நாற்பத்தேழு

நாற்பத்தேழு

1947 எழுபத்தைந்தைக் கடந்த வயதெனக்கு யுத்த மகள் என்பார்கள் என்னை பெரிய யுத்தத்திற்குப் பின்னால் நானும்எங்கள் சேக்காளிகளும் பிறந்தோம்பிறந்ததும் எங்களைச் சொந்தம் கொள்ளஆலை அதிபர்களுக்கும் பண்ணையார்களுக்கும்கொள்ளை ஆசை 1948 எனக்கும் வயதாகிவிட்டதுபிறக்கும்போது சவலைப் பிள்ளையாக இருந்தாலும்இப்போது கொழுத்துத் திரிகிறேன்இப்போதெனக்குத் தோழர்கள் அதிகம்என்னை அன்று சவலை ஆக்கமுயன்றவர்களை எல்லாம்இல்லாமல் ஆக்கியோஅல்லது கூட்டாளி ஆக்கியோநான் ஊதி இருக்கிறேன் 1950 நான் நாற்பத்தேழுக்கும் நாற்பத்தெட்டுக்கும் இளையவள்தான்என்னை ஜனநாயகத்தின் மகள் என்றார்கள்சமதர்மத்தின் தங்கை என்றும் சொல்லி மகிழந்தார்கள்நானும் – என்னைக் கொஞ்சியகோடானுகோடி பங்காளிகளும்பூரித்துப் போனோம்ஆனால் எங்களுடன் நாற்பத்தெட்டும் இருந்ததுநாங்கள் நானாவிதப் பிரிவினராக இருந்தோம் 1960நாங்கள் ஐம்பதுகளின் பிள்ளைகளால்அவர்களுக்காக உருவானோம்ரயிலடிகளாக, சாலைகளாக, ஆலைகளாக,நவநவ எந்திரங்களாகப் பரவிக் கிடந்தோம்நாற்பத்தெட்டு எங்களுக்குள் தலைகாட்ட வழியில்லைஎன்பதாக நாங்கள் நினைத்துக் கொண்டோம் 1975நாங்கள் 25 வயதான ஐம்பதுகள்தான்ஆனால் நாங்கள் சொன்னதே ஜனநாயகம்நாங்கள் சொல்வதே சமதர்மம்நாற்பத்தேழில் வந்தவர்களைச் சத்தமில்லாமல் செய்தோம்நாறபத்தெட்டையும் மிரட்டி வைத்திருந்தோம் 1977 நாற்பத்தேழின் நாயகர்களும்நாற்பத்தெட்டின் நாயகர்களும்சேர்ந்து கொண்டோம்ஐம்பதை அடக்கி வைக்கஅச்சாரம் போட்டோம்ஆஹா என்றெழுந்தது பார் யுகப் புரட்சிஐம்பது ஆடிப் போனது 1980 நாற்பத்தேழு வளர்வதைநாற்பத்தெட்டு பொறுக்கவில்லைகழன்று கொண்டதுமீண்டும் ஐம்பது செங்கோல் பிடித்தது 1990 உலக பூதம் வீட்டுக்குள் வந்ததுதொலைத் தொடர்புக் கூட்டாளியும் வந்ததுபூதத்தை ஆண்டவர்கள்ஆள்பவர்கள் ஆனார்கள்பூதங்களை நிறுவனங்கள் என்றார்கள்பூதங்களுக்கு நாற்பத்தெட்டும்ஐம்பதும் தலையாட்டின தங்களுக்கு யார் வேண்டும் என்பதைபூதங்கள்தான் தீர்மானித்தன 2014 பூதங்கள் நாற்பத்தெட்டைநல்ல நண்பன் ஆக்கிக்கொண்டனஇப்போது அப்படியும் இப்படியுமாகஐம்பதைப் பிரித்துப் போட்ட பிறகுநாற்பத்தெட்டு ஊதிவிட்டது 2024 நாற்பத்தெட்டுக்கு சவால் விடஐம்பது, அறுபது எல்லாம் தயார்ஆனால் பூதங்கள் சிரிக்கின்றனசோழி உருட்டுகின்றனநாற்பத்தெட்டா? ஐம்பதா? ஆமாம்.. நாற்பத்தேழுக்கு என்னவாயிற்று..?

மார்க்ஸின் கனவும் சிம்போர்ஸ்காவின் கவிதையும்

மார்க்ஸின் கனவும் சிம்போர்ஸ்காவின் கவிதையும்

கவிதை என்றால் என்ன என்ற கேள்விக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட அபத்தமான பதில்கள் அளிக்கப்பட்டுவிட்டன. எனக்குத் தெரியாதெனினும் உயிரின் கீற்றினைப் போல் நான் இறுகப் பற்றியுள்ளேன். என் சகோதரியின் கணவரும், கவிதை எழுதுவதைவிட செத்துப்போவதையே விரும்புவார். இது ஏற்கனவே இருக்கும் ஒரு கவிதை போல எனக்குத் தோன்றுகிறது. எனது சொந்தக்காரர்கள் கவிதை எழுதுவதில்லை. கவிதை எழுதாமல் இருக்கும் அபத்தத்தைப் போக்கத்தான் நான் கவிதை எழுதும் அபத்ததத்தைச் செய்கிறேன் – விஸ்லாவா சிம்போர்ஸ்கா கவிஞர் விஸ்லாவா சிம்போர்ஸ்கா, 1923ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் நாள் மேற்கு போலந்தில் கார்னிக் எனும் நகரத்தில் பிறந்தார். இவரது இளமைக்காலக் கல்வி ஜெர்மானிய ஆதிக்கத்தின் கீழ் அமைந்தது. 1953ஆம் ஆண்டிலிருந்து 1981 வரை போலந்தின் புகழ்பெற்ற இலக்கிய சஞ்சிகையான லிட்டராஸி ஜஸியில் பணியாற்றினார். வர்க்க ஏற்றதாழ்வுகளும் தனியுடமையும் அரசு அதிகாரமும் தோன்றாத வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் மனிதன் இயற்கையிலிருந்தும் சமூகத்திலிருந்தும் பிளவுபடாமல் இருந்தான். தனகுள்ளும் பிளவு இல்லை. இவையெல்லாம் தோன்றியபின், அவை ஒழிந்தால் மட்டுமே மீண்டும் இயற்கையோடும் சமூகத்தோடும் தன்னோடும் ஒன்றிய நிலையில் நிறைவான வாழ்வைப் பெறுவான். இதைக் கம்யூனிச சமுதாயம் என கார்ல் மார்க்ஸ் குறிப்பிட்டார். நகரமோ கிராமமோ, மூளை உழைப்பிற்கும் உடல் உழைப்பிற்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை. இயந்திரங்கள் எல்லா உழைப்புகளையும் எடுத்துக்கொண்ட பிறகு, உடல்நலத்திற்காக மனிதன் காலையில் தோட்ட வேலை செய்வான். பிற்பகலில் மீன் பிடித்தலிலும் மாலையில் இசையிலும் நடனத்திலும் ஈடுபடுவான் என்று ஒரு அழகிய சித்தரிப்பை மார்க்ஸ் தந்தார். போலந்தை உள்ளடக்கிய ஐரோப்பியச் சூழலிலும் ரஷ்யாவை உள்ளடக்கிய ஆசியச் சூழலிலும் கம்யூனிசக் கட்சிகள் ஆட்சிக்கு வந்தன. ஆனால் 10 ஆண்டுகளுக்குப் பிறகும் யதார்த்த நிலைமை மார்க்ஸ் கூறிய தீர்க்கதரிசனமாக இல்லை என்பதே சிம்போர்ஸ்க்காவின் கவிதையின் வெளிப்பாடு. சிம்போர்ஸ்க்கா எப்போதுமே மக்களின் நலனில் அக்கறை கொண்டவர். போர் முடிந்துவிட்டது; இனி சம்பவங்கள் நடக்காது. அமைதியான சூழலில் பிணங்களை எடுத்துச் செல்லும் தள்ளுவண்டி செல்ல, பாதையைச் சீர்படுத்துங்கள் என்ற கவிதை கனமான ஒன்று. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட உறவினர் ஒருவரை, குடும்பத்தில் ஒருவர் போய்ப் பார்க்க வேண்டும். அதற்கு சீட்டு குலுக்கிப்போட்டு யார் போக வேண்டும் என்று முடிவு செய்யவதைப் போல ஒரு கவிதை ஆரம்பமாகிறது. ஆரம்பமும் முடிவும் அதிரவைக்கும் இவரது கவிதைகளில், வியட்நாம் என்ற கவிதையில் வரும் இறுதி வார்த்தையைப் பாருங்கள். பெண்ணே உனது பெயரென்ன?எனக்குத் தெரியாதுஉனக்கு எத்தனை வயது? நீ எந்த ஊர்க்காரி?எனக்குத் தெரியாதுஅக்குழியினை நீ எங்கு தோண்டினாய்?எனக்குத் தெரியாதுஎத்தனை நாட்களாக நீ இங்கு ஒளிந்திருக்கிறாய்?எனக்குத் தெரியாதுஎன் விரலை நீ ஏன் கடித்தாய்?எனக்குத் தெரியாது.உனக்குத் தெரியாதா, நாங்கள் உனக்குத் தீங்கிழைக்கமாட்டோமென்று?எனக்குத் தெரியாதுஇது போர், நீ ஒரு பக்கத்தைச் சார்ந்தாக வேண்டும். நீ யார் பக்கம்?எனக்குத் தெரியாதுஉனது கிராமம் இன்னும் உள்ளதா?எனக்குத் தெரியாதுஇவர்கள் உனது குழந்தைகளா?ஆம்..! கவிதையின் இறுதி வார்த்தையில்தான் எல்லாமே உள்ளது. அதிகம் படித்த அப்பாவிடமிருந்து என்பதைவிட, அதிகம் படிக்காத அம்மாவிடமிருந்து நாம் நிறைய கற்றுக்கொள்கிறோம். விஸ்வரூபம் என்ற தமிழ் திரைப்படத்தில்கூட போர்ச் சூழலில், ‘ஒரு அணு விதைத்த பூமியிலே’ பாடலில் “நம்மில் யார் இறந்தாலும் ஒரு தாய் அழுவாள் பாரடா” என்ற வரி வரும்.தமிழ் இலக்கிய எழுத்தாளர் லா.ச.ரா. ‘நான் இசையின் குறிப்பைப்போல எழுதுகிறேன். இசையைப் போலப் பேச முயற்ல்கிறேன்’ என்று சொல்வார்.‘சிம்போர்ஸ்க்காவின் கவிதைகள் பீத்தோவெனின் சங்கீதத்தில் உள்ள வெம்மையை கொண்டிருக்கின்றன’ என்கிறது நோபல் கமிட்டி. மேலும் ‘மிகச் சரியான, கறாரான, வஞ்சப் புகழ்ச்சி நடையில் வரலாற்று ரீதியானதும் உடலியல் ரீதியானதுமான உள்ளடக்கத்துடன் மனித யதார்த்தின் முறிந்த பகுதிகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தவர்’ என்று சொல்லி நோபல் பரிசை அறிவித்தது.இலக்கியத்திற்கான நோபல் பரிசு கடந்த இருபது ஆண்டுகளாக உலகின் மிகக் கொந்தளிப்பான அரசியல் சூழலில் வாழ்ந்த எழுத்தாளர்களுக்கு வழங்கபட்டது. 1996ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டபோது, “கவிதை என்பது ஒரு சிறப்புப் படிப்பு. வழக்கமான பாடங்கள், அடிக்குறிப்புகள் இணைக்கப்பட்ட தத்துவார்த்தக் கட்டுரைகள், தேர்வுகள், இறுதியாக, சம்பிரதாயப்படி பட்டயப் பட்டங்கள் தேவைப்படும் ஒரு தொழிலாகும். ஒரு கவிஞராக மாறுவதற்கு, மிக நேர்த்தியான கவிதைகளைக் கொண்ட பக்கங்களை மறைப்பது போதாது என்பதை இது குறிக்கும். அதன் முக்கிய அம்சம், அதிகாரப்பூர்வ முத்திரையைத் தாங்கிய சில காகிதச் சீட்டு. தற்காலக் கவிஞர்கள் தங்களைப்பற்றி சந்தேகம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். கொஞ்சம் வெட்கப்படுவதைப்போல, தயக்கத்துடன்தான் தங்களைக் கவிஞர்கள் என்று ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் எங்களின் ஆரவாரமான காலங்களில் உங்கள் தவறுகளை ஒப்புக்கொள்வது மிகவும் எளிதானது. அவை கவர்ச்சிகரமான முறையில் தொகுக்கப்பட்டிருந்தால், சொந்தத் தகுதிகள் ஆழமாக மறைக்கப்பட்டிருப்பதால், அவற்றை அடையாளம் கண்டுகொள்வதற்கு பதிலாக, அவர்கள் அவற்றை ஒருபோதும் நம்புவதில்லை. நான் எழுதுகிற அனைத்தும் தெளிவானதாகவும் புரியக்கூடியதாகவும் இருக்கவேண்டுமென நான் விரும்புகிறேன். ஏதேனும் ஒரு வாசகனுக்கு எனது கவிதைகள் புரிந்துகொள்ளக் கடினமாக இருக்கமெனத் தோன்றினாலும், நான் மிகுந்த சஞ்சலமடைகிறேன். இது எனக்கு மிகவும் சங்கடமான காலம். நான் இயல்பில் மிகவும் தனிமை விரும்பி; ஒதுங்கி வாழ விரும்பும் மனுஷி. இந்தப் பரிசின் மூலம், எனக்குக் கொஞ்சம் அசௌகரியமாக இருப்பதாக நான் உணர்கிறேன்” என்று உரையாற்றினார். மிக உயரிய ஒரு பரிசு, தனிமனிதனுக்கு எவ்வளவு சங்கடம் தருவதாக இருக்கிறது என்பதை அவர் எடுத்துரைத்தார். போலந்து மக்களின் நம்பிக்கையும் அவநம்பிக்கையும் அவரது கவிதைகளில் முக்கியத்துவம் பெற்றன. முதல் வாசிப்பில் உடனடிப் பற்றுதலும் ஆழமான வாசிப்பில் கடலின் சூட்சமும் கொண்ட கவிதைகள் அவை. (கவிதை மற்றும் சில குறிப்புகள், யமுனா ராஜேந்திரன், ஆர். பாலகிருஷ்ணன் இருவரும் இணைந்து தமிழில் மொழிபெயர்த்த ஹிட்லரின் முதல் புகைப்படம் என்ற சிம்போர்ஸ்காவின் கவிதைத் தொகுப்பிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளன).

பின்னப்பட்ட எண்ணங்கள்

பின்னப்பட்ட எண்ணங்கள்

நிகழ்வுகளின் நெளிவுசுழிவுகள்மூளைக்குள் பின்னப்பட்டுசொற்களாய் உருமாறிஇதழ்வழி உதிருமெனஎதிர்பார்க்கப்பட்ட நிலையில்நீருக்குள் புதைக்கப்பட்டமீள் ஒலியாய்குமிழ்களாகவே வெளிப்பட்டுகாற்றில் காணாமல் போகின்றன ரணங்களுக்கு மருந்திடாக் காலம்பின்னப்பட்ட எண்ணங்களைச்சுமந்திருக்கும் சுவர்களுக்குத்தலைகோதிவிட கைகளைத் தராததுஜென்ம சாபல்யம் என்றேஅதன்மீது ஊர்ந்து செல்லும் சிலந்திபரிதாபமுரைத்துச் செல்கிறது நிலவின் கறைகள் போலஆண்டாண்டாய் உள்ளூறக் குமைந்துநிஜத்தைப் பொலிவிழக்கச் செய்யும்நஞ்சூறிய சொற்களை உதிர்த்துஎம்மனதையும் மரணிக்கச் செய்திடாதுஅச்சுவர்களைத் தவிக்கவிட்டுப் பறந்ததுபெருமூச்சொன்று பேரண்டம் தேடி

நித்தியத் தேவை

நித்தியத் தேவை

கவிதைகள் நித்தக் கோடி மூச்சுமுட்டும் நெருக்கடியில்சேமிப்பைத் திரட்டிய களைப்போடுவிதவிதமான காரணங்கள் சுமந்துதிரள்கிறது கூட்டம் எப்போதும் வரம்பெல்லைக்கு உட்படாமலேகையில் வந்து சேர்கிறதுமானம் மறைக்கக் கண்டுபிடிக்கப்பட்டஆடம்பரம் துண்டு விழும் பணத்தைஎதில் சரிக்கட்டுவதென்ற யோசனையானதுமழுப்பித் திணிக்கப்படுகிறதுகட்டைப் பைகளுக்குள் வெளியே வரும்போதுபொறாமையோடு திரும்பிப்பார்க்க வைக்கின்றனதினமொரு புத்தாடையுடுத்தும்ஜவுளிக்கடை பொம்மைகள் தேவை உங்கள் இருப்பை மீறியாராவது ஏங்கினால்உடனே விட்டுக்கொடுத்துவிடுங்கள் கசியும் விழிநீரையாரும் அறியாதபடிதுடைத்துக் கொள்ள சிறிது நேரமேனும்சுதந்திரக் காற்றைச்சுவாசிக்க அருகில் கடக்கும்பேருந்திலிருந்து வரும்எதிர்பாராத சிறு புன்னகையைத்தரிசிக்க வயிற்றுவலியை முகபாவத்தில்பிறரறியாவண்ணம்மறைத்துக்கொள்ள பழைய காதலைபயணப் பொழுதுகளில் அசைபோட்டுஉயிர்த்திருக்க தேவைப்படலாம்அவர்களுக்கு ஒருஜன்னல் இருக்கை

செவ்வகக் கூண்டு

செவ்வகக் கூண்டு

கவிதை அடைத்து வைக்கத் தோதானசதுர வடிவத் தர்ப்பூசணிகள்தம் இடம் தாண்டிபெட்டியின் மூலைகளைச் சுவாசிக்கஇடம் கேட்டு நச்சரிப்பதில்லை இதய வடிவத் திராட்சைகள்ஏற்கனவே ஏற்றிருந்தகோள வடிவை நீங்கியதில்ஏதொரு பதட்டமுமின்றித்தான்காற்றிலாடுகின்றன குண்டுக் கத்தரிக்காய்கள்புடலங்காயைப் பிரதியெடுத்ததில்குட்டையாகிப் போனதுகல் கட்டும் காய் மென்தோல் தக்காளிகள்வன்முறைக்கு மாறிவெகுநாட்களாயிற்று மெழுகிட்ட ஆப்பிள்ஆறு மாதமாய் அழுகாமலிருப்பது கண்டுகடித்துப் பார்க்கும் ஆசைகடவுளுக்கே வருகிறது ஒட்டுருவாக்கத்தில்குயில் முட்டையெனஆரஞ்சையும் ஏற்கிறதுமாமரம் வயலோரங்களில் குலுங்கிக் கிடந்தநினைவு மறந்துபாக்கெட்டுகளில் தஞ்சமடையத்தயாராகவே இருக்கின்றனஹைபிரிட்டில் சுட்ட பழங்கள் வெட்டி ஒட்டும் கலையில் தேறியசிற்றினம் ஒன்றின்மொத்த வாழ்வையும்செவ்வகத்துக்குள் அடக்கிச்சிரிக்கிறது இயற்கை

நெருப்பைத் துளையிட முயலும் புழுக்கள்

நெருப்பைத் துளையிட முயலும் புழுக்கள்

கவிதை நீள் சன்மார்க்க வெண் தந்தம்வண்ணத்துப் பூச்சிகளுக்குவளைந்துகொடுப்பதைக் கண்டுஉங்கள் எண்ணப் புழுக்களால்துளையிட்டு நுழைய முயல்கிறீர்கள் நெருப்பைத் துளையிடபுழுக்களால் முடியுமோ? சன்மார்க்கத்தைத் துளையிட்டுசனாதன இசை கேட்க விரும்பும்உங்கள் செவிகளால்சத்ய தரும சாலையின்சடசடப்பைத் தாங்க இயலுமா? உங்கள் அகப் பைகுப்பைகளை வாரக்கூடியதுதரும சாலையின் அகப்பைஎளியோரின் தவிப்பைத் தீர்க்கக் கூடியது இங்கே குப்பைகளைக் கொட்டாதீர்களெனமீண்டும் சொல்கிறோம் மட்கும் மட்கா என்றஇரண்டுள்ளும் அடங்காதவற்றைமறுசுழற்சி செய்ய முயன்றுசூழலுக்கு ஏன் சீர்கேடு செய்கிறீர்கள்? ஞானசபைக்கு வந்துநாடக சபையின் வசனமானஇந்திரசபை போலிருக்கிறது என்கிறீர்கள்இல்லைஇங்கே கற்பகத் தரு ஏதுமில்லை தனித்திரு இருக்கிறதுஉங்களிடமிருந்து தனித்திருக்கிறோம் விழித்திரு இருக்கிறதுஉங்களிடம் விழிப்போடிருக்கிறோம் பசித்திரு இருக்கிறதுஉங்கள் ஆறிப்போன ஆரியச் சுவை விலக்கிபகுத்தறிவுப் பசியோடிருக்கிறோம்

பாவமன்னிப்பு

பாவமன்னிப்பு

உள்ளங்கையின் இதயரேகையைவிரல்முனைகள் நான்கும் அழுத்தஒலிவாங்கிமுன் விரைப்புடன்பாடிக்கொண்டிருக்கும் தேசியகீதத்தின்ஏதோவொரு ஏகார ஓசையில்வந்துத் தொலைக்கும்கொட்டாவியை எப்படித் தடுப்பது?! சுதேசி கோஷத்துடன்பரிந்துரைக்கப்பட்டதால்251 ரூபாய் செலுத்திவிட்டுக் காத்திருக்கும்எனக்கான செல்போன்தயாராகிவிட்டிருக்குமா?! பேரிடரில் பிழைத்தவர்கள்அளித்த கொடையில்பிழைப்பு நடத்தியவர் யாரோ?! உலகப் பணக்காரர்களின்வரிசைக் கோடுகளைபரோட்டோ சப்ளையர் கோடுகளாக்கிவிளையாடும் கபடிக் குழுவில்எனக்கும் இடம் கிடைக்குமா?! சற்றுப் பொறுங்கள் தேசத்துரோகச் சட்டம் பாயும்முன்ஆளுங்கட்சியில்ஐக்கியமாகிவிடுகிறேன்

முடிந்தது

முடிந்தது

கவிதை நெஞ்சைத் திருகிய வலியைசொல்லக்கூட நேரமில்லாதுநொடியில் முடிந்து போனான்ஒரு தகப்பன்சாமி அழுதழுது வற்றிப்போயிருந்தாள்தாய் அவள் மடிவிட்டு இறங்காதுஅழுகைகளை வேடிக்கை செய்துகொண்டிருந்தனசேய்களிரண்டு அணைந்து போகாதுஅழுகையைப் பற்றவைத்துக்கொண்டேயிருந்ததுகூட்டம் அவனின் மிச்சமெனஇனி இருக்கப்போகிறவர்களுக்காகத்தொழுதுவிட்டு வந்தேன்நான் அப்போதைக்குஅவரவர்க்குமுடிந்தது

தோள்களில் கருவறை சுமப்பவன்

தோள்களில் கருவறை சுமப்பவன்

அந்தப் பாதங்கள் இன்னமும்ஓடிக்கொண்டேதானிருக்கின்றனஅந்தக் கைகள் இன்னமும்என் விரல் பிடித்துதான் நடக்கின்றனஅந்தத் தோள்கள் இப்போதும்எனைத் தோள் சாய்த்து ஆறுதல் தருகின்றன தாடி முடி குத்தும் இடத்திலெல்லாம்பரிசாகக் கிடைக்கும் அவரின் முத்தம்அவர் முத்தம் கொடுக்கும்போதெல்லாம்தாடிமுடி குத்தும் அவருக்கும் கருவறை உண்டுதோள்களில்அவருக்கும் தாய்மை உண்டுமனத்தில் என் பையனுக்குப் பிடிக்கும்என் பொண்ணுக்குப் பிடிக்கும்என்னவளுக்குப் பிடிக்கும்என வாழும் அவர்மறந்தே போகிறார்தனக்கு எது பிடிக்கும் என்று அப்பா எனும் பாறைகள்தான்தனக்குள்ளான மென்மைகளில்பூக்களைப் பிரசவிக்கின்றனஅப்பா எனும் வழிகாட்டிகள்தான்வாழ்க்கைப் பாதையின் முள்ளகற்றிநம் கால்களில் கவசம் பூட்டுகின்றன தந்தையர் தின வாழ்த்துகள் என்றேன்சட்டை செய்யாமல் சிறு புன்னகையுடன்அடுத்த வேலை பார்க்கக் கிளம்பிவிட்டார்

புதிய நான்

புதிய நான்

கவிதை என்னைப் புதிதாக உணர்கிறேன்ஏனென்று புரியவில்லையானாலும்உங்கள் மீதான அன்பு குறைந்ததில்லை மிகவும் அழகாகத் திகழும்இரவுப் பயணங்களுக்குப் பின் நிகழும்விடியல் போலவே உள்ளதுஇந்தச் சமநிலை விடிந்த பின்னரும் சில கதைகளும்சில பயணங்களும்மனதிலிருந்து மறைவதில்லை நானும் நீங்களும்தொலைதூரத்தில் இருந்தாலும்நாம் சந்தித்த நாட்களையெல்லாம்நினைவுப் பூக்களாகவோமுட்களாகவோ உணரச் செய்யும்இனிவரும் இரவுகள் காலம்விரைவில் பதில் சொல்வதில்லைஇது கனவா? காதலா? நட்பா? எனும்குழப்பத்திலேயே முடிந்துவிடாதுநம் கதை இப்பொழுதாவதுஇதைத் திறந்து படித்துப் பாருங்கள்காகிதத்தின் உணர்வைஉங்கள் மூச்சு சுவாசிக்கும் நான் கிளம்புவதற்கான நேரம்நெருங்கிக்கொண்டுள்ளதுஉங்களுடன்ஒரு மிடறு தேநீர் அருந்தவோபுகைப்படம் எடுக்கவோஆசைதான்காலமும் காத்திருக்கிறது மீண்டுமொரு முறைநாம் சந்திக்கும் நாட்களுக்காய்இவ்விடத்திலிருந்துபுன்னகையுடன் பிரிகிறேன்ஏதோவொன்றை உங்களிடம் விட்டு..

திராவிட மாடல் – கவிதைகள்

திராவிட மாடல் – கவிதைகள்

சமத்துவம் நான் உனக்காக மாறிவிடநிறைய இருக்கின்றன நீயும் எனக்காக மாறிக்கொள்ளகொஞ்சம் இருக்கிறது ஆனால்நமக்காக மாறிக்கொள்வதில் மட்டும்கவனம் கொள்வோம் மற்றவை மாறிடினும்மாறாவிடினும் என்ன? நீ பாதி நான் பாதி என்பதில்உனக்கு நம்பிக்கை உண்டா? நீயும் முழுமைநானும் முழுமைஎன்பதே சரிஅதற்கு மாறிக் கொள்வோம் ============================ சுயமரியாதை என்னிடத்திலான உன்எதிர்பார்ப்புகளெவையும்நமுத்துப் போகாதவரைக்கும்உனதன்பைத் தருவதில்தயக்கமேதுமில்லை உனக்கு உன் அன்றாடத் தேவைகளெதுவும்எள்ளளவும் அயர்ச்சியுறாத வரைக்கும்உனதன்பைத் தருவதில்தயக்கமேதுமில்லை உனக்கு என் சுயத்தை முற்றிலுமாய் ஒழித்துஉன் சுயத்துக்காய் நான் ஒடுங்கியிருக்கும் வரைக்கும்உனதன்பைத் தருவதில்தயக்கமேதுமில்லை உனக்கு உன் நினைவின் பின்னோடேஎன் நடை நழுவாதிருக்கும் வரைக்கும்உனதன்பைத் தருவதில்தயக்கமேதுமில்லை உனக்கு அடுப்பங்கறை தாண்டிஎன் சிந்தைகளுக்குச்சிறகு முளைக்காதவரைக்கும்உனதன்பைத் தருவதில்தயக்கமேதுமில்லை உனக்கு கிள்ளியெடுக்கும் பூவில்வழியும் வலி யாரறிவார்?! முனை மழுங்கிப்போன என்சுயமரியாதையைப் புதைத்த இடத்தில்முளைத்து நிற்கும் சுயபச்சாதாபத்தைவேரோடு பொசுக்கிவிட்டால்உனதன்போடு பின்னிக்கொள்வதில்எந்தத் தடையும் இருக்கப்போவதில்லைஎனக்கும்

புனைவுகளால் நாம் வாழ்கிறோம்

புனைவுகளால் நாம் வாழ்கிறோம்

கதை சொல்பவர்களாகிய நாம் வெளியே சென்று நம் இதயம் விரும்பும் இரையைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம். இங்கே எல்லாம் உள்ளது; எல்லாம் உண்மை; பூமி நம் காலடியில் ஒரு சிறிய தூசி மட்டுமே.    இதைச் சொன்னவர், 1923ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஐரிஷ் கவிஞர் வில்லியம் பட்லர் யீட்ஸ். அவருடைய பிறந்தநாள் இன்று. இவர் தனது நாட்டில் Abbey என்ற நாடக அரங்கு ஒன்றையும் நிறுவியுள்ளார். நாடக ஆசிரியராகவும் விளங்கி இவர், கலையின் பயன்பாட்டை மக்கள் குறைவாகப் பயன்படுத்துவதாக வருந்தினார். ‘இலக்கியம் என்றால் என்ன?’ என்ற பெரும்பாலானவர்களின் கேள்விக்கு, “எழுத்துக்களின் வழியே, குறியீடுகளின் மூலமும் சம்பவங்களின் மூலமும் மனிதர்களின் மனநிலையைக் கொண்டுசெல்வதைத் தவிர இலக்கியம் என்பது வேறென்ன?!“ என்பதே இவரின் பதிலாக இருந்தது. இவருக்கு நோபல் பரிசை வழங்கியதற்கான காரணம், “ஒட்டு மொத்த நாட்டு மக்களின் மனநிலையை, கலை வடிவில், எப்போதும் ஈர்க்கக்கூடிய அளவில் அமைந்த இவரது கவிதைகள்” என்று நோபல் கமிட்டி குறிப்பிட்டது. “எல்லா உன்னதமான விஷயங்களும் போரின் விளைவுகள் என்று நான் நினைக்கிறேன். பெரிய தேசங்கள் மற்றும் பிரிவுகள் காணக்கிடைக்கும் உலகில், சிறந்த கவிதை மற்றும் தத்துவம் என்பது கண்ணுக்குத் தெரியாத போர்” என்கிறார் யீட்ஸ். டிசம்பர் 10, 1923 அன்று ஸ்டாக்ஹோம் கிராண்ட் ஹோட்டலில் நடந்த நோபல் விருந்தில் வில்லியம் பட்லர் யீட்ஸ் ஆற்றிய உரையில், நான் ஐரிஷ் நாடக இயக்கத்தை எனது கருப்பொருளாகத் தேர்ந்தெடுத்துள்ளேன், ஏனென்றால், நீங்கள் எனக்கு வழங்கிய பெரிய மரியாதையை நான் நினைவில் கொள்ளும்போது, தெரிந்த மற்றும் தெரியாத பலரை என்னால் மறக்க முடியாது. நான் நாடகங்கள் எழுதாமல் இருந்திருந்தால், வியத்தகு விமர்சனங்களை எழுதாமல் இருந்திருந்தால், எனது கவிதைகள் மேடையில் பேசும் தரத்தில் இல்லாதிருந்தால், ஒருவேளை ஆங்கிலக் குழுக்கள் எனது பெயரை உங்களுக்கு அனுப்பியிருக்காது. இது அவர்களின் திட்டமிட்ட சிந்தனையின் ஒரு பகுதியாக இருக்க முடியாது என்றாலும், எனது இயக்கத்தின் அடையாளம் இல்லாமல் இது இல்லை. இப்போது நீங்கள் எனக்கு இந்தப் பெரிய கவுரவத்தை அளித்துள்ளீர்கள். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு பல ஐரிஷ் எழுத்தாளர்கள் ஒன்றாகச் சந்தித்து தங்கள் நாட்டின் இலக்கியம் குறித்த விமர்சனத்தைத் தொடங்கினர். மாகாணவாதத்திலிருந்து இலக்கியத்தை விடுவிப்பதன் மூலம் ஐரோப்பிய அங்கீகாரத்தைப் பெறலாம் என்பது அவர்களின் கனவாக இருந்தது. அவர்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன், அவர்கள் இல்லையென்றால் ஒருபோதும் நான் இந்தத் தகுதியைப் பெற்றிருக்க முடியாது என்பது என் மனத்துக்குத் தெரியும்” என்று குறிப்பிட்டார். ‘ஒரு ஐரிஷ் விமானஓட்டுனர் அவரது மரணத்தை முன்னறிவிக்கிறார்’ என்ற தலைப்பில் ஒரு போர்ச் சூழலில் யீட்ஸ் எழுதிய கவிதை இது. மேகங்களின் மத்தியில் எங்கோஎன் விதியைச் சந்திப்பேன் என்று எனக்குத் தெரியும்நான் போராடுபவர்களை வெறுக்கவில்லைநான் அவர்களை நேசிக்காமல் காவல் காக்கிறேன்என் நாடு கில்டார்டன் கிராஸ்என் நாட்டு மக்கள் கில்டார்டரின் ஏழைகள்முன்பைவிட அவர்களை மகிழ்ச்சியாக இருக்க விடுங்கள்எந்த முடிவும் அவர்களுக்கு வேண்டியதைக் கொண்டுவரவே முடியாதுசட்டமோ கடமையோ என்னை போராடத் தூண்டவில்லை தனிமையின் தூண்டுதல் மேகங்களில்இந்த ஆரவாரத்தில் விமானம் ஓட்டுகிறேன்பொது மனிதரோ அல்லது கோபமான கூட்டமோஅனைத்தையும் மனதில் கொண்டு சமன்செய்தேன்வரவிருக்கும் ஆண்டுகள் மூச்சுத்திணறல் போலத் தோன்றியதுபல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மூச்சுச்திணறல் வாழ்க்கையுடன்மரணம் சமநிலை செய்கிறது. ‘எந்தவொரு புத்தகத்திலிருந்தும் நான் கற்றுக்கொள்வதற்கு முன்பு, ஒரு கலை அல்லது கைவினை பற்றிய யோசனையை, பண்டைய தொழில்நுட்பங்கள் மற்றும் மர்மங்களைக் கொண்ட ஒரு வழிபாட்டு யோசனையிலிருந்து பிரிக்கமுடியாது என்பதை நான் மக்களிடமிருந்து கற்றுக்கொண்டேன்’ என்கிறார்  பெரும்பாலும் இவரது கவிதைகள், பிரபலமான தருணங்கள், மற்றவர்களின் எண்ணங்கள் மற்றும் உணர்வுகளைப் பிரதிபலிப்பவையாக உள்ளன. நாட்டின் செனட் சபை உறுப்பினராகவும் அவர் இருமுறை பணியாற்றியுள்ளார். கலை, இலக்கியத்தின் பயன்பாடு மக்களிடம் கணிசமாக இருக்கவேண்டும் என்பதே அவரது விருப்பமாக இருந்துள்ளது.

முறிக்கப்படும் கொம்புகள்

முறிக்கப்படும் கொம்புகள்

உங்கள் அன்பு எப்போதும்நியாமானது உங்களுக்கு வீட்டுத்திரையில் பார்த்துநேரில் காண விரும்பி என் வீடு தேடி வருவீர்கள் இன்னும் அருகில் அருகில் பார்த்தாலும்உங்களுக்கு அலுப்புத் தட்டாது கூடாரம் அமைப்பீர்கள் ஒரே கூடாரம் உங்களுக்குஎப்போதுதான் போதும்? ஒன்று நூறாகும்போதுபோதும் என்று துதிக்கை உயர்த்துவேன் ஆனால் உங்களுக்குஎன் துதிக்கை கீழ்ப்படிதல்தானே பிடிக்கும் பயப்படாமல் என்னைப் புரிந்துகொள்ளலாம்ஆனால்அட்டகாசம் என்று செய்தித் தலைப்பிடுவீர்கள் தீயிட்டும் வெடி வைத்தும் துரத்தும்போதுஎனக்குக் கோபம் வராமல் இல்லை நானும் உங்களோடு பழகியவன்தானே? பின் திரும்பினால் என்னை விரட்டிஇன்னுமொருமுறை என் வீடு வரைநீங்கள் வரக்கூடும் இரண்டாம் முறை துதிக்கைக்கு நஞ்சேற்றிநீங்கள் கற்பிக்கும் நியாங்களைமறுக்கும் உரிமை கிடையாது எனக்கு ஆனால் உங்கள் அன்புநியாமானது உங்களுக்கு

காற்றில் சிக்கிய பட்டம்

காற்றில் சிக்கிய பட்டம்

கவிதை மொட்டை மாடியில்தண்ணீர் தொட்டியின் மேல்அரை நிக்கர் போட்ட ஒரு சிறுவன்காலை மாலைகை விரலுக்கிடையே நழுவும்மணலைப்போலநேரம் மறந்துவானில் பட்டத்தைப்பறக்கவிட்டுக்கொண்டேயிருக்கிறான்இருட்டு மற்றும் வெளிச்சமெனஇரண்டு காலத்திலும்ஒரே சந்தோசமாய் எழுத்துச் சுழற்சியில் சிக்கிய எனக்குஅவன் ஏதோ சொல்லிக்கொண்டிருக்கிறான்காலையில்மஞ்சள் வெயில் நிறைந்தஎன் வாசல் முற்றத்தில்பட்டத்தின் கருநிழல் மட்டும்செவ்வகக் குடை விரித்தாற்போலத் தெரிந்தது நிஜத்தைவிடப் பெரிதாக அசையும்ராட்சச நிழல் கண்டுகண்கள் லயத்தில் மின்னினபட்டத்தின் நிழல்ஒரே இடத்தில் படபடத்துச் சுழன்றுதடுமாறித் தவித்ததுநான் வெளியே சென்றபோதுஎன் நிழலையோபட்டத்தின் நிழலையோகூடப்பார்க்கவில்லைஎன் வீட்டு மீட்டர் பெட்டியில்சிக்கலான அமைப்பில்சிக்கிய பட்டத்தைஆர்வத்தோடு மீட்டுஅவனிடம் காற்றில் எறிந்தேன் அந்தப் பட்டத்தில்உலக வரைபடம் இருந்ததுஅதில் இருநாட்டு எல்லைப்பகுதிவரையப்பட்ட இடத்தில் கிழிந்ததுஆம்! பட்டம் கிழிந்ததுஅச்சிறுவன் தரையில் அமர்ந்துமுதன்முறையாகபறந்த பட்டத்தைத்தலைகுனிந்து பார்க்கிறான் பட்டத்தின்பறக்கும் எதிர்காலத்தைநிர்ணயிக்கும் நூல் கண்டுசெயலற்றுக் காணப்பட்டதுஎல்லையோரக் காவலளியின்காலணியைத் தைப்பது போலகுண்டு துளைத்த ராணுவ வீரனின்காயமடைந்த உடலின் பகுதியைமருத்துவர் தைப்பது போலஅந்தப் பட்டத்தைஊசிகொண்டு தைத்துக்கொண்டிருக்கிறான் அவனிடம் நான்ஒன்று சொல்ல வேண்டும்என் காலடியில்கிழிந்த இரு நாட்டின்எல்லைப்பகுதி கிடக்கிறதுஅவன் அதைவிட்டுஇரு நாட்டையும் இணைத்துத்தைத்துவிட்டான் போலும்

விழுதில்லா ஆலமரம்

விழுதில்லா ஆலமரம்

கவிதை வீழ்ந்து கிடந்தது தெருமூலையில்கிழிந்த கம்பளியில் கசங்கிய கவிதைகுலுங்கிய கம்பளியில் இருமலின் இசைஎழுதிய கவிஞர் எண்திசை ஓடினர்காற்றில் பக்கங்கள் பின்னால் புரண்டனகாலத்தின் கசடுகள் கவிதையாய்ச் சிரித்தனஞாலத்தின் தவறுகள் கிறுக்கலாய் விரிந்தன இருட்டிய பிறகுதான் இவர்களின் சொர்க்கம்முக்காடு மாக்களின் இடைகளின் ஏற்றம்சாக்காடுச் சல்லாபச் சரித்திரப் பதிவேற்றம்குலுங்கிய வளையினில் குதூகல ஆட்டம்குழைந்த மைதொட்டுக் கவிதையின் ஓட்டம்பல்மொழிக் கவிஞர் உரைபட்டி மன்றம்சிதைந்த கழிவாய்க் கம்பளியில் ஒடுக்கம் தேனிருந்த கூடுஅதுவோ தெருவினில் கிடக்குதுதேனுண்ட நரியெலாம் வேறெங்கோ சென்றதுமானென்று சொன்னதெலாம் மறுகி விலகிஓடியதுபழந்தின்ற வௌவால் பறந்தெங்கோ மறைந்ததுகறைநனைத்த அலையெலாம் திசைமாறிச் சென்றதுகாலத்தின் கோலத்தால் நூலதுவும் கிழிந்ததுகாமத்தின் குப்பையாகிக் கம்பளிக்குள் நடுங்குது எண்திசைப் பறவைகள் நாடிவந்த ஆலமரம்தன்னாசை எச்சமிட்டு ஆடிநின்ற இச்சைமரம்நிலவொளிக் கவிஞர் கற்பனை காத்தமரம்கணக்கின்றிக் காலிடை காமரசம் ஏற்றமரம்உடையின்றி இரவினில் உல்லாசம் விற்றமரம்எச்சங்கள் ஏற்றதனால் நாற்றத்தில் நலிந்தமரம்விழுதுகள் இல்லாததால் வீழ்ந்திட்ட ஆலமரம்

விதி

விதி

விதி ஓங்கி உயர்ந்த மரத்தில்இலைகளும் கிளைகளும்பறவைக் கூடும் பான்பராக் கறையும்பட்டைமேல் படர்ந்திருந்தன இலைகள் விழ விழமரம் தளர்ந்துமனநோயாளி ஆகவில்லைஅவ்வப்போதுபருவநிலை மாற்றத்தில்சில நாள் நிர்வாணமும்பல நாள்வழிந்தொழுகும் மேகமுமாய்அனிச்சை நிகழ்வாகின சில சமயம்கிளைகளில் சுளுக்கிருக்கும்அதற்கு யாரோ எறிந்தகுப்பை மூட்டையும்காரணமாய் இருக்கலாம்கால தாமத வானிலை அறிக்கையால்பல நேரம் காற்றும் கற்பழிக்கும் பூச்சிகளும் எறும்புகளும்குகையாய் மாற்றிக்கொள்ளும்வருடத்தில் என்றேனும்நேரமிருப்பின்மழையும் கொஞ்சம் முத்தமிடும்தொடர்ந்து அடிக்கடி பார்த்ததனால்இவை சலிப்பு தந்து தித்திக்கும் அவ்வப்போதுஉடலில் வலியும்முதுகுத்தண்டில் விரிசலும்என்றோ விழுந்த மின்னலில்உச்சந்தலைக் கருகலும்இவை ஏன் எனக்கு மட்டும் எனகேட்கத் தோன்றும் விழும் இலைக்கும்முறியும் தண்டுக்கும்விதிகள் ஏதுமில்லைஇயற்கையிலனைத்தும்மாற்றமெடுப்பவையே விதியின் ஓட்டத்தில் நிகழ்ந்தவைஎல்லாம் இயற்கையேகாய்ந்து விழுந்த இலைக்காகமரம் மரிக்கவில்லை ஓங்கிக் குட்டிய மின்னலுக்கும்நெடுக வளர்ந்த மரத்திற்கும்முன்பகை ஏதுமில்லைநிகழ்வுகள் நிச்சயமாயின்எவர் மீதும் பழி வீண்

மடிக்கனம்

மடிக்கனம்

மடிக்கனம் – கவிதை புழுதியை எழுதியெழுதிக்களைத்த பகல் கூடடைந்திருக்கவிழித்திருக்கிறதுநெடுஞ்சாலையின் இரவுவாடை மையொழுகும் விழிபொய்யொழுகும் இதழ்திட்டுத் திட்டாககோகுல் சாண்டலொழுகும் கன்னக்கதுப்பு புருவஞ்சுருக்கிக் கவனங்குவித்துபழக்கப்பட்ட லாரிக்காரனுக்காய்விழிநோக நிற்குமந்தக் கனகாவின்ஈரமொழுகும் ரவிக்கை வாடைக்குஇரவைக்கிழித்து ஊளையிடுகிறதுமுட்புதருக்குள் குட்டிகளைப் பதுக்கி வெளியேறும் மடிசரிந்த நாயொன்று குப்பையோரம் கிடந்த கொட்டாங்குச்சியில்தன் பாரம் அத்தனையும் இறக்கி வைத்துவிட்டுமேலும் கொஞ்சம் பவுடர் பூசிக்கொள்கிறாள் கனகா மடிகனத்த நெடுஞ்சாலைக் கிளிகளின் யாமம்விமோசனமில்லாப் பெருஞ்சாபம்

கருணாநிதி ஏன் கலைஞர் ஆனார்?

கருணாநிதி ஏன் கலைஞர் ஆனார்?

கலைஞர் 100 – சிறப்புப் பதிவு தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் கலை உலகிலிருந்து பிரிக்க முடியாத பெயர் கலைஞர். முத்துவேல் கருணாநிதியாகத் தோன்றி, மறைவுக்குப் பின்னும் கலைஞராக வாழ்ந்துகொண்டிருக்கும் அவரது நூறாவது பிறந்தநாள் இன்று. இந்த நாளில் அவருடைய எழுத்தாற்றல் பற்றி நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும். தமிழ் எழுத்துலக வரலாற்றில் கலைஞரைத் தவிர்த்துவிட்டு யாராலும் வரலாறு எழுதவியலாது. அவருடைய படைப்புகள் தமிழ் இலக்கியத்தில் இன்றியமையாதவையாக நிலைத்திருக்கின்றன. தனது தூக்குமேடை நாடகம் அரங்கேற்றத்தின் முடிவில் நடிகவேள் எம்.ஆர். இராதா அவர்களால் கருணாநிதியைப் பாராட்டி வழங்கப்பட்ட பட்டம்தான் கலைஞர். அன்று முதல் இன்றுவரை மட்டுமல்ல, தமிழ்கூறும் உலகம் இருக்கும்வரை கலைஞர் என்று உச்சரித்தால் அது கருணாநிதியை அழைப்பதாகவே இருக்கும். அவர் தனது வாழ்நாள் முழுவது தமிழ் இலக்கியத்துக்காக பணியாற்றினார் என்று கூறினால் அது மிகையில்லை. தமிழ்நாட்டு அரசியல் உலகில் எந்த அளவுக்கு அவர் பணியாற்றினாரோ அதையும் விஞ்சும் அளவுக்கு தமிழிலக்கியத்திற்கும் பணியாற்றினார் என்பதும் உண்மையே. அவருடைய மாணவப்பருவத்திலேயே தமிழ் இலக்கியத்தின்மீது ஆர்வம் கொண்டதின் காரணமாக ‘மாணவ நேசன்’ எனும் கையெழுத்துப் பத்திரிகையைத் தொடங்கி அதில் அவருடைய எண்ணங்களைப் படைத்து மாணவர்கள் மத்தியில் எழுச்சியை உருவாக்க முயன்றிருக்கிறார். பத்திரிகைப் பணிகள் 1942இல் முரசொலி எனும் துண்டு பிரசுரத்தை எழுதி வெளியிட்டுவந்தார்.  அவ்வெளியீடு சில மாதங்களிலேயே நின்றுபோனது. 1946இல் மீண்டும் முயற்சித்து அதை மாத இதழாக வெளியிட்டார். 1948இல் மீண்டும் அது நின்றுபோனது. கருணாநிதி அவர்கள் தனது முயற்சியைக் கைவிடாமல் 1953இல் மீண்டும் முரசொலியை மாத இதழாகக் கொண்டுவந்தார். முரசொலியின் மூலம் தனது கருத்துகளை, தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளை மிகத்தெளிவாக மக்களுக்குக் கொண்டு சேர்த்தார். முரசொலியில் அவர் எழுதிய கட்டுரைகள் மாணவர்களும் இளைஞர்களும் திராவிடர் இயக்கத்தில் இணைந்து பணியாற்ற உந்துதலாக இருந்திருக்கின்றன. 1960இல் மாத இதழாக இருந்த முரசொலி, நாளிதழாக வெளிவரக் காரணமாயிருந்தவரும் அவரே. அன்று முதல் இன்று வரை திமுகவின் அதிகாரப்பூர்வ இதழாக முரசொலி வெளிவந்துகொண்டிருக்கிறது. திரையுலகப் பயணம் கலைஞரின் எழுத்தில் வெளிவந்த திரைப்படங்களும் ஏராளம். சுமார் 75 திரைப்படங்களுக்குக் கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றோடு சில திரைப்படங்களில் பாடல்களையும் எழுதியிருக்கிறார். குறிப்பாக 1952இல் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடிப்பில் பராசக்தி திரைப்படம் வெளியானது. அந்தப் படத்தில் அவர் எழுதிய வசனங்கள் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகின. தனது 20ஆம் வயதிலேயே ஜூபிடர் பிக்சர்ஸ் எனும் படக் கம்பெனியில் அவர் பணியாற்றியபோது அவருடைய வசனத்தில் வெளியான முதல் திரைக் காவியம் ராஜகுமாரி. திரும்பிப்பார், மனோகரா போன்ற திரைப்படங்கள் அவரைத் திரையுலகில் ஜொலிக்க வைத்தன. நாடக உலகில் கலைஞர் பல்வேறு நாடகங்களுக்கும் கதை, வசனம் எழுதி அவற்றில் அதில் நடித்தும் இருக்கிறார். 1947 தொடங்கி 1979 வரையிலும் சுமார் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட நாடகங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார். அவற்றில் மணிமகுடம், மகான் பெற்ற மகன், மந்திரி குமாரி, தூக்குமேடை ஆகிய சில நாடகங்கள் அவரை நாடக்கலையிலும் வல்லுநராகப் பார்க்க வைத்தன. இலக்கிய உலகில் நீங்கா இடம் புதிய கோணங்களில் புதினங்களைப் படைப்பதிலும் கருணாநிதி கெட்டிக்காரராகவே இருந்திருக்கிறார். அரும்பு, இரத்தக் கண்ணீர், சுருளி மலை, நடுத்தெரு நாராயணி, புதையல், பெரிய இடத்துப் பெண், ஒரே இரத்தம் ஆகிய புதினங்கள் மிகச்சிறப்புப் பெற்றவை. கலைஞரின் சிறுகதைகள், பெரியாரின் கொள்கைகளையும் அண்ணாவின் அரசியல் மற்றும் கட்சித் தலைமைப் பண்பையும் விவரிக்கும் படைப்பாகவே அமையப்பெற்றிருப்பது அவருடைய கொள்கைப் பற்றையும் அரசியல் தெளிவையும் நமக்குச் சொல்வதாகவே காணப்படுகின்றன. பாலைவன ரோஜா, விஷம் இனிது, வேணியின் காதலன், நளாயினி, நுனிக் கரும்பு ஆகிய சிறுகதைகள் படிக்கும்போதே நம்மை மெய் சிலிர்க்கச் செய்யும். நாற்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை அவருடைய படைப்பில் வெளியாகியுள்ளன. அவருடைய சிறுகதைத் தொகுப்புகளில் கண்ணடக்கம், ஒரு மரம் பூத்தது, கிழவனின் கனவு, சங்கிலிச் சாமியார் ஆகிய அனைத்துமே கொள்கைக் களஞ்சியமாக, பெட்டகமாக வைத்துக் கொண்டாடப்படவேண்டிய தொகுப்புகள். அவருடைய இலக்கியப் படைப்புகள் இத்தோடு நின்றுவிடவில்லை. கலைஞரின் கவிதைகள், திரையிசைப் பாடல்கள் ஆகியவற்றோடு திருக்குறள் உரை, சங்கத் தமிழ், தொல்காப்பியப் பூங்கா, குரளோவியம், சிலப்பதிகாரம், தாய், பூம்புகார் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட தமிழ் இலக்கியப் படைப்புகளையும் தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கியிருக்கிறார். தமது வாழ்க்கையைத் தன்வரலாறாக எழுதி நெஞ்சுக்கு நீதி என்ற நூலாக வெளியிட்டுள்ளார். 4000க்கும் கூடுதலான பக்கங்களைக் கொண்ட நெஞ்சுக்கு நீதி 6 பாகங்களாக வெளிவந்து பல்லாயிரக்கணக்கில் விற்னையாகியுள்ளது. கலைஞரின் சொற்பொழிவுகள், பத்திரிகைப் பேட்டிகள் மட்டுமே 5 தொகுப்புகளாக உள்ளன என்பதை மெச்சாமல் இருக்கமுடியுமா!? கட்டுரைத் தொகுப்புகள் 30 தலைப்புகளிலும் சிறு குறிப்புகள் 20 தலைப்புகளிலும் வெளிவந்துள்ளன. கலைஞர் கடிதங்கள் 12 தொகுப்புகள், குடியரசு கட்டுரைகள், கரிகாலன் பதில்கள் என்று அவரது எழுத்துகள் எங்கெங்கும் பரவிக்கிடக்கின்றன. ஏராளமான பயணக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். 1957 முதல் 2018 வரை கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆற்றிய சட்டமன்ற உரைகளின் தொகுப்புகள் 12 தொகுதிகளாக வெளிவந்திருக்கின்றன. அவருடைய மொத்தப் படைப்புகளையும் வாசித்து முடிக்க நமக்கு ஒரு வாழ்நாள் போதாது என்றால் மிகையில்லை. கலைஞரின் இலக்கியப் பங்களிப்பைப் போற்றும் விதமாக வங்கக் கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் முயற்சியில் தற்போதைய திமுக தலைமையிலான அரசு ஈடுபட்டுவருகிறது. ஆனால் கலைஞரின் படைப்புலகப் பங்களிப்புகளை இன்றைய திமுகவினர் பெரும்பாலானவர்கள் சிறிதளவுகூட வாசித்திருக்க மாட்டார்கள் என்பதும் உண்மையே. கலைஞரின் நூற்றாண்டு தொடங்கும் இந்த வேளையில், அவருடைய படைப்புகள் பொதுமக்களைப் பரவாலாகச் சென்று சேர்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுப்பதே அவருடைய இலக்கியப் பங்களிப்பை நிலை நிறுத்த உதவும். இல்லையேல் அது வெறும் அடையாளமாகவே நின்றுவிடும்.   முகப்புப் படம்: இணையத்திலிருந்து

‘மல்’யுத்தம்

‘மல்’யுத்தம்

‘மல்’யுத்தம் மல்லுகட்டிமல்லுகட்டிபதக்கம் வாங்கினார்கள்தேசம் கொடி அசைத்துக்குதூகலித்ததுபிரதமரோடு படம் எடுத்துமகிழ்ந்துகொண்டார்கள் மல்லுகட்டிமல்லுகட்டிகோரிக்கை வைத்தார்கள்மல்லுகட்டிமல்லுகட்டிமறுக்கிறது அதிகாரம் மல்லுகட்டிவாங்கிவந்த பதக்கங்கள்புறக்கணிப்போம் என்றாலும்மல்லுகட்டிப் பார்க்கிறதுஅதிகாரம் பல்லைக்காட்டிச் சிரிக்கிறதுசெங்கோல்

காட்டுக்குப் புலிகள்; நாட்டுக்குக் கவிஞர்கள்

காட்டுக்குப் புலிகள்; நாட்டுக்குக் கவிஞர்கள்

உலகக் கவிதை நாள் /உலக வன நாள் / மார்ச் 21 புலிகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தைப் பொதுமக்களுக்கு உணர்த்த ஒவ்வொரு வருடமும் ஜூலை 29 ஆம் தேதியைப் ‘புலிகள் தினமா’கக் கொண்டாடுகிறது உலகம். மற்ற விலங்குகளுக்கு இல்லாத முக்கியத்துவம் புலிகளுக்கு மட்டும் ஏன்? ஏனெனில் உலகச் சூழலியல் வட்டத்தின் மையமாகப் புலிகள் இருக்கின்றன. ஒரு காட்டில் புலிகள் இருந்தால் அவற்றுக்கு உணவான மானும் கால்நடைகளும் அங்கு இருக்கவேண்டும். மான் இருந்தால் மானுக்கு உணவான புல் மற்றும் தாவரங்கள் அங்கு இருக்க வேண்டும். தாவரங்கள் வளர வேண்டுமென்றால் அங்கு நீர்நிலைகள் இருக்க வேண்டும். ஒரு காட்டில் நீர்நிலைகள் இருக்கின்றன என்றால் அங்கு தொடர்ந்து மழை பொழிகிறது என்று பொருள். ஓர் இடத்தில் தொடர்ந்து மழை பொழிகிறது என்றால் அங்கு வனச் சூழலும் , வானலாவிய உயர்ந்த மலைகளும் இருக்கின்றன என்று பொருள். இப்படி வளமான ஒரு சூழலுக்கு அடுத்தாற் போல்தான்அதைச் சார்ந்து வாழும் ஊர்களும் இருக்க முடியும். இந்த உலகில் இருக்கிற ஒவ்வொரு மனிதரும் ஏன் ஒவ்வொரு உயிரும் அவற்றுக்குத் தேவையான உணவு, உடை ,உறைவிடம் ஆகியவற்றோடு நிம்மதியோடு வாழ இந்த சூழலியல் சங்கிலி சமநிலையோடு இருந்தாக வேண்டியது அவசியம். அதைப் பாதுகாக்கிற மையப் புள்ளியாக புலிகள் இருப்பதனால்தான் புலிகளுக்கு முக்கியத்துவமும் புலிகள் தினக் கொண்டாட்டமும். காட்டுக்குப் புலிகள் எப்படி அவசியமோ அப்படித்தான் நாட்டுக்குக் கவிஞர்களும். கவிஞர்கள் இயற்கையின் அழகுகளைப் பாடுகிறவர்களாகவும், சமுதாயச் சமநிலையை நேசிப்பவர்களாகவும் இருக்கிறார்கள். ஓடும் நதிகளும், உயர்ந்த மலைகளும், பூத்துக் குலுங்கும் செடிகொடிகளும், வான் நோக்கி வளரும் மரங்களும், துள்ளி ஓடும் மான்களும், துதிக்கை உயர்த்தும் யானைகளும், கர்ஜனை புரியும் சிங்கங்களும்,பாடும் பறவைகளும், பட்டாம்பூச்சிகளும், தட்டான்களும், புல் பூண்டுகளும், புழு பூச்சிகளும் அவ்வளவு ஏன் சிறு கூழாங்கற்கள் கூடஅவர்கள் கண்களுக்கு அற்புதங்களாகவும் அதிசயங்களாகவும் தெரிகின்றன. அவற்றைத் தங்கள் கவிதைகளில் அழகியலோடு பாடி வைக்கிறார்கள். மேலும் அவர்கள் உலகின் ஆதாரமான அறத்தைப் பாடுகிறார்கள். நீதியைத் தங்கள் கவிதைகளில் போற்றி வழிபடுகிறார்கள். அநீதிக்கு எதிரான குரலை எழுப்புகிறார்கள். கனிம வளங்களுக்காக ஒரு மலை உடைக்கப்படுகிறது என்றால், மணல் கொள்ளைக்காகஒரு நதியின் சுரண்டப்படுகிறது என்றால், மரங்களுக்காக ஒரு வனம் மொட்டையடிக்கப்படுகிறது என்றால் அவற்றுக்கு எதிராகக் குரல் எழுப்புகிற முதல் மனிதனாகக் கவிஞன் இருக்கிறான். அவற்றைத் தன் சொந்தச் சொத்தாகவே அவன் நினைக்கிறான். அது மட்டுமல்ல..சமுதாயத்தில் புறக்கணிக்கப்படுகிறவர்களின் குரலாக அவன் இருக்கிறான். கண்ணீரைத் தவிர வேறு எந்த ஆயுதத்தையும் ஏந்த முடியாதவர்களுக்காகத் தன் சொற்களை ஆயுதமாக ஏந்துகிறான். விவசாயம் அழிக்கப்படும்போதுஉழவர்களின் குரலாக மட்டுமல்ல…. எதிர்காலச் சந்ததியினருக்காக அவன் அறச்சீற்றம் கொள்கிறான். பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள் மலிந்து வரும் சூழலில் அவர்களின் சார்பாக அவன் கொதித்தெழுகிறான். வருங்காலத் தலைமுறைகளுக்காக வாதாடும் வழக்கறிஞன் அவன். சூரியனுக்குக் கீழே இருக்கும் ஒவ்வொன்றைப் பற்றியும் சிந்திக்கிற சிந்தனையாளன் அவன். அவை ஒன்றோடு ஒன்று கொண்டிருக்கும் இயைபை உணர்ந்து அவை ஒவ்வொன்றையும் பாதுகாக்கும் காவலனாகத் தன்னைத் தானே நியமித்துக் கொள்கிறான். அவை மீறப்படும்போது நீதிபதியாகவும் மாறி வாழ்வியல் சட்டங்களை வகுக்கிறான். அவை அற நூல்களாகி காலத்தின் கல்வெட்டுகளாக நிலைக்கின்றன. ஆகவேதான் “பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேண்டும்” என்றான் நம் பாட்டன் மகாகவி பாரதியும். ஒரு கவிஞன் எழுதும் அழகியல் பாடல்கள் அவற்றை வாசிப்பவர்களின் இதயங்களில் அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டுகின்றன. ஆகவேதான் கவிஞன் வாழ்கின்ற நாடுவளமான பண்பட்ட சமுதாயமாக போற்றப்படுகிறது. ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக கவிதைப் பாரம்பரியத்துடன் தொடரும் ஒரு சமுதாயமாக தமிழகம் இருந்து வருகிறது. அதுதான் அதன் வரலாற்றுப் பெருமை. அந்தச் சங்கிலி இன்றும் தொடர்கிறது. ஆங்கில வழிக் கல்வி எனும் மொழிக் கொலையினையும் தாண்டி இந்தச் சங்கிலி உயிர்ப்புடன் தொடர்கிறது. ஆரம்ப நிலைகளில் கவிதை எழுதும் ஒரு கவிஞன் கூட மொழியைப் பாதுகாக்கிறவன் என்ற முறையில் போற்றப்பட வேண்டியவனே. ‘உலகக் கவிதை நாள்’ கொண்டாடப்படும் (மார்ச் 21) இன்று ‘உலக வன நாளா’கவும் கொண்டாடப்படுவது எவ்வளவு பொருத்தம்! worldpoetryday internatonaldayofforests