொருள் இருக்கிறது!” “வாயை மூடிக்கிட்டு வா. ஸைக்காலஜிஸ்ட் பார்ப்போம்..” “வண்டியை ஆக்ஸிடென்ட் பண்ணிடுவேன்” “மிரட்டாம கம்முன்னு வா. உன் சாகசங்களை ஸைக்காலஜிஸ்ட் முழுசா தெரிஞ்சிக்கிட்டு உனக்கு அவார்டும் ரிவார்டும் கொடுக்கட்டும்!” “ஸைக்காலஜிஸ்ட்டைப் பாக்கறதில எனக்கொன்னும் பயமே இல்லை. போங்க அவனைப் பாத்துப் பேசி மல்லாத்திறலாம்!” கிளினிக்கின் முன்புறம் பத்து இருக்கைகள் போடப்பட்டிருந்தன. மூன்று இருக்கைகளில் போய் அமர்ந்தனர். ஆறாவது ஏழாவது இருக்கையில் ஒரு தாயும் ஒரு 4 வயது மகளும் அமர்ந்திருந்தனர். அந்தச் சிறுமியைப் பார்த்து, காது வரை இளித்தான் மோகன்ராஜா. “உனக்குப் பெண்கள் என்றாலே பிடிக்காதே! அந்தச் சிறுமியைப் பார்த்து ஏன் இளிக்கிறாய்?” “பிடித்த அடிமையிடம் எஜமானன் பல்லிளிக்கத்தான் செய்வான். சதா ஏன்ய்யா என்னையே நோட் பண்ணிக்கிட்டு இருக்க? உருப்புட்டுருவ.. தக்காளி..” உள்ளே அழைக்கப்பட்டனர். மருத்துவர் சுழலும் இருக்கையில் அமர்ந்திருந்தார். வயது 60. அறிவுஜீவிக் கண்கள். உள்ளே நடந்து வரும் தாய், தந்தை, மகனை அவதானித்தார். சிறுவன் முகமது பின் துக்ளக் படத்தில் சோ குதித்துக் குதித்து நடந்து வருவது போல நடந்து வந்தான். ‘இந்த கிளினிக் என்ன விலை? ஒரே செக்கில் ஃபுல் அமவுன்டை செட்டில் பண்ணிருவேன்’ என்கிற தோரணை சிறுவனிடமிருந்து வெளிப்பட்டது.“உட்காருங்கள்… உங்க பையனுக்குத்தானே பிரச்சனை?” “ஆமா சார்.. எப்படிக் கண்டுபிடிச்சீங்க?” “கருவாடு நாறத்தானே செய்யும்!” “இவன் எங்கள் ஒரே மகன். இவனின் பெயர் மோகன்ராஜா. வயது பத்து. ஐந்தாம் வகுப்புப் படிக்கிறான். இவன் ஆயிரக்கணக்கான நெகடிவ் குணங்களின் வேர் ஹவுஸ்…” “என்னென்ன பண்ணுகிறான்?” “வாயைத் திறந்தால் பொய்.. லாஜிக்கே பார்க்கமாட்டான். எதிராளி நம்புறான், நம்ப மாட்டிங்கிறான் என்பது பற்றியெல்லாம் துளியும் கவலைப்பட மாட்டான்!” “இவன் சொன்ன பொய்களில் பெஸ்ட் பத்து பொய்களைச் சொல்லுங்கள் கேப்பம்..” “ஒருநாள் மோகன் ராஜா தன் நண்பர்களிடம் ‘நண்பாஸ்! ஒரு நாள் பக்கத்துல இருக்ற காட்டுக்கு, தனியா விளையாடப் போய்ட்டேன். ஒரு டைனசார் குட்டி கிடைச்சது. வீட்டுக்குக் கொண்டு வந்தேன். அம்மா பாத்துட்டு பதறினாள். டைனசார் குட்டியை வீட்டுல வளர்க்கிறது படு ஆபத்து என்றாள். திரும்ப டைனோ குட்டியைக் காட்டுல கொண்டுபோய் விட்டுட்டேன்’ என்றான். இது ஒரு பொய்!” மோகன்ராஜாவின் கன்னத்தைத் தட்டிக் கொடுத்தார் மனநல நிபுணர். “கப்ஸா மன்னன்டா நீ!” மோகன்ராஜா குரோதமாக முறைத்தான். “திடீரென்று ஒருநாள் சர்டிபிகேட்டைத் தூக்கிட்டு வந்து எல்லாத்துகிட்டயும் காண்பிச்சான். உலக விஞ்ஞானங்கள் அனைத்திலும் விசேஷ பட்டப்படிப்பு படித்து முடித்ததாக ஒரு சான்றிதழ். அந்தப் பட்டப்படிப்பை ஆறு வயதில் அமெரிக்காவில் படித்து முடித்தானாம். யாராவது அந்தச் சான்றிதழ் பற்றிச் சந்தேகப்பட்டால் ஃபைன் போடுவேன் என மிரட்டுகிறான்!” “ஜித்தன்டா நீ!” “எங்க மகனுக்கு ஒரே ஒரு ஃபிரண்டுதான் இருக்கான். அவன் பெயர் அமர்ஜித். ஒருதடவை இவன்க ரெண்டு பேரும் சேர்ந்து தெருநாய்களுக்கு விஷம் வச்சு சுமார் 22 நாய்களைக் கொன்னுட்டான்க. ஒரு தடவை இவன்க மொட்டை மாடில படுத்திருந்தப்ப திருடன் வந்து இவன்களைக் காயப்படுத்திட்டான்னு சீன் போட்டு தங்களுக்கு சிம்பதி வேவ் கிரியேட் பண்ணாங்க!” “க்ரைம் ட்வின்ஸ்..” “இவன்க ரெண்டு பேரும் ஸ்கூல் பசங்க கிட்டயிருக்ற எல்லா சாமான்களையும் திருடி அஜித், அஸ்ரானின்ற இரண்டு பணக்காரப் பசங்ககிட்ட ஒப்படைச்சிருவான்க. டீச்சர்களையும் பிரின்சிபலையும் கூட இவர்கள் விடுவதில்லை..” “மலைக் கள்ளன் பணக்காரர்களிடம் திருடி ஏழைகளுக்குக் கொடுப்பான். இவர்கள் ஏழைகளிடம் திருடி பணக்காரர்களிடம் தருகிறார்கள். சபாஷ் என்னதொரு கான்ட்ராஸ்ட்..!” “நான்கு வயதில் ரோடுரோடாக சமோசா விற்றுக் குடும்பத்தைக் காப்பாற்றியதாக புருடா விடுவான் சக சிறுவர்களிடம்..” “சமோசா பாய்!” “மோகன் ராஜாவுக்கு மொள்ளமாரித்தனங்களை அமர்ஜித் சொல்லித் தருகிறானா? அல்லது அமர்ஜித்துக்கு மோகன்ராஜா சொல்லித் தருகிறானா என்பது மில்லியன் டாலர் கேள்வி. ஒருநாள் ரெண்டு பேரும் சைக்கிள் ஓட்டிவந்து பிளாட்பாரத்தில் படுத்திருந்தவர் மீது காயப்படுத்திவிட்டார்கள். கேட்டால், சிறுவர்கள் சைக்கிள் ஓட்டினால் எட்டு பாதசாரிகள் நான்கு பிளாட்பாரவாசிகள் காயப்படத்தான் செய்வார்கள் என சால்ஜாப்பு கூறுகின்றனர். உயிர்களைத் துன்புறுத்தல் அவர்களுக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு. வண்ணத்துப்பூச்சியை இறக்கைகளை பிய்த்துப் போடுவார்கள். ஓணான்களை சுருக்கில் கட்டி மின்கம்பிகளில் தொங்கவிட்டுச் சாகடிப்பர்கள். கோழிகளைத் துரத்தித் துரத்திக் கல்லால் அடிப்பார்கள்..” மோகன்ராஜா மனநல மருத்துவரைப் பார்த்துப் பற்களை நறநறவெனக் கடித்தான். ‘இருடி பாக்கெட்ல கவட்டை வச்சிருக்கேன். கவட்டையை இழுத்து உன் மண்டையை உடைக்கிறேன்..’ என நினைத்துக்கொண்டான். “பக்கத்து வீட்டுச் சிறுமியை வச்சு தனக்கு மேக்கப் போட்டுக்குவான். ஒரு நாளைக்கு ஆறு தடவை ட்ரஸ் மாத்திப்பான். கேமிரான்னாலே அவனுக்குக் கொள்ளைக் கிறுக்கு. திறந்தவாய் மூடாம பார்ப்பான். விதவிதமா போஸ் கொடுப்பான். ஊர் சுத்த்றதில நாட்டம் அதிகம். காலைல காளான்தான் சாப்பிடுவான்!” “எனக்கு எல்லாமே புரியுது!” “தனியா நின்னு என்ன வேணாலும் பேசுவான். ஆனா க்ளாஸ் ரூம்ல டீச்சர் ஒரு கேள்வி கேட்டா, தொடை நடுங்கி ஒன்னுக்குப் போய்விடுவான்!” “ஒன்பாத் ரூம் ஃபெல்லோ!” “யாரையாவது விரும்பிக் கட்டிப்பிடிச்சான் என்றாலோ கைகுலுக்கினான் என்றாலோ கட்டிப் பிடிக்கப்பட்டவர், கைகுலுக்கப்பட்டவர் அடுத்த ஒரு வாரத்தில் ஏதாவது ஒரு விபத்தில் காயப்படுவார்!” “டாக்டர்! உங்க கையைக் குலுக்கவா?கட்டிப் பிடிக்கவா?” கை நீட்டியபடி வந்தான் மோகன்ராஜா. “கொஞ்சம் அமைதியா இரு ஸ்மால் பாய்..” “என்ன?” “என் மகன் அவனோட ஃப்ரண்ட்ஸ் அமர்ஜித், அஜித், அஸ்ரானி நால்வரும் சிஎல்ஓ என்கிற தீவிரவாத அமைப்பில் பயிற்சி பெற்றவர்களாம்!” “சிஎல்ஓ என்றால்?” “சைல்ட் லிபரேஷன் ஆர்கனைஸேஷன் எனப் பொருள்!” “அதன் நோக்கம்?” “பெற்றோரிடமிருந்து, ஆசிரியரிடமிருந்து, குறிப்பாக மூத்த தலைமுறையினரிடமிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் அமைப்பு அது. குழந்தைகள் சுயநலமாய் வளர வேண்டும் என்பது அதன் அடிப்படைக் குறிக்கோள்!” மோகன்ராஜாவைப் பக்கத்தில் அழைத்து, கண், காது, மூக்கு, வாய், நாடித் துடிப்பு, இதஉலகநாடுகளைச்ஆகியவற்றைப் பரிசோதித்தார் மனநல நிபுணர். “நீ எதாவது சொல்ல விரும்புகிறாயா?” “நான் சூப்பர் மனிதன் நீங்கள் எல்லாம் ஆட்டுப் புழுக்கைகள்!” “வேற?” “உன் வேலை மயிரைப் பாத்திட்டு போ. மீறினா கொன்னுடுவோம்“ “எங்கள் மகனுக்கு என்ன பிரச்சனை எனத் தெரிந்துகொண்டீர்களா டாக்டர்?” “ஓ! உங்க மகனுக்கு இருக்கும் மனநோயின் பெயர் ‘ஜிடிமோ ஸின்ட்ரோம்’’ ‘நியோஹிட்லரின் ஹார்மோன்’ மிதமிஞ்சிய சுரப்பும் உங்க மகனின் மனநோய்க்கு ஒரு காரணம். சிஎல்ஓ அமைப்பும் மூன்று ‘அ’ நண்பர்களும் உங்கள் மகனின் துர்நடத்தைக்கு முக்கியக் காரணங்கள். ஜிடிமோ ஸின்ட்ரோம் கவர்ச்சிகரமானது; ஆனால் நயவஞ்சகமானது. இந்த ஸின்ட்ரோமால் பாதிக்கப்பட்டவர்கள் ராஜவாழ்க்கை வாழ்வார்கள். இறுதி வீழ்ச்சி படுபயங்கரமாக இருக்கும். சிறிது காலமாக ஆயிரக்கணக்கான குழந்தைகள் ஜிடிமோ ஸின்ட்ரோமால் பாதிக்கப்பட்டுள்ளனர்..” “என் மகனின் மனநோயைக் குணப்படுத்த மருந்துகள் உள்ளனவா?” “எதுவும் செய்யாமல் உங்கள் மகனை அவன் போக்கில் விட்டுவிட்டால் இரண்டு விஷயங்கள் நடக்கும்!” “என்ன?” “ஒருநாள் உங்கள் மகன் நாடாள்பவனாக தனிவிமானத்தில் உலகநாடுகளைச் சுற்றி வருவான். அல்லது அவனால் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து தாக்கி இரத்தக் காயங்களுடன் சாலையில் கிடப்பான்!” பெரிதாய் வாய் திறந்து சிரித்தான் மோகன்ராஜா. அவனது திறந்த வாய்க்குள் நரகம் தெரிந்தது.